தூத்துக்குடி அனல் மின் நிலைய 3-வது யூனிட் மீண்டும் பழுது; சீரமைக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்
தூத்துக்குடியில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்த மான அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இந்த அனல்மின் நிலையத்தின் 3-வது யூனிட்டின் கொதிகலனில் வெள்ளிக்கிழமை திடீரென ஓட்டை விழுந்தது. இந்த ஓட்டை சனிக்கிழமை மாலை சரி செய்யப்பட்டது. இந்நிலையில் 2-வது யூனிட் கொதிகலனில் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பழுது ஏற்பட்டது. இந்தப்பழுது சரி செய்யப்படுவதற்கு முன்பே, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், 3-வது யூனிட்டில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
இரண்டு யூனிட்டுகளிலும் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடிக்கடி பழுது ஏற்படுவதால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
தமிழகம் மிகை மின் மாநிலமாக விரைவில் மாறும் என முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ள நிலையில், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் பழுது மின்வாரிய அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.