பறக்கும் சாலைத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி- தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க நீதிபதிகள் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்ட கட்டுமானப் பணிகளுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.1,800 கோடி மதிப்பிலான சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு பிரதமர்மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். 19 கி.மீ. தொலைவிலான இந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. எனினும் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு 1.2.2012 அன்று தமிழக அரசின் பொதுப்பணித் துறை உத்தரவிட்டது. பறக்கும் சாலைத் திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளின்படி புதிதாக அனுமதி பெற வேண்டும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம்

தேதி மற்றொரு உத்தரவை பொதுப்பணித் துறை பிறப்பித்தது. இந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், பறக்கும் சாலைத் திட்டப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

தற்போது துறைமுகம் – மதுரவாயல் இடையே பயணம் செய்ய ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை ஆகிறது. ஆனால் பறக்கும் சாலைத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் வெறும் 20 நிமிடங்களுக்குள் இந்த தொலைவைக் கடந்து விட முடியும். இதனால் பயண நேரம் மிச்சமாவதோடு, எரிபொருளும் பெருமளவில் மிச்சமாகும். சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறையும். மேலும், இந்த திட்டத்தால் தொழில் மற்றும் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சி பெறும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதேபோல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உத்தரவிடக் கோரி இ.மனோகரன், எஸ்.பாலாஜி ஆகியோர் பொது நல மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், பி.தேவதாஸ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, விதிமுறைகளை மீறியும், கூவம் ஆற்றின் நீரோட்டத்தைத் தடுக்கும் வகையிலும் ஆற்றின் உள்ளே தூண்களை அமைத்துள்ளனர். இதன் காரணமாக பருவமழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று வாதிட்டார். மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன் இதனை மறுத்தார். கூவம் ஆற்றில் அமைக்கப்படும் தூண்களால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனக் கூறுவது சரியல்ல. கூவம் ஆற்றில் அதிகபட்சம் 25 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் செல்ல இயலும் என்பதை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று வாதம் செய்தார்.

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத், அரசியல் காரணங்களுக்காகவே இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்து வியாழக்கிழமை தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பு விவரம்

ஏற்கெனவே கூவம் ஆற்றின் குறுக்கே நேப்பியர் பாலம், பெரியார் பாலம், கல்லூரி சாலை பாலம், அமைந்தகரை பாலம் என 11 பாலங்கள் உள்ளன. எனினும் அந்தப் பாலங்கள் கூவம் ஆற்றின் நீரோட்டத்தைத் தடுப்பதில்லை. பருவமழை தொடங்கும் முன்னர் முறையாக தூர் வாராததே வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட காரணங்களாக உள்ளன.

துறைமுகம் – மதுரவாயல் சாலைத் திட்டத்தால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்கும் வகையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்கிறோம். இந்த திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கூவம் ஆற்றில் அதிகபட்சம் 25 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பறக்கும் சாலைத் திட்ட கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவதற்கு அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்