தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கை 100 சதவீதம் இலக்கு எட்டப்படாமலே இருந்து வருகிறது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் பள்ளிகளை தவிர்த்து தனியார் பள்ளிகளில் இலவச 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்தப் பிரிவின் குழந்தைகளை மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்.
இந்த சட்டத்தின் கீழ், தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2015-16) மொத்தம் 3,673 பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் மொத்தம் 61,876 இடங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் வெறும் 39,329 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெற்றது.
மதுரை மாவட்டத்தில் இந்த சட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டில் 2,509 இடங்களில் 1,103 இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடந்தது. 1,406 இடங்கள் காலியாக இருந்தது. 2014-15-ம் ஆண்டில் 2519 இடங்களில் 1,795 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்தது. 724 இடங்கள் காலியாக இருந்தது. 2015-16-ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட 2,617 இடங்களில் 1,673 இடங்களில் மாணவர் சேர்க்கை நடந்தது. 944 இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் ஒருபுறம் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை இலக்கை நிறைவடையாமல் உள்ளதும், மற்றொருபுறம் இந்த சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் பெற்றோர் தவிப்பதும் தொடர்கிறது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். தனியார் பள்ளிகள், எல்கேஜி குழந்தைகளை சேர்க்க ஒரு கி.மீ., தூரத்திற்குள் வசிக்க வேண்டும் என உத்தரவு உள்ளது என தட்டிக் கழிக்கின்றனர்.
பெரும்பாலும், இந்த சட்டத்தில் எல்கேஜியில்தான் குழந்தைகள் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். தனியார் பள்ளிகள், 90 சதவீதம் நகரப் பகுதியில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியிலே உள்ளன. நலிவடைந்த பிரிவினர் தனியார் பள்ளிகள் அமைந்திருக்கும் 1 கி.மீ. தூரத்துக்குள் வசிக்க சாத்தியமில்லை.
இதனால் நலிவடைந்த பெற்றோர், இந்த சட்டத்தில் குழந்தைகளை சேர்க்க முடியாமல் தவிக்கின்றனர். அதனால், இந்த ஆண்டு இலவச 25 சதவீதம் இடஒதுக்கீடு மாணவர் சேர்க்கையில் 100 சதவீதம் இலக்கை பூர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பிரபல பள்ளிகளுக்கே முக்கியத்துவம்
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியது: இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் நூறு சதவீத இலக்கு எட்டாமல் இருப்பதற்கு பெற்றோர் பிரபல பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணம். மற்ற சாதாரண பள்ளிகள், மக்கள் மனதில் நிற்காததால் அந்த பள்ளிகளில் காலியிடங்கள் ஏற்படுகின்றன. எல்கேஜியில் ஒரு கி.மீ. தூரத்துக்குள் வசிக்கும் குழந்தைகளை சேர்ப்பது, இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தின் கொள்கை முடிவுகளில் ஒன்று. அதுபற்றி கருத்து கூற இயலாது என்றார்.
25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர 19 பள்ளிகளில் இன்று குலுக்கல்
மதுரை மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் எல்.கே.ஜி.யில் சேர 2,475 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் சேர மாணவர்களிடமிருந்து 2,106 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான 1,729 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 19 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
அதன்படி ஏழுமலை பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் பி.கே.என். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாதவூர் லெட்சுமி மெட்ரிக் பள்ளி, கீழவளவு ஸ்ரீபாலன் எவர்கிரீன் மெட்ரிக் பள்ளி, அவனியாபுரம் பி.எம்.எஸ்.வி. மெட்ரிக் பள்ளி, வில்லாபுரம் லிட்டில் டயமண்ட் மெட்ரிக் பள்ளி, எல்லீஸ்நகர் சிவகாசி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பசுமலை எம்.டி. பி.கே.என். மெட்ரிக் பள்ளி, குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கென்னட்ரோடு எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோசாகுளம் சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எம்.ஆர்.ஆர்.எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாரதா வித்யாவனம் (ம) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பி.டி.நகர் செயிண்ட் மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னசொக்கிகுளம் எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கே.கே.நகர் மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அனுப்பானடி எஸ்.டி.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 19 பள்ளிகளில் இன்று காலை 9.30 மணிக்கு குலுக்கல் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago