‘டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறப்பதை கிராம சபை தீர்மானம் கட்டுப்படுத்தாது’ என்று கடந்த 15-ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இது பல்வேறு தரப்பினர் இடையே பலத்த தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கே.சந்துரு விடம் பேசினோம். அவர் கூறியதிலிருந்து…
“நான் உயர் நீதிமன்றப் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எழுதிய சிறு கையேடு ஒன்றுக்கு ‘மதுக்கடைகளை சட்டப் படி ஒழிப்பது எப்படி?’ என்று தலைப்பிட்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் இதுவரை உயர் நீதிமன்றம் மதுக்கடைகளை ஆரம்பிப்பதை பல பகுதிகளில் தடை செய்ததைப் பற்றிய தீர்ப்பு களின் சுருக்கத்தையும், அதை எப்படி மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பயன்படுத் திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்தப் புத்தகம் வெளிவந்து கடந்த மூன்று வருடங்களில் நீதிமன்றங்களில் கொடுக்கப் பட்டுள்ள தீர்ப்புகளைப் பார்க்கும் போது அந்தப் புத்தகத்தையே கிழித்துப்போட வேண்டும் என்று தோன்றுகிறது. மதுக்கடைகளை மூடுவதற்குப் போராடும் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்புகள் இருந்த நிலை மாறி, மதுவிலக்கு என்ற அரசமைப்பு சட்டத்தின் கொள்கைப் பிரகடனத்தையே கேலிக்கூத்தாக்கும் வகையில் தற்போதைய செயல்பாடுகள் அமைந்துள்ளன.
கடந்த தேர்தலுக்கு முன்னால் கேரளாவில் காங்கிரஸ் அரசு மதுக்கடைகளை மூட கொள்கை முடிவெடுத்தபோது அதற்கு உச்ச நீதிமன்றமும் தனது ஒப்புதலை அளித்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி முன்னணி அரசு மீண்டும் மதுக்கடைகளை அனுமதிப்பதற்கான முடிவுகளை எடுத்து வருகிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் அரசு மதுவிலக்குக் கொள்கைகளை முழுமையாக அமல்படுத்தியிருப்பினும் அந்த செயல்களும் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டுள்ளன. தமிழ் நாட்டில் படிப்படியாக மதுக்கடை களை மூடுவோம் என்றுச் சொன்ன கட்சி, பதவியைப் பிடித்தாலும் மதுக்கடைகளைத் தொடர்ந்து நடத்துவது எப்படி என்றுதான் யோசித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நீதிமன்றங் களின் தலையீட்டால் ஒரு சில பகுதிகளில் மதுக்கடைகள் மூடப் பட்டன. மூடப்பட்ட வேகத்திலேயே அவை வேறுபகுதிகளில் திறக்கப் பட்டன. மதுவின்றி எந்த அரசும் இல்லை என்ற சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த கிராமமான கலிங்கப் பட்டியில் மதுக்கடையை மூடவைத்த பெருமை அங்குள்ள மக்களுக்கு உரித்தாகும். அந்த கிராமத்தின் கிராம சபை கலிங்கப்பட்டியில் மதுக்கடை வேண்டாமென்று தீர்மானம் நிறைவேற்றிய அடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றம் மக்கள் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கூறி அந்த மதுக்கடைக்கு மூடுவிழாவிற்கான தீர்ப்பை அளித்தது. அந்த அடிப்படையிலேயே ஏற்கெனவே பல தீர்ப்புகளை நீதிமன்றம் வழங்கியிருந்தது. (உதாரணம்: வடமலபுரம் கிராமம் 2013).
ஆனால் கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளை நீர்த்துப்போக செய்துவிட்டது. சில்லறை மதுபானக்கடைகளை அமைப்பதற்கான விதிகளின் கீழ் டாஸ்மாக் நிர்வாகம் எங்கு வேண்டுமானாலும் மதுக்கடை களை அமைத்துக் கொள்ளலாம் என்றும், கிராம சபைகளுடைய தீர்மானங்கள் கடைகள் அமைப் பதைக் கட்டுப்படுத்த முடியா தென்றும் தீர்ப்பளித்துள்ளது. இது மது ஒழிப்பிற்காகப் போராடும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தில் 47-வது ஷரத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவது அரசின் நெறிமுறைக் கொள்கையாக கூறப்பட்டிருந்தாலும் நடைமுறை யில் அது இன்றுவரை நிறைவேற் றப்படவில்லை. 1937-ம் வருடம் கொண்டு வரப்பட்ட மதுவிலக்கு சட்டத்தின் கீழேயே இயற்றப்பட்ட விதிகளின் அடிப்படையில் மதுபானக் கடைகள் தமிழக அரசு நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன.
சில்லறை வர்த்தக மதுபானக் கடைகளை எந்த இடத்தில் அமைக்கலாம் என்பதை இறுதியாக முடிவு செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சியாளருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது. கல்விக் கூடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இவற்றிற்கு அருகாமை யில் மதுபானக் கடைகள் அமைக் கப்படக்கூடாது என்று விதிகள் கூறுகின்றன. தடைசெய்யப்பட்ட தூரத்திற்கு அப்பால் எங்கு வேண்டுமானாலும் மதுபானக் கடைகளை அமைத்துக் கொள் வதற்கு டாஸ்மாக்கிற்கு தடங் கல்கள் ஏதுமில்லை. இச்சூழ்நிலை யில்தான் ஒரு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அந்த ஊராட்சி கிராம சபை தங்களது கிராமப் பகுதி களில் மதுபானக்கடை தேவை யில்லையென்றால் அந்த தீர்மானத் திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று கனகாபாய் வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதையொட்டியே கலிங்கப்பட்டி வழக்கும் இதர கிராமங்களிலிருந்து வந்த வழக்குகளிலும் இதுவரை தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆனால், கிராம சபைகளுக்கு மதுபானக்கடைகள் அமைப்பதை ஆட்சேபிப்பதற்கு அதிகாரமில்லை என்று கடந்த வாரம் உயர் நீதி மன்றம் கூறிய தீர்ப்பு மக்கள் தங்களின் தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்கு விரோதமாக அமைந்துள்ளது.
தற்போதை உயர் நீதிமன்றத் தீர்ப்பு சட்டப்படி சரி எனில் சரிதான். ஆனால், நீதிமன்ற தீர்ப்பு களைச் சட்டப்படி மட்டுமே அளிப்பது நீதியாகாது. அந்த தீர்ப்புகளுக்கு பின்புலமாக சமூகப் பார்வையும் மக்கள் நலனும் அமைய வேண்டும். இந்தத் தீர்ப்பும் மதுபானக் கடைகளை ஒழிப்பதற்கு உதவுவதற்கு பதில் அவற்றை ஆட்சேபணை இல்லாத இடங்களில் மாற்றி அமைப்பதற்கான தீர்ப்பாக மாறிவிட்டது.
நீதிமன்ற தீர்ப்புகள் ஒரே முகமாக பொதுநலன் கருதி வெளியிட்டு வந்த காலங்கள் மாறிவிட்டன. அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பாட்டர் ஸ்டுவர்ட் கூறிய கருத்துதான் தற்போதைய சூழலில் நினைவுக்கு வருகிறது. “எங்களுடைய தீர்ப்புகளெல்லாம் பேருந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளாகிவிட்டன. எந்த நாளில் வழங்கப்பட்டதோ அந்த நாளைக்கும் அந்த வழித்தடத்துக்கும் மட்டுமே அவை பொருந்தும் என்றாகிவிட்டது” என்று ஸ்டுவர்ட் கூறினார்.
மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி பூரண மது விலக்கு வேண்டுமென்றால் நீதி மன்றங்களை நம்ப வேண்டாம், நம்பவும் முடியாது. சட்டப் பேரவைகளையே நாடமுடியும் என்பதுதான் சமீபத்திய தீர்ப்பு நமக்கு சொல்லும் படிப்பினை” என்றார் நீதியரசர் சந்துரு.
மக்கள் நீதிமன்றங்களை வெகுவாக நம்பியிருக்கிறார்கள். அந்த நிலை மாறிவிடுமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago