உடுமலையை அடுத்த துருவமலையைச் சுற்றிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தல்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

By எம்.நாகராஜன்

உடுமலையை அடுத்த துருவமலையைச் சுற்றிலும் கோடிக்கணக்கு மதிப்பிலான மரங்கள் வெட்டிக் கடத்தப் படுவதாக, அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை ஒட்டி மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. இதனை ஒட்டி, ஏராளமான சிறு, சிறு மலைகள் உள்ளன. உடுமலையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் துருவபர்வதம் (அ) துருவமலை (அ) இட்லி மலை உள்ளது. இங்குள்ள கோயிலுக்கு விசேஷ நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அப்பகுதியில் உள்ள சிறு மலைகளை ஒப்பிடுகையில், துருவமலை செங்குத்தான நிலையில் மிகவும் உயரமாக அமைந்துள்ளது. அங்குள்ள மலைகளுக்கு நடுவே 3,000 ஏக்கர் பரப்பில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இவை, உடுமலை வருவாய் வட்டத்துக்கு உட்பட்ட ஆண்டியக்கவுண்டனூர், மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம், குறிச்சிக்கோட்டை உள்ளிட்ட வருவாய் கிராம நிர்வாகத்துக்கு உட்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு மழை பெய்தால் மட்டுமே, ஒரு சிலர் விவசாயம் செய்கின்றனர். பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடுகள் மேய்ப்பதை தொழிலாகக் கொண்டுள்ளனர். சமூகக் காடு வளர்ப்புத் திட்டம் மூலமாக வேம்பு, வாகை, புங்கன், புளியன், கருவேலன், வெள்ளவேலாமரம், ஆலமரம், அரசமரம் என பலவகையான மரங்கள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக சிலர் அரசிடம் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி, மரங்களை வெட்டி டிராக்டர்களில் ஏற்றிச் செல்வதாக கூறப்படுகிறது. இதற்காக, கரடுமுரடாக இருந்த இடத்தையும் வாகனங்கள் செல்ல ஏதுவாக மண் வழித்தடங்களை ஏற்படுத்தி உள்ளனர்.

மரங்களை வெட்டிய இடத்தில் அதன் தடயங்களை மறைக்கும் வகையில், பல இடங்களில் தீயிட்டு எரித்து சாம்பலாக்கி உள்ளனர்.

அடர்ந்த வனப்பகுதியில், விதி மீறல்கள் அரங்கேறி வருகிறது. இவ்வாறு வெட்டப்படும் மரங்கள் செங்கல் சூளைகள், தனியார் நிறுவனங்களுக்கு விற்கப் படுகின்றன. வெட்டப்பட்டுள்ள மரங்களின் இன்றைய மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

மரங்கள் வெட்டிக் கடத்தப்படும் இடத்துக்கு அருகே வனத்துறை அலுவலகம் இருந்தும், அவர்கள் ஏன் தடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இப்பகுதி வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக இருப்பினும், வனத்துறை மூலமாக பல ஆண்டுகளுக்கு முன்பே, சமூகக் காடு வளர்ப்புத் திட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களும், அவரவர் பணிபுரியும் இடங்களிலேயே தங்கியிருக்கும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகளை ஏன் கண்காணிக்கவில்லை, தடுக்கவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது.

அரசிடம் அனுமதி பெற்றுத்தான் மரங்களை அகற்றுவதாகக் கூறி, தாராபுரத்தைச் சேர்ந்த சிலர் மரங்களை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். பட்டாதாரர்களிடம் மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு, அதற்கு ஈடாக காடுகளை சமன் செய்வதாக கூறினர்.

சொந்தமாக காடு இருந்தும், கூலி வேலைக்குச் செல்லும் நிலையில் உள்ள நாங்கள், சமன்படுத்த சம்மதித்தோம். ஆனால், அவர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் செல்வதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். நிலத்தை சமன்படுத்த எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால், சிலர் மரம் வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்றனர்.

இதுகுறித்து உடுமலை வட்டாட்சியர் கி.தயாநந்தன் கூறும்போது, “மேற்படி பகுதியில் மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. அவ்வாறு மரங்கள் வெட்டி அகற்றப்படுவது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து உடனடியாக விசாரிக்கப்படும்” என்றார்.

மாவட்ட வன அலுவலர் ஏ.பெரியசாமி கூறும்போது, “அமராவதி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஜம்புக்கல் பகுதியை ஒட்டியே துருவமலை உள்ளது. அங்கு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஏற்கெனவே மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மரங்களை வெட்ட வனத்துறை சார்பில் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்