தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலின் மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் 33 பேரையும், தமிழகத்தின் கியூ பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர்.
இதனிடையே, கடல் கொள்ளை தடுப்புப் பணிக்காகவே ஆயுதங்களை வைத்திருந்தோம் என்று அமெரிக்க கப்பலின் உரிமையாளர் வில்லியம் எச்.வாட்சன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கடல் பகுதிக்கு ஆயுதங்களுடன் வந்த அமெரிக்காவின் அட்வன் போர்ட் என்ற தனியார் கடல் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 11-ம் தேதி இரவு மடக்கி பிடித்தனர். அக்கப்பல் கடந்த 12-ம் தேதி முதல் தூத்துக்குடி துறைமுகத்தின் 2-வது கப்பல் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயிற்சி பெற்ற தனியார் பாதுகாவலர்கள், கப்பல் மாலுமிகள் மொத்தம் 33 பேர் இருந்தனர். மேலும், அதிநவீன துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் இருந்தன. இது தொடர்பாக தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீஸார் முதலில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சிறைப்பிடித்து வைக்கப்பட்டு உள்ள கப்பலில் கியூ பிரிவு எஸ்.பி. பவானீ்ஸ்வரி கேப்டன் உள்ளிட்டோரிடம் வியாழக்கிழமை தீவிர விசாரணை நடத்தினார். மேலும், கப்பலில் உள்ள தகவல் தொடர்பு சாதனங்களை ஆய்வு செய்து, இந்த கப்பல் இதற்கு முன்பு எங்கெல்லாம் சென்றுள்ளது என்ற விவரங்களையும் சேகரித்தார்.
கப்பலில் ஆயுதம் வைத்திருந்த தற்கான ஆவணங்களும் அவர்களிடம் முறையாக இல்லை என அதிகாரிகள் கூறினர். இதனால் விசாரணை முடிவு பெறாமல் தொடர்ந்து வருகிறது. கியூ பிரிவு போலீஸார் இரண்டு நாள்களாக நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கக் கப்பல் ஊழியர்கள் 33 பேரை கியூ பிரிவு போலீஸார் இன்று கைது செய்தனர். நீதிபதியின் அனுமதி பெற்று, அவர்களை சென்னை புழல் சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விஷயத்தில் மத்திய அரசின் உயர்மட்ட உளவு அமைப்பான ரா பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது.
ரா பிரிவும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் இந்த கப்பல் தொடர்பாக மேலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மத்திய அரசோ, விசாரணை அமைப்புகளோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும். அதுவரை யூகங்களே உலா வரும்.
கப்பல் உரிமையாளர் பேட்டி
இதனிடையே, கப்பலின் உரிமையாளரான அட்வன்போர்ட் நிறுவனத் தலைவர் வில்லியம் எச் வாட்சன், வாஷிங்டனில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சீமேன் கார்டு ஓகியோ கப்பலில் இருந்த ஆயுதங்கள் சட்டப்பூர்வமாக வாங்கப்பட்டு லைசென்ஸ் பெறப்பட்டவை ஆகும். கடல் கொள்ளை தடுப்புப் பணிக்காகவே இந்த ஆயுதங்கள் கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்திய கடல் எல்லைக்குள் நுழையும் நோக்கம் எங்களுக்கு இல்லை. எரிபொருள் நிரப்பவே தூத்துக்குடி பகுதிக்கு வந்தோம். அதுவும் எங்கள் கப்பல் 12 கடல் மைல் தொலைவுக்கு அப்பால்தான் நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய கடல் எல்லைக்கு வெளியேதான் டீசல் வாங்கி நிரப்பினோம்.
அப்போது, இந்திய கடலோர காவல் படை எங்கள் கப்பலை அணுகி தங்களுடன் வருமாறு அழைப்பு விடுத்தது. அவர்கள் எங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மென்மையாகவே அழைப்பு விடுத்தார்கள்.
தூத்துக்குடி துறைமுகத்துக்கு எங்கள் கப்பல் வந்த பின்னரே ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்தினர். நாங்கள் சட்டவிரோதமாக எந்த செயலிலும் ஈடுபடவில்லை. எரிபொருள் வாங்கவே தூத்துக்குடி பகுதிக்கு வந்தோம். இதற்கு முன்பும் தூத்துக்குடி துறைமுகத்துக்கு சீமேன் கார்டு ஓகியோ கப்பல் பலமுறை சென்றுள்ளது. ஆனால், அப்போது ஆயுதங்கள் கப்பலில் எடுத்துச் செல்லப்படவில்லை. இந்தமுறை கடல்கொள்ளை தடுப்பு பணிக்காகவே ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு எங்கள் கப்பல் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். கப்பலிலேயே மாலுமிகளிடமும் பாதுகாவலர்களிடமும் மணிக்கணக்கில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நாங்கள் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு அளித்து வருகிறோம். எங்கள் நிலைமையை இந்திய தரப்பினர் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையும் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஆனால், அமெரிக்க அரசு நேரடியாகத் தலையிடவில்லை. அட்வன்போர்ட் நிறுவனம் சார்பில் இன்னும் சில நாள்களில் இந்தியாவுக்கு சட்ட நிபுணர்கள் செல்ல உள்ளனர். அவர்கள் வழக்கு விசாரணைக்கு உதவுவார்கள்” என்றார் அவர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago