கலவரத்தில் தொடர்பில்லாதவர்களை காப்பாற்ற மத்திய அரசு உதவவில்லை: சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பியவர்கள் புகார்

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் அண்மையில் நேரிட்ட கலவரத்தைத் தூண்டியதாக கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட தமிழர்கள் வியாழக்கிழமை இரவு தாயகம் திரும்பினர். கலவரத்தில் தொடர்பில்லாதவர்களைக் காப்பாற்ற மத்திய அரசு உதவவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.

சிங்கப்பூரில் டிச. 8-ம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடியைச் சேர்ந்த ச. குமாரவேல் (34) உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சுமார் 34 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பள்ளத்துவிடுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் சரவணன், அன்பரசன் மகன் வேல்முருகன், தச்சம்பட்டியைச் சேர்ந்த சின்னப்பா மகன் கோவிந்தராஜ், பனங்குளம் பூபதிராஜா மற்றும் புதுக்கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த மேலும் இருவர் சிறையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைவாசமும், சவுக்கடியும் தண்டனையாக அளிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், அவர்களைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர், உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள வெட்டன்விடுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முருகானந்தம் (35) கூறியது: சிங்கப்பூர் சாலை விபத்தும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கலவரத்துக்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கலவரத்துக்குத் தொடர்பே இல்லாத எங்களைப் போன்றவர்களும் சிங்கப்பூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்.

கலவரம் நடந்த இடத்திலிருந்து எனது அறை வெகு தொலைவில் உள்ளது. கலவரத்தின்போது நான் எனது அறைக்கு அருகேயுள்ள கடையில் இருந்தேன். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கும். ஆனால், அதையெல்லாம் ஆய்வு செய்யாமல், டிசம்பர் 10-ல் என்னை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல தொடர்பே இல்லாத பலரையும் கைது செய்தனர்.

சிங்கப்பூர் போலீஸார் கலவரத்தில் நாங்கள் ஈடுபட்டதாகவும், அதை ஒப்புக்கொள்வதாகவும் அவர்களாகவே வாக்குமூலம் தயார் செய்தனர். இந்தியத் தூதரகத்திலிருந்து வந்த அதிகாரிகள் எங்களுக்கு ஆறுதல்கூட கூறவில்லை. சம்பவம் குறித்து எங்களிடம் எதையும் கேட்கவில்லை. எங்களது பெயர்களை மட்டும் கேட்டு குறித்துச் சென்றனர். ஆனால், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீனர்கள், வங்கதேசத்தினருக்கு இதுபோன்ற நிலை ஏற்படவில்லை. அவர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டிருந்தால் நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருக்க மாட்டோம். இனி அங்கு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறிதான்" என்றார்.

கருக்காகுறிச்சி தெற்குத் தெருவைச் சேர்ந்த ச. தினேஷ் கூறுகையில், "கலவரம் நடந்த இடத்தில் நான் இல்லை. எங்களைச் சந்திக்க வந்த இந்தியத் தூதரக அதிகாரிகள் எதையும் கேட்கவில்லை.

எங்களைக் காப்பாற்ற முயற்சி எடுக்கவில்லை. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நான் மீண்டும் சிங்கப்பூர் செல்ல முடியுமா எனத் தெரியவில்லை" என்றார்.

ஒருவரைத் தவிர 52 பேரும் தமிழர்கள்

கலவரத்தில் ஈடுபட்டதாக 34 பேரை கைது செய்துள்ள நிலையில், கலவரத்தைத் தூண்டிய தாகக் கூறி 53 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு, எழுத்துமூலமான வாக்குமூலம் பெற்று, கடும் எச்சரிக்கையுடன் அனைவரும் சிங்கப்பூரைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். ஏனைய அனை வரும் தமிழர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் வியாழக்கிழமை இரவு தமிழகம் வந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்