ஏற்காட்டில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 120-க்கும் மேற்பட்ட காபித் தோட்டங்கள் இருக்கின்றன. தோட்டங்களில் காபி மட்டுமின்றி ஊடு பயிராக மிளகு, பேரிக்காய், கமலா ஆரஞ்சு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் பயிரிடப்படுகின்றன. இவற்றை சுமார் 10 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் பராமரித்து வருகின்றனர். இவர்களில் பாதி பேர் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1964-ம் ஆண்டு இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்.
ஏற்காட்டில் அனைத்து தோட்டங்களையும் பராமரித்து செழுமையாக்குவது இந்தத் தொழிலாளர்கள்தான். ஆனால், அவர்கள் பல வகைகளிலும் தோட்ட உரிமையாளர்களால் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார் சேலம் மாவட்டத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹெரால்டு விக்டர்.
அவர் ‘தி இந்து’விடம் கூறுகையில், “ஏற்காட்டில் தோட்டத் தொழிலாளர் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க தோட்ட நிறுவன ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அத்துறைக்குச் சொந்தமாக அலுவலகம்கூட இங்கு இல்லை. தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் முற்றிலுமாக படிப்பறிவு இல்லாத மலைவாழ் பழங்குடிகள். பல்வேறு தோட்டங்களின் உரிமையாளர்கள் அவர்களின் அறியாமை மற்றும் தோட்டத் தொழிலாளர் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழிலாளர்களை வஞ்சித்து வருகிறார்கள்.
தோட்டத் தொழிலாளர் சட்டப்படி ஒரு நாள் கூலியாக ரூ.196.08 அளிக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் அளிக்கப் பட்டுவிட்டாலும் பிற உரிமைகளான போனஸ், பணிக்கொடை, கட்டாய வீட்டு வசதி, கம்பளி, அரசு மற்றும் உள்ளூர் விழாக்கால 14 நாட்கள் விடுமுறைகள் எதுவும் இவர்களுக்கு கிடையாது. பெரும்பான்மையான தோட்ட உரிமையாளர்கள் சம்பள ரசீது அளிக்காததால், வேலையை விட்டு விலகும்போது இவர்கள் பணியாற்றிய பணிக்காலக் கொடை அனைத்தும் மறுக்கப்படுகிறது. தோட்டத் தொழிலாளர் சட்டப்படி ஒரு பெண் எத்தனை முறை கர்ப்பம் தரித்தாலும் மகப்பேறுக்கு முன்னதாக 42 நாட்களும் மகப்பேறுக்கு பின்பு 42 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், இந்த சலுகை இருப்பதே தோட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு தெரிவது இல்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும் இவர்களுக்கு பணி பாதுகாப்பு, வீட்டு வசதிகளை செய்துத் தருவதாக கட்சிகள் வாக்குறுதி கொடுக்கின்றன. ஆனால், வெற்றி பெற்ற பிறகு சட்டசபையில் இவர்களுக்காக யாரும் பேசுவதுகூட கிடையாது. இம்முறையும் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். வெற்றி பெறும் வேட்பாளர் இம்முறையாவது தொழிலாளர்களுக்கான உரிமைகளை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.
“தொழிலே அழிந்துவருகிறது!”
காபி தோட்ட உரிமையாளர்களோ இதற்கு எதிர்மாறான கருத்தை முன்வைக்கிறார்கள். தோட்ட உரிமையாளர் வள்ளியப்பன், “இன்று எங்களுக்குத் தொழிலாளர்கள் கிடைப்பதே அரிதாகிவிட்டது. நூறு நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு பெரும்பான்மையான தொழிலாளர்கள் வேலைக்கு வருவது இல்லை. முன்பு நல்ல விளைச்சல் இருந்தது. ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு 500 கிலோ காபி கொட்டை அறுவடை செய்வோம். தற்போது பருவநிலை மாறிவிட்டதால் இப்போது ஏக்கருக்கு 150 கிலோ மட்டுமே கிடைக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு காபி போர்டு மூலம் மட்டுமே நாங்கள் கொட்டைகளை விற்பனை செய்து வந்தோம். ஆனால், இன்று ஒப்பன் மார்க்கெட் ஆகிவிட்டதால் கடுமையாக விலைச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பிரேசில், இந்தோனோஷியா ஆகிய நாடுகளில் காபி உற்பத்தி அதிகரித்துவிட்டதால் கிலோ ரூ.200-ஆக இருந்த காபி கொட்டை விலை இப்போது ரூ.100-ஆக குறைந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளரின் கூலி ரூ.60-ஆக இருந்தது. இப்போது 196 ரூபாய். 200 ரூபாய்க்கும் அதிகமாக கொடுத்தால்கூட பலரும் வேலைக்கு வர கிராக்கி செய்கிறார்கள். பல தோட்ட உரிமையாளர்கள் தொழில் நடத்த முடியாமல் தோட்டங்களை ரிசார்ட் உரிமையாளர்களுக்கு விற்றுவருகிறார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
22 hours ago
தமிழகம்
23 hours ago