உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் மூடப்பட்டு அதற்கு மாற்றாக திறக்கப்படும் அரசு மதுபானக் கடைகளுக்கு எதிராக நடைபெறும் தொடர் போராட்டங்கள் மூலம் டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதில் சிலர் தற்கொலை அளவுக்கு கூட சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இப்படி பாதிக்கப்படும் ஊழியர்கள், 'மதுவிற்றது போதும்; மாற்றுப்பணி கொடு!' என்ற கோஷத்துடன் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
டாஸ்மாக் மூலம் சுமார் 6500க்கும் மேற்பட்ட அரசு மதுபானக் கடைகள் தமிழகத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த தேர்தலின் போது மதுபானக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்ததன் பலனாய் கடந்த ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற பின்பு சுமார் 1000 மதுபானக் கடைகள் மூடப்பட்டன. இப்படி மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த மேற்பார்வையாளர், விற்பனையாளர், சப்ளையர் (ஒரு கடைக்கு 4 பேர் வீதம்) தங்களுக்கு மாற்று வேலை கோரி வந்தனர்.
ஆனால் அவர்களை அருகாமையில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் கூடுதல் பணிக்கு அமர்த்தியது. அதனால் கள்ளத்தனமாக நடத்தப்படும் மது விற்பனை பங்கீட்டின் காரணமாக ஏற்கெனவே இருந்த கடை ஊழியர்கள் - புதிதாக வந்தவர்களுக்குள் பல்வேறு சலசலப்புகள் எழுந்து கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையில்தான் கடந்த மார்ச் 31-ம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மது விற்பனைக் கூடங்களை அகற்றுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை மார்ச் 31-ம்தேதி முதல் அமல்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகம் முழுக்க சுமார் 3320 மதுபானக் கடைகள் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கோவை வடக்கில் (கவுண்டம்பாளையம்) இயங்கி வந்த 159 கடைகளில் 81 கடைகள் மூடப்பட்டன. கோவை தெற்கில் (பொள்ளாச்சி) இயங்கி வந்த 124 கடைகளில் 68 கடைகள் மூடப்பட்டன. இப்படி மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக குடியிருப்புகள் அல்லாத பகுதிகளில் கடையமைக்க இடம் பார்க்க மூடப்பட்ட கடைகளின் சிப்பந்திகளுக்கு வாய்மொழியாக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
அப்படி தமிழகம் முழுக்க மூடப்பட்ட கடைகளுக்கு மாற்றாக 99 சதவீத மாற்றுக்கடைகளை ஊழியர்களும் பார்த்து அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டனர். அந்த கடைகளுக்கு புதிய மதுபானக் கடைகள் அமைக்க முற்படும் போதுதான் போராட்டங்கள் வெடிக்கின்றன. குறிப்பிட்ட மதுபானக் கடைகள் முன்பு மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிறார்கள். மீறி கடைகள் திறந்தால் அவை அடித்து உடைக்கப்படுகின்றன.
உதாரணமாக கோவையில் மூடப்பட்ட 81 கடைகளில் 90 சதவீதம் மாற்றுக்கடைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதிகாரிகளிடம் கோப்புகள் வைக்கப்பட்டு விட்டது. அதை அதிகாரிகள் பல்வேறு ஆய்வுக்குட்படுத்தி திறக்க 42 கடைகளை திறக்க அனுமதித்தும் உள்ளனர். ஆனால் அவற்றில் இதுவரை 17 கடைகள்தான் திறக்கப்பட்டுள்ளது. மற்ற 25 கடைகள் முன்பு மறியல், ஆர்ப்பாட்டம், கடைகள் அடித்து உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இது போலவே மற்ற மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.
இப்படி போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெறுவது ஒரு வகை. இன்னொரு பக்கம் பணத்துக்காக தூண்டி விடப்படுவதும் நடக்கிறது. இதனால் முழுமையாக பாதிக்கப்படுவது மூடப்பட்டு, மாற்று இடம் தேடி அலையும் அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களேயாகும். இவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலே அடுத்த கட்ட போராட்டத்திற்கும் இட்டுச் செல்வதாக சொல்கிறார்கள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடை ஊழியர்கள் சிலர் கூறுகையில், ''உண்மையிலேயே குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடைகள் அமைந்தால் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அதற்காக சில இயக்கங்கள் உண்மையாக போராடுவதும் ஒரு பக்கம் நடக்கிறது. அதை விட பணத்திற்காகவும், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்களாலுமே இந்த போராட்டங்கள் முடுக்கி விடப்படுகின்றன. இதற்கு அந்தந்த பகுதி போலீஸாரும் மாமூலுக்காக துணை நிற்கின்றனர்.
ஒரு பகுதியில் 2 மதுக்கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி பூட்டப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கடைகளுக்கு நடுவில் உள்ள ஒற்றைக் கடையில் ஒன்றுக்கு நான்கு மடங்காக வியாபாரம் எகிறியிருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் வியாபாரம் உள்ள கடை ரூ. 6 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை எகிறியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த மதுபானக் கடை பார்களிலும் 24 மணிநேரமும் கள்ளத்தனமாக ஒற்றைக்கு இரட்டை விலையில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தவிர இதே கடையிலிருந்து பக்கத்தில் மூடப்பட்ட கடையில் உள்ள மதுக்கூடங்களுக்கு மதுபாட்டில்கள் அனுப்பப்படுகிறது.
மதுபானக் கடை மூடியிருந்தாலும், மதுக்கூடங்கள் மூடப்படாததால் அங்கு வைத்து மது விற்பனை பகிரங்கமாக நடக்கிறது. இப்படி பூட்டப்பட்ட 2 கடைகள் மூலம் பூட்டப்படாத ஒரு கடைக்கும், அது சார்ந்த மதுக்கூடத்திற்கும் பல மடங்கு லாபம் கிடைப்பதால் இங்குள்ளவர்கள் பக்கத்தில் உள்ள மதுக்கடை மூடியிருப்பதையே விரும்புகிறார்கள். அதற்காக தனக்கு தோதான கட்சிக்காரர்களை, லெட்டர்பேடு கட்சிகளை தூண்டி விடுகிறார்கள். அதனால் மாற்று மதுபானக்கடை திறக்கும் இடங்களில் எல்லாம் அதை திறக்க விடாமல் போராட்டம் வெடிக்கிறது.
இதற்காக போராட்டக்காரர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம் என மூடப்படாத கடைக்காரர்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. அந்த பணம் உள்ளூர் போலீஸ் வரை செல்கிறது. தினசரி மாமூலுக்கு மாமூல்; போராட்டக்காரர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்கும் தனி தொகை கிடைப்பதால் அவர்களும் இரட்டிப்பு வருமானத்தில் மகிழ்ந்துள்ளார்கள். இந்த விஷயத்தில் அச்சு அசலாக குடியிருப்பு பகுதியில் அமையும் மதுக்கடைகளும் உள்ளது. அதை எதிர்த்து உண்மையாக போராட்டத்தில் இறங்கும் பொதுமக்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் போலீஸ் ஆதரவு இருப்பதில்லை.
அங்கேதான் லத்தி சார்ஜ் நடக்கிறது. இந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த சிண்டிகேட் போடும் வேலையும் நடக்கிறது. ஒரு இடத்தில் அமையும் மதுபானக் கடைக்கு எதிராக போராடுபவர்களை அமைதிப்படுத்த வேறு பகுதியை சேர்ந்த அதே கட்சியை சேர்ந்தவர்கள் சமாதானப்படுத்தும் வேலையும் நடக்கிறது. அதற்கும் பணப்பட்டுவாடா நடக்கிறது.
இப்படி இருபக்கமும் வருமானத்தை வாங்கிக் கொண்டு போராட்டத்தை கைவிடும் இயக்கத்தினர், உண்மையாகவே போராட்டத்தை செய்யும் மற்றொரு குழுவிடம் போராட்டத்தை கைவிடச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்துவதும் நடக்கிறது. அதில் மசியாத நேர்மையான அமைப்புகளும் தொடர்ந்து போராடும்போதுதான் அங்கே கடையே அமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இப்படியான சம்பவங்களில் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாவது மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர்களே. இவர்களுக்கு கடை பூட்டப்பட்ட நாளிலிருந்தே சம்பளத்தை கொடுத்து விடுகின்றனர் அதிகாரிகள். என்றாலும் அவர்களுக்கு மாமூலாக வரும் இதர வருமானங்கள் கட் ஆகி விடுகிறது. அதே சமயம் இவர்களிடம்தான் அவர்கள் பொறுப்பு வகிக்கும் மதுபானக் கடைக்கு மாற்று இடம் தேடும் பொறுப்பு அளிக்கப்படுகிறது. அதற்கு அவர்கள் அலையும் அலைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல!'' என்று தெரிவித்தவர்கள் அதையும் விவரித்தனர்.
(டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம்)
''ஒரு மூடப்பட்ட மதுக்கடை மேற்பார்வையாளர் புரோக்கர்களை பிடித்து அலைந்து திரிந்து இடம் முடிவு செய்து, சம்பந்தப்பட்ட இடத்துக்காரர் அல்லது கட்டிடத்தின் சொந்தக்காரரிடம் அவரின் ரேசன் கார்டு, மின் இணைப்பு அட்டை, பத்திரச்சான்று, வரி ரசீது எல்லா ஆவணங்களையும், வாடகை விவரங்களையும் சேகரித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த கோப்புகள் அங்குள்ள அலுவலர் ஆய்வுக்குட்படுத்தி மண்டல மேலாளருக்கு அனுப்புவார். அதற்கடுத்து மண்டல மேலாளர் அதை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வுக்கு வருவார். அவருடன் மற்ற அலுவலர்களும் வருவர்.
இப்படி ஆய்வுக்கு வருவதற்குள் பல்வேறு நிலைகளில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை அலுவலர்களுக்கு 'கவனிப்பு' செய்ய வேண்டும். இதுவெல்லாம் ஏற்றுக் கொண்ட நிலையில் இந்த கோப்புகள் துணை இயக்குநர்- கலால் அலுவலக அனுமதிக்கு அனுப்ப வேண்டும். அங்கே பல்வேறு அலுவலர்கள் ஆய்வு செய்த டிஇஓ லெவல் அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு ஆய்வுக்கு வருவார்கள். ஏற்கனவே டிஎம் அலுவலகத்தில் கவனித்ததை விடவும் கூடுதல் கவனிப்பு இவர்களை செய்த பின்பே இந்த கோப்பு துணை இயக்குநருக்கு செல்லும். அந்த நிலையிலும் பெரிய 'கவனிப்பு' நடத்திய பின்னரே புதிய இடத்தில் கடை திறக்க முறைப்படி அனுமதி கிடைக்கிறது'' என்றனர்.
இந்த வகையில் மட்டும் ரூ.1லட்சத்துக்கு மேல் தன் பணத்தை (இதற்கெல்லாம் கள்ள மார்க்கெட் மது விற்பனைதான் ஊழியர்களுக்கு கை கொடுக்க வேண்டும்) செலவு செய்த பின்னர் குறிப்பிட்ட கடையை திறக்கும்போது இப்படி மக்கள் போராட்டம் வெடிக்கும்போது என்னவாகும்? இந்த கடையை தேடி பிடிக்க அரும்பாடு பட்ட ஊழியர்தானே பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவார். அதுதான் இப்போது இந்த விஷயத்தில் அங்கிங்கெணாதபடி நடந்து கொண்டிருக்கிறது.
''இப்படித்தான் விருதுநகரில் ஒரு மூடப்பட்ட மதுக்கடை ஊழியர் பல்வேறு இடங்களில் இடம் பார்த்து அது அமையவேயில்லை. எனவே தன்னிடம் காலியாக உள்ள நிலத்தில் ஒரு கட்டிடத்தை வங்கியில் ரூ. 10 லட்சம் வரை கடன் வாங்கி எழுப்பியுள்ளார். அதையே டாஸ்மாக் கடைக்கு பரிந்துரைத்தும் உள்ளார். கடை வரும்போது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு. அதை சரி செய்ய பல்வேறு ஆட்களுக்கும் செலவும் செய்துள்ளார். என்றாலும் பிரச்சினை ஓயவில்லை. இன்னொரு பக்கம் வங்கியில் கடன் தொகை செலுத்த சொல்லி நெருக்கடி. வேறு வழியில்லாமல் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இப்படி இந்த விவகாரத்தில் நேர்மையான ஊழியர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை எண்ணத்தில்தான் உள்ளார்கள். ஒருவர் விருதுநகரில் தற்கொலையும் செய்துள்ளார்!'' என விவரித்தார் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு மூடப்பட்ட மதுக்கடை மேற் பார்வையாளர்.
3ல் ஒரு பங்கு தமிழகத்தில் மதுபானக்கடைகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் மதுபான விற்பனை என்பது கடந்த 3 மாதத்தில் 10 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளதாம். அதிலும் கோவை மாவட்டத்தில் 170 கடைகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையிலும் மதுவிற்பனையின் அளவு குறையவே இல்லையாம். அதற்கு காரணம் மூடப்பட்ட கடைகளில் உள்ள மதுக்கூடங்களில் எல்லாம் பக்கத்து கடைகளிலிருந்து மதுபானம் 24 மணி நேரமும் ஒற்றைக்கு இரட்டை விலைக்கு விற்பனை செய்யப்படுவதுதான். அதற்கு போலீஸூம் மாமூல் வாங்கிக் கொண்டு துணை நிற்பதுதான். இப்படி விற்கப்படும் மதுவில் வெளி சரக்கும் கலக்கப்படுகிறது. இது எப்போது வேண்டுமானாலும் விபரீதமாக மாறும் என்றும் எச்சரிக்கிறார்கள் மூடப்பட்ட மதுக்கடை ஊழியர்கள்.
அரசு மதுபானக்கடை பணியாளர்களின் இக்கட்டான நிலை குறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன துணைச் செயலாளர் ஏ. ஜான் அந்தோணிராஜிடம் கருத்துக் கேட்டபோது அவர் கூறியதாவது ''ஒரு கடைக்கு 4 பேர் வீதம் தமிழ்நாடு முழுக்க மூடப்பட்ட 3 ஆயிரம் கடைகளை கணக்கிட்டால் 12 ஆயிரம் ஊழியர்கள் தமிழ்நாடு முழுக்க மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் இந்த சூழலில் இனி மதுவிற்பனை என்பதை நடத்தவே முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே 'மதுவிற்றது போதும்; மாற்றுப் பணி வேண்டும்!' என்று 26-ம் தேதி ஆளுங்கட்சி சங்கத்தினர் உட்பட கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.
அதைத் தொடர்ந்து ஜூன் 20ல் எல்லா தொழிற்சங்கங்களும் இணைந்து சென்னையில் கோரிக்கை மாநாடு நடத்துகிறோம். பொதுமக்கள் டாஸ்மாக் ஊழியர்களை பொது எதிரியாக பார்க்க வேண்டாம். வன்முறையை கையில் எடுக்க வேண்டாம். நாங்கள் ஒன்றும் விருப்பப்பட்டு மதுவிற்பனைக்கு வந்தவர்கள் அல்ல. மதுவிலக்கு கொள்கையில் அவர்கள் இடத்தில்தான் நாங்களும் நிற்கிறோம்.
அரசும் நியாயமான பொதுமக்களின் உணர்வு, ஊழியர்களின் வாழ்க்கை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுத்து இயங்க வேண்டும். சட்டத்துக்கு புறம்பான மதுவிற்பனையை காவல்துறை கட்டுப்படுத்தினாலே போதும். பொதுமக்கள் கோபம் குறையும். இதையெல்லாம் எங்கள் கோரிக்கை மாநாடு விரிவாக எடுத்துக் கொண்டு செல்ல உள்ளது!'' என்று ஏ. ஜான் அந்தோணிராஜ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago