மனதை மயக்கும் சூழல் சுற்றுலாவுக்கு குவியும் பயணிகள்: வாட்டும் கோடைக்கு வேகமெடுக்கும் பரளிக்காடு

By கா.சு.வேலாயுதன்

பவானிக்கு குறுக்காக கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையின் பின்பகுதியில் உள்ளது பரளிக்காடு. வனப்பிரதேசமான இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறையினர் கட்டுப்பாட்டில் நடந்து வருவது சூழல் சுற்றுலா. தமிழகத்திலேயே வனத்துறையினர் கண்காணிப்பில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் ஒரே சூழல் சுற்றுலா தலமான இங்கு வாட்டும் கோடையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.

மாசுபடாமல் எங்கும் கொட்டி கிடக்கும் இயற்கை வளம், காணுமிடமெல்லாம் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரம் வரை சுத்தமான தண்ணீர் என்பதெல்லாம் தற்போது வெகு அரிதாய் கிடைக்கும் பொக்கிஷங்களாக மாறிவிட்டன. இப்படி ஒரு மிக அரிய பொக்கிஷம் தான் மேற்குத்தொடர்ச்சி மலையில் இன்னும் இயற்கை மாறாமல் இருக்கும் பரளிக்காடு.

மனம் மயங்கும் கொஞ்சும் இயற்கை எழில், தூய்மையான காற்று, அடர்ந்து வளர்ந்த மரங்கள், மலை முகடுகளில் வளைந்து நெளிந்து நளினமாய் ஓடும் ஆறு, இதில் தாகம் தீர்க்கும் வனவிலங்குகள், மண் மனம் மாறாத பழங்குடியின மக்கள் என முற்றிலும் இயற்கை அன்னையின் அரவணைப்பால் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகில் நிரம்பி உள்ளது பரளிக்காடு.

மறக்கமுடியாத அனுபவத்தோடு, உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் பயணம் மேற்கொள்ள விரும்புவோர்களுக்கு பரளிக்காடு சரியான தேர்வாக இருக்கும் என்பது இங்கு வந்து செல்வோரின் கருத்தாக இருக்கின்றது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியின் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த மாட்டோம் என்ற வாக்குறுதியுடன், மது மற்றும் புகைபிடிக்க மாட்டோம், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம், போன்ற சில கட்டுபாடுகளை ஏற்கிறோம் என உறுதியளித்து வனத்துறையிடம் முன்கூட்டியே பதிவு செய்து கொண்டால் பரளிக்காட்டிற்கு சுற்றுலா செல்ல தடையில்லை.

காட்டு வழி பயணத்திற்கும் அங்கு பகல் பொழுது முழுவதும் ரசித்து மகிழவும் பாதுகாப்பிற்கு வனத்துறையும் உறுதுணையாக பழங்குடியின மக்களும் உத்தரவாதம் அளிக்கின்றனர்.

தமிழக - கேரள எல்லையோரம் பில்லூர் அணைப்பகுதியில் அமைந்துள்ள பரளிக்காட்டுக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் 35 கிலோமீட்டர் தூரம் பயணித்து காரமடை என்ற இடத்தை அடையலாம். பின்பு அங்கிருந்து நகரங்களின் அடையாளங்கள் சட்டென மறைந்து அடர்ந்த மலைக்காடுகள் வழியே மீண்டும் 34 கிலோமீட்டர் செல்ல வேண்டும். வழியெங்கும் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகை ரசித்தபடி பயணித்தால் பரளிக்காடு வந்தடையும். அங்கு சென்றடைந்தவுடன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளூர் மலைவாழ் மக்கள் சூடான சுக்குகாப்பி கொடுத்து வரவேற்பதோடு சிறிது ஓய்வுக்கு பின் ஆளை மயக்கும் பரிசல் பயணத்திற்கு தயாராகுமாறு தெரிவிக்கின்றனர்.

பில்லூர் அணையின் பின்புறம் பெரும் ஏரி போல் தேங்கி நிற்கும் பவானி ஆற்று நீரில் பயணிக்க 16 பரிசல்களும் 18 ஓட்டுனர்களும் தயார் நிலையில் இருக்க, வழக்கமான மூங்கில் பரிசலாக அல்லாமல் பாதுகாப்பிற்காக ஃபைபரால் செய்யப்பட்ட பரிசலில் ஏறும் பெரியவர்கள் அனைவருக்கும் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிவிக்கபடுகிறது.

இப்பரிசல்களை இயக்கும் வனத்துறையால் நியமிக்கப்பட்ட உள்ளூர் பழங்குடியின இளைஞர்கள் பரிசலை இயக்கி கொண்டே அப்பகுதியின் காடு, வனவிலங்குகள், தங்களின் வாழ்க்கை முறை பற்றி சுற்றுலா பயணிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் சுவைபட விவரிக்கின்றனர். பயணத்தின் போதே கரையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளையும், தாகம் தீர்க்க வரும் மான் மற்றும் காட்டெருமை கூட்டங்களையும் கண்டு ரசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

சுமார் 2 மணிநேர பரிசல் பயணத்திற்கும் பின்னர் பசுமை நிறைந்த காட்டுக்குள் சற்று இளைப்பாறினால், மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடி இன மக்களின் கலாச்சார முறைப்படி தயாரிக்கப்பட்ட சுவையான உணவு அங்குள்ள பெண்களால் வழங்கப்படுகிறது. இதில் ராகி களி, கீரை, நாட்டுக்கோழிக்கறி, தயிர்சாதம், சப்பாத்தி, பழங்கள் என பரிமாறப்படுகிறது. இதன் பின்னர் ஆற்றை ஒட்டிய பகுதியில் வனத்தை அறிந்த பழங்குடியினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்போடு காட்டுக்குள் ட்ரெக்கிங், இதனையடுத்து ஆளை மயக்கும் ரம்மியமான அத்திக்கடவு என்னும் பகுதியில் ஆற்றில் குளிக்க அனுமதி. ஆனந்த குளியல் முடிக்க மாலை ஐந்து மணியாகியதும் வாழ்வில் என்றுமே மறக்க இயலாத சூழல்சுற்றுலா நிறைவடைகிறது.

இந்த ஒருநாள் இயற்கையோடு இணைந்து வாழ பெரியவர்களுக்கு ரூ. 500, பன்னிரண்டு வயதிற்கு குறைவானவர்களுக்கு ரூ. 400 [ உணவு செலவு உட்பட ] வனத்துறையால் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வாரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரு தினங்களில் மட்டுமே அனுமதி என்பதோடு இச்சூழல் சுற்றுலாவிற்கு ஒரு வாரம் முன்பே வனத்துறையிடம் முன்பதிவு செய்வது அவசியம்.

சொந்த வாகனத்தில் வருவோர் கார் மற்றும் வேன்களில் மட்டுமே பயணிக்க அனுமதி. சுற்றுலா வருபவர்களிடம் பெறப்படும் கட்டணத்தொகை செலவு போக முழுவதுமாக அங்குள்ள பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற மேம்பாட்டு பணிகளுக்கு மட்டுமே வனத்துறையால் செலவிடப்படுகிறது என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

நகர வாழ்வின் பரபரப்பில் இருந்து விலகி, சுற்றிலும் மலைகள் சூழ, சுத்தமான காற்றை சுவாசித்து, இதமாய் தூய மலைக்காட்டு நீரில் குளித்து, சிறு பயத்தோடு வனவிலங்குகளை ரசித்து, பழங்குடியினரின் சத்தான உணவுகளை சுவைத்து, அமைதியாய் இயற்கையோடு ஒன்றியிருக்கும் சுகம் பரளிக்காட்டில் கிடைப்பதாக அனுபவித்து கூறுகின்றனர் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்