பொறியியல் மாணவி தற்கொலையில் நடவடிக்கை கோரி சாலை மறியல்- மாணவியைத் திட்டியதாக பேராசிரியர் மீது வழக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள், மாணவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனர்.

மதகடிப்பட்டில் தனியார் பொறியியல் கல்லூரி (மணக்குள விநாயகர் ) உள்ளது. இங்கு 2-ம் ஆண்டு பயிலும் மாணவி வினோதினி திங்கள்கிழமை கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர், வினோதினி உறவினர்கள் உள்ளிட்டோர் வில்லியனூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே செவ்வாய்க்கிழமை மறியல் செய்தனர்.

வினோதினி மரணம் தொடர்பாகக் காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.

இதையடுத்து வில்லியனூர் தாசில்தார் சுரேஷ் ராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்கொலை சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் சம்பவத்தால் விழுப்புரம் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மறியலின் போது தனியார் கல்லூரி பேருந்துகளையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் புதுவையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து ஒரு நாள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

மாணவியின் உறவினர்கள் தரப்பில் புகார் தரப்பட்டது. அதை விசாரித்தோம். சரியாகப் படிப்பதில்லை என்று மற்றவர்கள் முன்பு மாணவி வினோதினியைப் பேராசிரியர்கள் திட்டியதாகப் புகார் தரப்பட்டது. வினோதினிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேராசிரியர் மீது வழக்கு

அதன் அடிப்படையில் பேராசிரியர் ஒருவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக 306-வது பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் அடுத்து புகார்கள் பல பெறப்பட்டன. இதை யடுத்து விசாரணை செய்ய தாசில்தார் சவுமியா நியமிக்கப் பட்டுள்ளார். அவரது அறிக்கை அடிப்படையிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்று காவல்துறை யினர் தெரிவித்தனர்.கல்லூரி வளாகத்தில் தாசில்தார் சவுமியா செவ்வாய்க்கிழமை முழு அளவில் விசாரணை மேற் கொண்டுள்ளதாக வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE