விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை: முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசு விளக்கம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் கருணாநிதி கற்பனை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடுதலைப் புலிகள் குறித்த குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவரது அறிவுரையின்படி, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் விடுதலைப் புலிகள் மீது மாசு கற்பிப்பதைப் போலவும், அவர்களின் முதுகிலே குத்தி அவமானப்படுத்துவதைப் போலவும், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையிலும், தமிழக விவசாயிகளின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றவர் முதல்வர் ஜெயலலிதாவே.

2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட ஈவு இரக்கமற்ற தமிழ் இனப் படுகொலையை கண்டித்தும், அதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்றும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையிலும், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையிலும், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதார தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; இலங்கை நாட்டினை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அரசு மறுப்பு

ஈழத் தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்' குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திடவும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்; சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி, இலங்கை வாழ் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் பாராட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கருணாநிதி மக்களை குழப்பும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி தனது அறிக்கையில், "முல்லை பெரியாறு பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பினை வழங்கிட ஒப்புக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்திட முன் வர வேண்டும்.

இந்தப் பிரச்சனையில் தமிழக அரசும் மத்திய அரசிடம் முறையாக எடுத்துச் சொல்லி, தேவையான அழுத்தம் தந்து, மத்திய பாதுகாப்புக் கோருவதன் அவசியத்தை நேரிலே வலியுறுத்தி இருக்க வேண்டும்" என்றெல்லாம் அறிவுரை வழங்கியுள்ளார்.

முல்லை பெரியாறு அணை வளாகத்தில் ஒரு சில கேரள அரசியல் கட்சிகளின் தூண்டுதலின் பேரில், ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டு, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வாயிற்கதவினை சேதப்படுத்தியதாக 3.12.2011 அன்று நாளேடுகளில் செய்திகள் வெளிவந்தன.

இதனைத் தொடர்ந்து, 4.12.2011 அன்று ஒரு சிலர் வல்லக்கடவு பகுதி வழியாக முல்லை பெரியாறு அணையிலிருந்து நீரை வெளியேற்றவும் மற்றும் அணைக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன.

இவ்வாறு செய்திகள் வந்ததை அடுத்து, முதல்வர் ஜெயலலிதா, கடந்த 4.12.2011 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பிற்காக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினை அனுப்பி வைக்கக் கேட்டுக் கொண்டார்.

முல்லை பெரியாறு அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என ஆணை பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு 5.12.2011 அன்று உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை தாக்கல் செய்தது.

தடையாக இருப்பது கருணாநிதியா?

மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், 14.12.2011 நாளிட்ட அலுவலகக் குறிப்பாணையில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை உள்ளிட்ட மத்தியப் படைகளை அணையின் பாதுகாப்பிற்காக நீதிமன்ற ஆணையின் அடிப்படையிலோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பெறப்படும் கோரிக்கையின் அடிப்படையிலோ மட்டுமே அனுப்பி வைக்க முடியுமென்று தெரிவித்தது.

கேரள அரசு, அணை பாதுகாப்பிற்காகப் போதுமான காவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும், அணையைப் பாதுகாப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொள்ளும் எனவும் உச்சநீதி மன்றத்திற்கு உறுதியளித்தது.

இந்த உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டு உச்ச நீதிமன்றம் இந்த இடைக்கால மனு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறதென 15.12.2011 அன்று ஆணை பிறப்பித்தது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக அங்கம் வகித்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் பாதுகாப்பாக இருந்து அந்த ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து வந்த திமுக மத்திய அரசை இது குறித்து ஏன் வலியுறுத்தவில்லை? அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டாம் என திமுக தான் மத்திய காங்கிரஸ் அரசுக்கு அறிவுரை வழங்கியதா? என்பதை கருணாநிதி தான் விளக்க வேண்டும்.

அப்போதைய பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், கருணாநிதியின் ஆலோசனையின் படியே தாம் செயல்படுவதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தாரே!

அப்படியெனில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையை மத்திய அரசு அனுப்புவதற்கு தடையாக இருந்தது கருணாநிதியும், திமுகவும் தானா?

17.11.2014 அன்று கேரள சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோருடன் முன்னறிவிப்பு ஏதுமின்றி தமிழக அலுவலர்களை புறம் தள்ளிவிட்டு முல்லை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றார்.

இது குறித்து கேரள காவலர்களுக்கு தமிழ்நாடு பொறியாளர்கள் தெரிவித்த போதிலும், அவர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க இயலவில்லை.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசு 18.11.2014 நாளிட்ட கடிதத்தின் வாயிலாக அணையைப் பாதுகாக்கும் பொருட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்பி வைக்க மத்திய அரசைக் கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து, 19.11.2014 அன்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஓர் இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது.

இந்த மனுவில் அணை மற்றும் அதனைச் சார்ந்த கட்டுமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மத்திய அரசு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினை அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் 3.7.2015 அன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உச்ச நீதிமன்றம் பதிவு செய்துகொள்ள வேண்டி, கூடுதல் ஆணை உறுதி ஆவணம் ஒன்றை 1.7.2015 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது.

இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் 12.5.2015 அன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் கூடுதல் ஆணை உறுதி ஆவணத்தில் தமிழ்நாடு அரசால் 19.11.2014 அன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு 17.4.2015 அன்று கேரள அரசால் தாக்கல் செய்யப்பட்ட எதிர் உறுதி ஆவணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளை உச்ச நீதிமன்றம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அந்த மனுவில் என்று தான் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, 12.5.2015 அன்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 முதல் 18 வரை முல்லை பெரியாறு அணை மற்றும் பெரியாறு நீர்மின் நிலையம் ஆகியவற்றில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு மேற்கொண்ட ஆய்வின் படி கேரள காவல் துறைக்கு பதிலாக மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை மூலம் முல்லை பெரியாறு அணை பாதுகாக்கப்படவேண்டும்.

முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை

முல்லை பெரியாறு அணை மற்றும் இதர முக்கிய நிர்மாணங்களின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை போன்ற தொழிலியல் பாதுகாப்பு படை ஈடுபடுத்தப்பட வேண்டும் என்ற மத்திய நுண்ணறிவுப் பிரிவின் அறிக்கையை உள்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்றும் மத்திய அரசு உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு படையை முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்க தமிழக தலைமைச் செயலாளர் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்து தலைமைச் செயலாளரின் கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தது போல் விடுதலைப் புலிகள் மீது எந்தவித குற்றச்சாட்டையும் தமிழக அரசு சுமத்தவில்லை. எனினும், ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வந்தவுடன், முதல்வர் இது பற்றி என்னிடமும், அரசு உயரதிகாரிகளிடமும் விவாதித்தார்.

அப்போது மத்திய நுண்ணறிவு பிரிவின் ஆய்வு அறிக்கையின் நகலை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது என்பது முதல்வரிடம் எடுத்துச் சொல்லப்பட்டது. அந்த அறிக்கையில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு முல்லை பெரியாறு அணை மற்றும் முக்கிய நிர்மாணங்கள் ஆகியவற்றுக்கு நக்சலைட்டுகள் போன்ற அமைப்புகளால் உள்ள அச்சுறுத்தல்கள் பற்றி தெரிவித்துள்ளதோடு பத்தி 4.4-ல் இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட பின் மீதமுள்ள உறுப்பினர்கள் ஒன்று திரள முயற்சித்துள்ளனர் என்றும் அவர்கள் இறுதிப் போரில் தமிழர்களுக்கு இந்தியா உதவி செய்யாததால், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

உடனடியாக மனு தாக்கல் செய்யப்படும்

மேலும், முக்கிய நிர்மாணங்களுக்கு இவர்களிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பாக எதுவும் இல்லை என்றாலும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதிலும் கூட விடுதலைப் புலிகள் முல்லை பெரியாறு அணைக்கு சேதம் விளைவிப்பார்கள் என்று குறிப்பிட்டு மத்திய நுண்ணறிவுப் பிரிவு தெரிவிக்கவில்லை.

இருப்பினும், இது குறித்து தேவையற்ற விவாதமும், மனச் கசப்பும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் மீது வீண் பழியும் சுமத்தப்படுவதால், தமிழக அரசு, ஒரு கூடுதல் மனுவினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூடுதல் மனுவில் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அச்சுறுத்தல் பற்றி அதனுடைய அறிக்கையில் பத்தி 4-ல் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில், 4.1 முதல் 4.3 மற்றும், 4.5 முதல் 4.8 வரையிலான மதிப்பீடுகள் மட்டும் தமிழக அரசுக்கு ஏற்புடையது என்றும், விடுதலைப் புலிகள் குறித்து பத்தி 4.4-ல் மத்திய நுண்ணறிவுப் பிரிவின் குறிப்பை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்ற விவரத்தை இந்தக் கூடுதல் மனுவில் குறிப்பிட்டு தாக்கல் செய்யும்படி முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்கள். அவரது அறிவுரையின்படி, உச்ச நீதிமன்றத்தில் இதற்கான மனு உடனடியாக தாக்கல் செய்யப்படும்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்