வக்காலத்து நமுனா கையெழுத்து சர்ச்சை தொடர்பாக சசிகலா புஷ்பா, அவரது கணவர் திங்கள்கிழமை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நேரில் ஆஜராகினர். காலை 11.45 மணிக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கையெழுத்து தொடர்பாக நீதிபதி கேள்வி எழுப்ப சசிகலா புஷ்பா நீண்ட விளக்கம் அளிக்க முயற்சித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி வேலுமணி, "சுற்றி வளைக்காமல் நான் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லவும்" என இரண்டு முறை கண்டிப்புடன் தெரிவித்தார்.
இதனையடுத்து "சசிகலா புஷ்பா, கையெழுத்து என்னுடையதுதான். ஆனால் நான் மதுரைக்கு வந்து கையெழுத்திடவில்லை. எனது கணவர் என்னிடம் வந்து கையெழுத்து வாங்கினார். அவரே நேரில் வழக்கறிஞரிடம் கொடுத்தார்" என்றார்.
தொடர்ந்து வாதாடிய சசிகலா புஷ்பா தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கில் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூற கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார். ஆனால், ஏற்கெனவே அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. தீர்ப்புக்காக மட்டுமே இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே இந்த வழக்கு இன்று மீண்டும் மாலை 4 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது தங்கள் வாதங்களை முன்வையுங்கள் எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
வழக்கு பின்னணி:
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. இவர் சில வாரங்களுக்கு முன்பு புது டெல்லி விமான நிலையத்தில், திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, அவரிடம் அதிமுக மேலிடம் விசாரணை நடத்தியது. இதுபற்றி மாநிலங்களவையில், கடந்த 1-ம் தேதி முதல்வர் மீது சசிகலா புஷ்பா பகிரங்கமாக புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் பணிபுரிந்த 2 பெண்கள் அளித்த புகார்களின்பேரில், தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டை போலீஸார் பாலியல் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டில் இருக்கும் சசிகலா புஷ்பா வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டதாகக் கூறியுள்ளது எப்படி சாத்தியம் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் சந்தேகம் எழுப்பினார். இதையடுத்து சசிகலா புஷ்பா, அவரது கணவர், மகன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆக. 29-ல் (இன்று) ஆஜராகி வக்காலத்து நமுனாவில் கையெழுத்திட்டது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக சசிகலா புஷ்பா உள்ளிட்ட 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, சசிகலா புஷ்பாவையும், அவரது குடும்பத்தினரையும் 6 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது. சசிகலா புஷ்பா, கணவர், மகன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி ஆக. 29-ல் நேரில் ஆஜராக வேண்டும். அவர்களின் முன்ஜாமீன் மனுக்கள் மீது உயர் நீதிமன்ற கிளை சுதந்திரமாக முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனால் சசிகலா புஷ்பா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கண்டிப்பாக ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago