வறட்சி காரணமாக தமிழகத்தை செழிப் பாக்கும் காவிரியாறு தண்ணீரின்றி வறண்ட பூமியாக மாறியதால், காவிரி பாசன பரப்புகளில் பயிர் சாகுபடி பாதிக் கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
காவிரி என்றாலே கர்நாடக மாநில அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை தர மறுப்பதும், இது தொடர்பாக நீண்ட ஆண்டுகளாக சட்டப் போராட்டங்களை தமிழக அரசு தொடர்வதும், நீர் மறுப்பு காரணமாக காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் பெரும் துயரங்களை சந்திப்பதும் நம் நினைவுக்கு வரும்.
வஞ்சித்த இயற்கை
ஆனால், இந்த ஆண்டு கூடுதலாக இயற்கை வஞ்சித்ததால் பருவமழை பொய்த்து எந்தாண்டும் இல்லாத அளவுக்கு காவிரி படுகை நீரின்றி வறண்ட பூமியாக மாறி விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு பெரும் கேள்விக் குறியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ஜீவ நதியாக விளங்கும் காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதியான 2,286 சதுர மைல் பகுதி, தண்ணீரின்றி வறண்ட நிலமாக மாறியுள்ளது.
16.45 லட்சம் ஏக்கர் பாசனம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய 4 அணைகள் நிரம்பிய பின்னரே, தமிழகத்துக்குள் வரும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது. மேட்டூர் அணையில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் டெல்டா விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி ஆகிய நெற் பயிர்களை முப்போகம் விளைவித்து வந்தனர். மேட்டூர் அணை கட்டப்பட்ட 1934-ம் ஆண்டு முதல் 82 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் ஜூன் 12-ம் தேதி அன்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 56 ஆண்டுகள் டெல்டா பாசனத்துக்காக குறிப்பிட்ட ஜூன் 12-ம் தேதி அன்று, காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், விவசாயிகள் ஆண்டு தோறும் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் பாதிப்படைந்து வருகின்றனர்.
காவிரி ஆற்றில் வண்டல் மண் வெடிப்பு நிலம், நடப்பாண்டின் வறட்சி யின் கோரத்துக்கு மவுன சாட்சியாய் விளங்குகிறது. வாழை, பப்பாளி, முருங்கை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நட்ட விவசாயிகள் நஷ்டத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். மாநிலம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலையும் செய்து இறந்த சம்பவங்கள் வேளாண் தொழிலின் சரிவை படம் பிடித்து காட்டும் வகையில் உள்ளன.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டி டெல்லியில் பட்டினி இருந்தும், எலியை திண்றும், நிர்வாணமாய் தரையில் உருண்டும், புரண்டும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு தீர்வு காண்ப தில் மத்திய அரசு காட்டும் மெத்தனம், ஒட்டு மொத்த தமிழக மக்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணீரில் விவசாயிகள்
இதுகுறித்து பண்ணவாடி பகுதி யைச் சேர்ந்த விவசாயி செல்வம் கூறியதாவது:
பருவ மழை பொய்த்ததால் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வறட்சி ஒட்டு மொத்த தமிழக விவசாயத்தையும் முடங்கியுள்ளது. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பப்பாளி செடி தலா ரூ.10 கொடுத்து, ஒரு ஏக்கரில் ஆயிரம் கன்றுகள் நட்டோம். சொட்டு நீர் பாசனம், ஆட்கூலி என ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் செலவு செய்த நிலையில், தண்ணீரின்றி மரங்கள் வாடி பயனற்று போயின.
இதேபோல, முருங்கை, வாழை தோட்டங்களும் தண்ணீரின்றி பட்டு போயின. கடனை பெற்று விவசாயம் செய்த ஒவ்வொருவருக்கும் பல லட்சம் ரூபாய் நஷ்டம் தலையில் இடியாய் விழுந்துள்ளது. விவசாயிகள் குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்ட நிலையில், கட்டிட வேலைக்கும், கூலி வேலைக்கும் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். வறட்சி நிவாரணம், வாங்கிய கடனுக்கு வட்டியை அடைக்கக் கூட போதுமானதாக இல்லை. மானிய கடனை ரத்து செய்யவும் அரசு முன் வரவில்லை என்று அவர் கூறினார்.
50.34 லட்சம் ஏக்கர் பாதிப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வறட்சி நிவாரணமாக ரூ.2,247 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள 16,682 வருவாய் கிராமங்களில், 13,305 வருவாய் கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 50 லட்சத்து 34 ஆயிரத்து 237 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் வீணாகியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
நடப்பாண்டு காவிரி ஆற்றில் தண்ணீ ரின்றி சேலம் முதல் கடைமடை பகுதி யான நாகப்பட்டினம் வரை விவசா யம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அதே போல, பிற ஆற்று பாசனம், கிணற்று பாசனம், ஏரி பாசனப் பகுதிகளிலும் தண்ணீரில்லாத காரணத்தால், விவசாய தொழில் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.
ஆறு, குளங்களை தூர்வார வேண்டும்
இதுபோன்ற சூழ்நிலையில், வருங்கால தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, மாநில அரசு முதல்வரின் பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் ஆறு, ஏரி, குளங்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த போர்வெல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கைகளால், குறைந்தபட்சம் வருங்காலத்திலாவது வறட்சியை எதிர்கொள்ளும் திறனை அரசும், விவசாயிகளும் பெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாகும்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு
மேட்டூர் அணையில் கடந்த 82 ஆண்டுகளில் 1964-ம் ஆண்டு 9.90 அடி நீர்மட்டம் என்பதே மிகக்குறைந்த அளவாக இருந்தது. அப்போது, அணையில் 1.6 டிஎம்சி நீர் இருந்தது. தற்போது அணையின் நீர் மட்டம் நேற்றைய நிலவரப்படி 25.14 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து 14 கன அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 5.72 டிஎம்சி-யாக உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago