நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை உடனே மூடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி இப்போது தான் வெளியாகியிருக்கிறது. சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டுமே கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்திருக்கின்றன என்பது தான் அந்த செய்தியாகும்.

இந்திய அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழ்நாடு தான் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த 2003 ஆம் ஆண்டில் 9275 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகரித்து 16,175 ஆக உயர்ந்திருக்கிறது. இதே காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை 52,508 என்ற அளவிலிருந்து 67,757 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

2012 ஆம் ஆண்டில் 15,072 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில் 14,504 ஆக குறைந்திருக்கிறது. விபத்துக்களின் எண்ணிக்கையும் 67,757 என்ற அளவில் இருந்து 66,238 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 700 பேர் வீதம் அதிகரித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 612 குறைந்திருக்கிறது. அதேபோல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 1500 வீதம் அதிகரித்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் 1519 குறைந்துள்ளது. அதாவது 2013 ஆம் ஆண்டில் சுமார் 3,000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. விபத்துத் தடுப்பில் இது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.

தமிழ்நாட்டில் சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கான முதல் காரணம் நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் தான். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தான் தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே 2003 ஆம் ஆண்டில் தான் தமிழகத்தில் மதுக்கடைகளை எல்லாம் அரசுடைமையாக்கிய அ.தி.மு.க. அரசு, சாலை ஓரங்களில் அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்தது. இதிலிருந்தே சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கு காரணம் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அதேபோல், சாலை விபத்துக்கள் குறைந்ததற்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. நெடுஞ்சாலை ஓரங்களிலும், நெடுஞ்சாலைகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளை மூட ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மூட ஆணையிட்டது.

அதன்படி சில கடைகளை மூடிய அரசு பெரும்பாலானகடைகளை மூட வில்லை. நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. 100 கடைகள் மூடப்பட்டதாலேயே, 3000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளூம் தடுக்கப்பட்ட நிலையில், சாலையோர மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாட்டை சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க அரசால் முடியும். முழு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மதுவின் மற்ற தீமைகளையும் அடியோடு ஒழித்து விட முடியும்.

இதை உணர்ந்து, தமிழ்நாட்டில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும்; அடுத்த கட்டமாக தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்