தமிழை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக்கக் கோரி வழக்குரைஞர்கள் மூவர் காலவரையற்ற உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் 3 பேர் உயர்நீதிமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கக் கோரும் 2006-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உயர் நீதிமன்றங்களின் மொழி ஆங்கிலம் என இருப்பதை திருத்தம் செய்து அந்தந்த மக்களின் தாய்மொழியே உயர் நீதிமன்றங்களின் மொழி என மாற்றம் செய்ய வேண்டும்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநில உயர் நீதிமன்றங்களில் 1961-ம் ஆண்டிலேயே அந்த மாநிலங்களின் மொழியான இந்தியை உயர்நீதிமன்ற மொழியாக மத்திய அரசு ஆக்கியது. ஆனால் தமிழுக்கு மட்டும் தடை விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

வழக்குரைஞர்கள் கு.ஞா.பகத்சிங், மு.வேல்முருகன் மற்றும் இறை.அங்கயற்கண்ணி ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை காலை தொடங்கினர்.

போராட்டம் குறித்து வழக்குரைஞர் பகத்சிங் பேசும்போது, ராஜஸ்தான், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கீழமை நீதிமன்றங்களில் அவர்கள் தாய்மொழியிலேயே சாட்சியங்கள் முதலானவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டிலும் கீழமை நீதிமன்றங்களில் தமிழை கட்டாய மொழியாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று தமிழை சென்னை உயர்நீதிமன்ற மொழியாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களின் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாகும் வரையிலான இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE