70 ஆண்டு கால திட்டம் குறித்து ஓர் பார்வை: அட்டப்பாடி அணைகள் கடந்து வந்த அரசியல் பாதை!

By கா.சு.வேலாயுதன்

மத்திய அரசின் நீர்ப் பாசன மதிப்பீட்டுக் குழு அட்டப்பாடியில் அணை கட்ட கேரளத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக வந்த செய்திகளை அடுத்து திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. அதன் எதிரொலியாக பிரதமருக்கு எழுதிய கடித விவகாரங்களையும் முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் இந்த அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டங்கள் வெடிக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர் அரசியல் மற்றும் சூழலியல் பார்வையாளர்கள்.

கோவையில் இருந்து மேற்கே 28 கி.மீ தொலைவில் உள்ளது ஆனை கட்டி. அடுத்து கேரளத்தின் எல்லை தொடங்குகிறது. தாசனூர், சோலையூர், புதூர், கோட்டத்துறை, அகழி, முக்காலி, தாவளம், தொடுக்கி, சைலண்ட் வேலி எனப்படும் அமைதிப் பள்ளத்தாக்கு, சிறுவாணி, சித்தூர், வெங்கமேடு… இப்படி 200-க்கும் மேற்பட்ட கிராமங் களை அடக்கிய பகுதிகளாக உள்ள மலைப் பகுதிகளே அட்டப்பாடி.

முக்காலி பவானி

தமிழகத்தின் நீலகிரி வனப் பகுதியும், கேரளத்தின் நிலம்பூர் வனப் பகுதியும் இணையும் எல்லைப் பகுதியான அங்கந்தா எனப்படும் பகுதியில் உருவாகும் பவானி ஆறு, நீலகிரி மாவட்ட காடுகளில் 3 கி.மீ. தூரம் பயணித்து கேரள வனப் பகுதிகளுக்குள் நுழைந்து அட்டப்பாடியில் உள்ள சைலண்ட் வேலிக்கு வருகிறது. இங்கு பல கிளைகளாகப் பிரியும் பவானி நதியின் முக்கிய பகுதி கிட்டத்தட்ட 24 கி.மீ. கடந்து முக்காலி கிராமத்தை அடைகிறது. முக்காலி கிராமத்துக்கு கிழக்கே சுமார் 24 கி.மீ. தூரம்தான் தமிழகப் பகுதியான ஆனைகட்டி. முக்காலியில் இருந்து வடகிழக்கே நகரும் பவானி அட்டப்பாடியில் 35 கி.மீ. தூரம் வளைந்து நெளிந்து பல்லாயி ரக்கணக்கான ஹெக்டேர் நிலங்களைப் பசுமையாக்கிய பிறகு தமிழகத்தின் பில்லூர் பகுதிக்கு வந்து சேருகிறது. பில்லூர் அணைதான் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட் டங்களுக்கு பெரிய அளவில் குடிநீர் தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது, புதுப்புது குடிநீர்த் திட்டங்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.

அணை விவகாரங்கள்

இன்னொரு பக்கம், கோவைக்கு தென்மேற்கே கோவை குற்றாலம் அருகே முத்திக்குளம் பகுதியில் பல்வேறு நீரோடைகளின் மூலம் உருவாகும் சிறுவாணி கேரள காடுகளில் (இதுவும் அட்டப்பாடி பிரதேசம்தான்) கோவையின் நீர்த் தேவைக்குரிய சிறுவாணி அணையில் நிரம்பிவிட்டு அதன் உபரி நீர் நேரே வடக்கு நோக்கி கிளை விரிக்கிறது. இது வெங்கக்கடவு, சித்தூர், சிறுவாணி, நெல்லேபள்ளி, கூழிக்கடவு, அகழி போன்ற அட்டப்பாடி மலைக் கிராமங்களை சுமார் 25 கி.மீ கடந்து கூட்டப்பட்டி என்ற இடத்தில் பவானியுடன் கலக்கிறது. இப்படி சிறுவாணியைச் சேர்த்துக் கொண்ட பவானிதான், மேலும் சுமார் 10 கி.மீ. பயணித்து தமிழத்தின் பில்லூர் அணைக்கு வந்து சேருகிறது.

மேற்சொல்லப்பட்ட விஷயங்களை பொறுத்தவரை இரண்டு புதிய அணை விவகாரங்களே தமிழகத்தில் பிரச்சினைகளாக கடந்த காலங்களில் வெடித்துள்ளன. அதில் ஒன்று முக்காலி பவானி அணை, மற்றொன்று சித்தூர் சிறுவாணி அணை. இதில் முதலில் பிரச்சினைக்குள்ளானது முக்காலி அணை என்றுதான் தமிழகத்தில் உள்ள வர்கள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் பிரச்சினை எழும்பியது சித்தூர் அணை விவகாரமே. எப்படி?

சித்தூர் சிறுவாணி அணை

சித்தூரில் ஆங்கிலேயர் காலத்தி லேயே அட்டப்பாடி மக்களின் விவ சாயத் தேவையைப் பூர்த்திசெய்ய சிறுவாணிக்கு குறுக்காக பிரம்மாண்ட அணை கட்டத் திட்டமிட்டு 70 ஆண்டு களுக்கு முன்பே கோப்புகள் நகர்ந்த தாக சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நாடு சுதந்திரம் பெற்ற பின்பு அப்போதைய மாகாண அரசு அக்கால செலவு திட்டப்படி ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்ததாம். ஆனால், நில எடுப்பு, மிருகங்கள் தொல்லை, இயந்திரங்கள் கொண்டு வந்து வேலை செய்வதில் உள்ள சிரமங்கள் காரணமாக இந்த திட்டம் தள்ளிப்போனது. 1969-ல் இதுபற்றி சட்டப்பேரவையில் பேசப் பட்டுள்ளது. இதுதொடர்பாக 1976-ல் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையும் கிளம்பியுள்ளது.

காவிரி நடுவர் மன்ற ஒப்பந்தப்படி, காவிரியின் கிளை நதிகளில் 6.5 டிஎம்சி நீர் வரை கேரளா எடுத்துக்கொள்ள உரிமம் உள்ளது. அதற்கேற்ப தடுப் பணை மட்டும் கட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டது. அதற்காக கேரள அரசு இப்பகுதி பழங்குடிகளின் 247 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வேலை யையும் தொடங்கியது. சித்தூர் அணை கட்ட ரூ.200 கோடி மதிப்பில் திட்டமும் தயாரித்துள்ளது. அதற்காக பொதுப் பணித் துறை அலுவலகம், இயந்திரப் பணிமனைகள், மலையை குடைந்து கான்கிரீட் கலவை நிரப்ப வசதிகள் துரித கதியில் செய்யப்பட்டுள்ளன.

இந்த அணை விவகாரத்தில் முறைகேடு, நிலம் எடுப்பில் பாதிபேருக்கு மேல் உரிய தொகை வழங்காதது; ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த திட்டம் ஆரம்பக் கட்ட பணியோடு நின்றுபோனது. துருவேறிய புல்டோசர், பொக்லைன் இயந்திரங்கள், ஜீப்புகள், லாரிகள், பாழடைந்த கட்டிடங்கள் என அதற்கான எச்சமிச்சங்கள் இன்றும் காணப்படுகின்றன. இந்த வகையில் மட்டும் அப்போதே கேரள அரசுக்கு சுமார் ரூ.14 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. ‘சித்தூர் அணை பணிகள் தொடங்கியபோது தமிழகப் பகுதியில் பெரிய எதிர்ப்பு இல்லை. மாறாக, கேரள அரசுக்கு பெரும் நிதிநெருக்கடி. எனவே ‘தமிழ கத்தில் அணைக்கு எதிர்ப்பு’ என்று தெரிவித்துவிட்டனர்.

‘அட்டப்பாடியில் அந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களின் 5 ஆயிரம் குடும்பங்கள் வசித்தன. இங்குள்ள வர்களின் கோபம் தமிழர்களின் மீது திரும்பியது. அது இன்னமும் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது’ என்கின்றனர் இங்குள்ள நடுநிலையாளர்கள். இந்த சூழ்நிலையில்தான் முக்காலியில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ள தகவல்கள் 2002-ம் ஆண்டின் இறுதியில் வெளியானது.

முக்காலி அணை

சைலண்ட் வேலியில் பல கிளைகளாக பிரியும் பவானியின் உயிர்முடிச்சு முக்காலி கிராமத்துக்கு வந்து சேருகிறது. பிறகு 35 கி.மீ. பயணம் செய்து தமிழ கத்தில் பில்லூர் வந்தடைகிறது. இந்த உயிர்முடிச்சில்தான் ஒரு பெரிய அணையை கட்ட கேரள அரசு 2002-ம் ஆண்டில் திட்டமிட்டு பூர்வாங்க வேலையை தொடங்கியது. அதற்காக 40 அடி ஆழமுள்ள பவானி ஆற்றுக்கு மேலே ஒரு கான்கிரீட் தூணை எழுப்பியது கேரள மாநில மின்வாரியத் துறை. வடகிழக்கே பாயும் பவானி நதிக்கு குறுக்கே பிரம்மாண்ட தடுப்பணை கட்டி, இதற்கு நேர் எதிராக ஆற்றை திருப்பி 5 கி.மீ தொலைவில் ஏற்கெனவே பவானியில் இருந்து சைலண்ட் வேலியில் பிரிந்து 1,800 அடி உயரத்தில் கொட்டிக் கொண்டிருக்கும் மத்தம்பட்டி அருவியுடன் இணைக்க திட்டமிட்டிருந்தனர். இதன் மூலம் மின்சாரம் (26 மெகாவாட்) தயாரிப்பது தான் கேரள அரசின் திட்டம்.

இந்த ஆறு திசை திருப்பப்படும் வழியெங்கும் நில அளவை செய்து குறியீட்டு குச்சிகளையும் நட்டனர். இதற்கான செலவு சில கோடிகளே என கேரள அரசு அறிவித்திருந்தாலும், செலவு ரூ. 100 கோடியை தாண்டும் என்பதே இங்குள்ள மக்களின் மதிப் பீடாக இருந்தது.

அத்துடன், இந்தப் பகுதியில் ஒரு சர்வதேச குளிர்பானக் கம்பெனி நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கியிருந்தது. அந்த கம்பெனி மினரல் வாட்டரோ, குளிர் பானங்களோ தயாரிக்கத்தான் மறை முகமாக கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டும் கேரள மக்களிடம் அப்போது எழுந்தது.

அந்த சமயத்தில் கேரளத்தில் காங்கிரஸ் முதல்வர் அந்தோணியின் ஆட்சி. கம்யூனிஸ்ட்கள் இதற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். இந்த ஆறு திசைதிருப்பப்படும் பகுதியில் அபரிமிதமாக தண்ணீர் பொங்கினால் தம் நிலங்கள் எல்லாம் ஆற்றோடு போய்விடும் என்ற கவலையில் இந்த பகுதி விவசாயிகளை ஒருங்கிணைத்து இக்கட்சியினர் போராட்டக்களத்தில் குதித்தார்கள். அதேசமயம் இங்கே தண்ணீர் அடைக்கப்பட்டால் தமிழகத் துக்கு பவானியில் தண்ணீர் என்பது கனவாகிவிடும் என்று விவசாயிகள், சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சி கள் யாவும் போராட்டத்தில் குதித்தன.

போராட்டங்கள்

‘1997-ம் ஆண்டிலேயே இந்த திட்டம் தீட்டப்பட்டது என்று கேரள அரசு சொல்கிறது. அதில் உண்மையில்லை. அப்போது இருந்தது இடதுசாரி ஜன நாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசு. மத்தம்பட்டி அருவியில் மின்சாரம் தயாரிக்கத்தான் திட்டம் தீட்டியது. 5 கிமீ தொலைவில் உள்ள பவானி ஆற்றை திசைதிருப்ப அல்ல’ என்று கொதித்து போராடினார்கள் கேரள கம்யூனிஸ்ட்கள். அதேவேளையில் தங்கள் பகுதிக்கு வரும் பவானி வறண்டுவிடும் என்ற பயத்தில் மல்லீஸ்வரன் மலை, கோட்டத்துறை, புதூர், அகழி, சோலையூர், முள்ளி பகுதி களில் உள்ள கேரள மக்களும், அட்டப் பாடி பழங்குடியினரும் இந்த அணைத் திட்டத்தை எதிர்த்தார்கள். அவர்களுடன் தமிழக விவசாயிகளும், அமைப்பினரும் கைகோத்தார்கள். 14.02.2003 அன்று இதற்காக கூட்டம் நடத்திய திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, உழவர் உழைப்பாளர் கட்சி செல்லமுத்து, பெரியார் தி.க., கு.ராமகிருஷ்ணன், காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் கலந்துகொண்டு அணைக்கு எதிராக தீர்மானம் போட்டு, 18-ம் தேதி முக்காலியில் அணைகட்டத் திட்டமிட்ட பகுதியை முற்றுகையிட்டனர். இந்த முற் றுகை போராட்டத்தில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார்.இதற்கு சில நாட்கள் கழித்து கொங்கு இளைஞர் பேரவை, பெரியார் திராவிடர் கழகத் தொண்டர்கள், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர், மதிமுகவினர் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் முக்காலி பவானியை முற்றுகையிட்டனர்.

இந்த விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்களும், பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். அவர்கள் தமிழக பகுதியில் வந்து பேட்டிகள், போலீஸில் புகார் கொடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இந்த விவகாரம் இரு மாநில பிரச்சினையாகவே வெடித்தது.

இரு மாநில போலீஸ் இருதரப்பிலும் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. அதன் தலையீட்டால் முக்காலி அணைக்கு வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சக அனுமதி கிடைக்கவில்லை. அதே சமயம் முக்காலி அணை கிடக்கட்டும்; சித்தூர் அணை என்னாச்சு என்று கேரளப் பகுதி யிலேயே போராட்டங்கள் கிளம்பின.

முக்காலிக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் உள்ள அட்டப்பாடி கிராமங்களில் பெரும்பாலும் பழங் குடியினருடன் தமிழர்களே வசிக்கின்ற னர். முக்காலி அணை கட்டப்படுவதால் அங்கு செல்லும் பவானி வறண்டு பாதிக் கப்படும். சிறுவாணிக்கு குறுக்கே கட்டப் படும் சித்தூர் அணையை அணைத் திட்டத்திலேயே கொண்டு வருவதில்லை என்ற கருத்துகள் அட்டப்பாடியில் இருக்கும் தமிழர்களிடையிலேயே வலுக்க ஆரம்பித்தது. இந்த சூழ் நிலையில்தான் 2012-ல் திரும்ப தூசி தட்டப்பட்டது சிறுவாணிக்கு குறுக்கான சித்தூர் அணை விவகாரம்.

சித்தூர் அணை விஸ்வரூபம்

2012 மே மாதம் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னி தாலா அட்டப்பாடி பகுதிக்கு வந்து, நிலவரங்களை ஆய்வு செய்தார். இங்குள்ள மக்களின் நீர்த் தேவையை வலியுறுத்தி பழைய சித்தூர் அணை மட்டுமல்ல, சிறுவாணி சென்று பவானியில் கலக்கும் இடம் வரை சிறு, சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்ற பரிந்துரையை அரசுக்கு தந்தார். அது அந்த ஆண்டு ஜூன் மாதம் விஸ்வரூபம் எடுத்தது. சித்தூர் அணையில் ஒரு பெரிய அணையையும், அந்த ஆறுகளின் வழியோரங்களில் 12 தடுப்பணைகளும் கட்டி 6.5 டிஎம்சி தண்ணீரை எடுக்க திட்டமிட்டு அதற்கு நிதியும் அறிவித்தது கேரள அரசு. முல்லை பெரியாறுக்கு பழிவாங்கவே இந்த திட்டத்தை போட்டிருக்கிறது கேரள அரசு. இங்கே அணைகள் கட்டப் பட்டால் கோவை திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்படும்.

தவிர தற்போது அணை கட்ட திட்டமிட்டிருக்கும் அணைக்கு மேலேதான் கோவைக்கு நீர் வழங்கும் சிறுவாணி அணை உள்ளது. அது முழுக்க கேரள பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் அதை இஷ்டம் போல் திறந்துவிட்டு புதிய அணையை நிரப்பிக்கொள்ள மாட் டார்கள் என்று என்ன நிச்சயம் என்றெல்லாம் குரல் உயர்த்தினர் போராட்டக்காரர்கள்.

அதில் முழுமையாக பங்கேற்றது மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள். தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரத மருக்கு கடிதம் எழுதியதோடு, ‘இந்த அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளிக்கக்கூடாது’ என்ற கோரிக்கையையும் வைத்தார். தொடர்ந்து பல்வேறு கட்சிகள் தமிழக- கேரள எல்லை ஆனைகட்டி வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி, கோ.க.மணி தலைமையில் பாமகவினர் ஆனைகட்டியை தாண்டி சிறுவாணி பகுதிக்கு செல்ல அணிதிரண்டனர். இரு மாநில போலீஸாரால் தடுக்கப் பட்டனர்.

சிறுவாணி நதி ஓரங்களில் அணை கட்ட ஆய்வு செய்யாமல் கேரள அரசு ஒதுங்கிக் கொண்டது. அதற்குப் பிறகு தொடர்ந்து கேரள அரசு தரப்பிலிருந்து பல்வேறு கடிதங்கள் தமிழக அரசுக்கு சென்றுள்ளது. அதன் உச்ச மாகவே ஒரு தலைப்பட்சமாக மத்திய அரசின் நீர்ப் பாசன மதிப்பீட்டுக் குழு கேரளத்துக்கு அட்டப்பாடியில் அணை கட்ட அனுமதி கொடுக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.t

அட்டப்பாடி பகுதிகளில் ஒலிக்கும் தமிழர்களின் குரல் இதுதான்:

பவானி முக்காலி அணையானாலும், சிறுவாணி சித்தூர் அணையானாலும் சிறு, சிறு தடுப்பணைகள் கட்டவும், அதில் பாசன வசதி பெறவும்தான் கேரள அரசு திட்டமிட்டு வருகிறது. அதுவும் 3 அணைகள் சித்தூரிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான சிறுவாணி பகுதியிலும், 5 அணைகள் முக்காலியிலிருந்து கூட்டப்பட்டி வரையிலான பவானி பகுதியிலும் ஆகமொத்தம் 8 அணைகள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அதே சமயம் இன்றைக்கு வரை முக்காலி பகுதியிலோ, சிறுவாணி பகுதியிலோ ஒரு அதிகாரிகூட அணைகட்டும் ஆய்வுக்கு வரவில்லை என்பதே உண்மை. ஆனால் இந்த விவகாரத்தை இரு மாநிலங்களும் அரசியலாக்குகின்றன. இந்த விஷயத்தில் போராட்டம் செய்வது இங்குள்ள தமிழர்களையும், தமிழகத்தில் உள்ள கேரள மக்களையும் விரோத எண்ணத்தோடு அணுகும் முறையையே தூண்டிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்