தேர்தலுக்காக 7 பேர் விடுதலை: காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கருத்து

By செய்திப்பிரிவு

நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ரங்கராஜன், பிரின்ஸ், ஜான்ஜாக்கப், விஜயதாரணி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால், அவர்களின் தூக்குதண்டனையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனால், இவர்கள் குற்றமற்றவர்களாக ஆகிவிட மாட்டார்கள். ஆனால், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதாக, சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இவர்களை விடுதலை செய்வது என்ற அறிவிப்பு தவறான முன் உதாரணமாகும். தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பாட்டார். அவருடன் சேர்த்து போலீஸார், பொதுமக்கள் என 18 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இவர்களின் குடும்பங்களுக்கு யார் ஆதரவு தெரிவிப்பது?

இதனால், தமிழகத்தில் குற்றங்கள் அதிகரிக்கும். யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற நிலை உருவாகிவிடும். கொலை செய்தால் அரசு விடுதலை செய்யும் என நினைக்கத் தோன்றுகிறது. தமிழக மக்களுக்கு எதிரான, இந்த அறிவிப்பு தினத்தை ஒரு கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE