குரூப் 1 மெயின் தேர்வு முடிவு வெளியீடு: ஏப்ரல் 7 - ம் தேதி நேர்முகத் தேர்வு

கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களுக்கு ஏப்ரல் 7-ம் தேதி நேர்முகத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளில் 25 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு பிப்ரவரியில் டி.என்.பி.எஸ்.சி. குருப்-1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றிபெற்ற சுமார் 1,300 பேருக்கு கடந்த அக்டோபர் 25, 26, 27-ம் தேதிகளில் சென்னையில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது. மதிப்பீட்டில் சிறு தவறுகூட வந்துவிடக்கூடாது என்பதற்காக விடைத்தாள்கள் 3 முறை மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், மெயின் தேர்வு முடிவு செவ்வாய்க்கிழமை காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) அறிந்துகொள்ளலாம்.

தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட மாக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். பொதுவாக, ஒரு காலியிடத்துக்கு 2 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு (காலியிடங்கள் 5-க்கு குறைவாக இருந்தால் ஒரு இடத்துக்கு 3 பேர்) அழைக்கப்படுவர். அந்த வகையில், நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் 60 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேர்முகத் தேர்வு ஏப்ரல் 7-ம் தேதி நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்தார். மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 900. நேர்முகத்தேர்வுக்கு 120 மதிப்பெண். இந்த இரண்டு தேர்விலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கட் ஆப் மார்க் தயாரிக்கப்படும். அதில் இருந்து இறுதியாக 25 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

காலியிடங்கள் விவரம்

வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) - 8, காவல்துறை துணை கண்காணிப்பாளர் - 4, வணிகவரி உதவி ஆணையர் - 7, மாவட்ட பதிவாளர் - 1, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் - 5.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகலாம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு தேர்வுசெய்யப்படுவோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவும், டி.எஸ்.பி. பணியில் சேருவோர் ஐ.பி.எஸ். அதிகாரியாகவும் பதவி உயர்வு பெறலாம்.

சொந்த மாநிலத்திலேயே (தமிழ்நாடு கேடர்) பணி ஒதுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசு பணியில் பணியாற்றிய காலத்துக்கும் உரிய பணிமூப்பு வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE