தமிழகத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை மிகப்பெரிய வர்த்தக மாக மாறியுள்ளது. இதனால் லாபம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் சிலர், முறையான உரிமம் பெறாமல் தரமற்ற குடிநீர் கேன்களை விற் பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சிராஜ் என்பவர், ‘தி இந்து - உங்கள் குரல்’ தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு கூறியதாவது:
பெரும்பாலான ஹோட்டல்கள், வீடுகளில் குடிநீர் கேன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், குடிநீர் கேன்களின் மீது நிறுவனத் தின் பெயர், காலாவதி தேதி, விலை ஆகியவை சரிவர குறிப்பிடப் படுவதில்லை. குடிநீர் கேன்கள் அழுக்கு படிந்தும், சரிவர அடைக் கப்படாமலும் உள்ளன. எது தரமான குடிநீர்? எது தரமற்ற குடிநீர்? என்று தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐஎஸ்ஐ தரச்சான்று கட்டாயம்
இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்ய வேண்டுமானால், இந்திய தர நிர்ணய அமைவனத்திடமிருந்து ஐஎஸ்ஐ தரச் சான்று பெறுவது கட்டாயமாகும். அவ்வாறு சான்று பெற விண்ணப்பிக்கும் நிறுவனங் களுக்கு, பல கட்ட பரிசோதனை களுக்கு பிறகே உரிமம் அளிக்கப் படும். அந்த உரிமம், ஓராண்டு காலத்துக்கு செல்லுபடியாகும். பின்னர், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிறுவனங்கள் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக் கையிலான கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,351 நிறுவனங்கள் கேன் குடிநீரை விற்பனை செய்ய உரிமம் பெற்றுள்ளன.
தரமற்ற குடிநீரின் பாதிப்புகள்
பெரும்பாலான குடிநீர் நிறுவ னங்கள் நிலத்தடி நீரைத்தான் முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள் ளன. அளவுக்கு அதிகமான காப்பர், இரும்பு, அலுமினியம், குளோரைடு போன்றவற்றால் தரம் பாதிக்கப்பட்ட குடிநீரைப் பருகினால், வாந்தி, உயர் ரத்த அழுத்தம், முடக்குவாதம், இதயம், கிட்னி, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும், நச்சுப் பொருட்களான கேட்மியம், பாதரசம் போன்றவை குடிநீரில் கலந்திருப்பின் அவை மூளை, நுரையீரல், நரம்பு மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஐஎஸ்ஐ முத்திரையுள்ள தரமான குடிநீரைப் பருகுவது நல்லது.
குடிநீர் கேன்களை வாங்கும் போது அவை நன்றாக சீல் செய்யப்பட்டு கசிவின்றி இருக்கிறதா, உற்பத்தி மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தேதி உள் ளதா என்று பார்க்க வேண்டும். காலாவதியான குடிநீர் கேன்களை வாங்கக் கூடாது. அழுக்கு படிந்த நிலையில் உள்ள கேன்களை வாங்காமல் தவிர்க்க வேண்டும்.
போலியை கண்டறிவது எப்படி?
குடிநீர் கேன்களுக்கான ஐஎஸ்ஐ குறியீடு IS:14543 என்பதாகும். ஒவ்வொரு குடிநீர் கேனிலும் ஐஎஸ்ஐ முத்திரைக்கு மேல் இது குறிப்பிடப்பட்டிருக்கும். இதுதவிர, ஐ.எஸ்.ஐ முத்தி ரைக்குக் கீழ் CML-XXXXXXX (7 அல்லது 10 இலக்க லைசென்ஸ் எண்) குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த எண்ணைப் பயன்படுத்தி குடிநீர் நிறுவனம் முறையான உரிமம் பெற்றுள்ளதா என்பதை அறியலாம்.நுகர்வோர் வாங்கும் கேன் குடிநீர் தரமானதுதானா என்பதைக் கண்டறிய www.bis.org.in என்ற இணையதளத்தில் Product Certification--> Online Infor mation--> Application/ Licence Relat ed--> Status of license என்பதை கிளிக் செய்து, 7 இலக்க லைசென்ஸ் எண் அல்லது குடிநீர் கேன் நிறுவன பெயரை பதிவிட் டால், அந்தநிறுவனத்தின் முழு முகவரி, உரிமம் காலாவதியாகும் தேதி, தற்போது செயல்பாட்டில் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங் களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்துடைப்புக்காக ஆய்வுகள்
இதுபற்றி கன்சியூமர் அசோசி யேஷன் ஆஃப் இந்தியா அமைப் பின் துணை இயக்குநர் பி.ஆர்.கிருஷ்ணன் கூறும்போது, “தர மற்ற குடிநீர் கேன்கள் குறித்து ஆய்வு செய்வதில், பிஐஎஸ் அதிகாரிகள், உணவு பாதுகாப் புத்துறை அதிகாரிகள் என இரு தரப்பினருக்கும் பங்கு உள்ளது. ஆனால் பெருகி வரும் குடிநீர் நிறுவனங்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆய்வுகள் நடத்தப் படுவதில்லை. கண்துடைப்புக்காக சில ஆய்வுகளை மட்டும் நடத்தி வருகின்றனர். அவ்வாறு இல்லாமல், அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண் டும்” என்றார்.
புகார் தொலைபேசி எண்கள்
தாங்கள் வாங்கும் பொருட் களில் ஐஎஸ்ஐ முத்திரையை உரிய அனுமதியின்றி பயன் படுத்தும் நிறுவனங்கள், சந்தேகப் படும் குடிநீர் கேன் நிறுவனங்கள் மீதான புகார்களை 044-22541442, 22542519, 22541216 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டோ, sro@bis.org.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரி விக்கலாம். அவ்வாறு புகார் தெரி விப்போர் குறித்த ரகசியம் காக்கப் படும். புகார் அடிப்படை யில் மேற்கொள்ளப்படும் ஆய்வில், முறையான தரச்சான்று பெறாமல் நிறுவனம் இயங்கி வருவது கண்டறியப்பட்டால் தொடர்பு டையவர்களுக்கு ரூ.50,000 வரை அபராதமும், ஓராண்டுவரை சிறை தண்டனையும் வழங்க சட்டம் உள்ளது என இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago