தமிழகத்தில் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் பெரும்பாலும் அதில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்று வந்திருக்கிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பதவி வகித்த சி.பெருமாள் மறைவு காரணமாக நடைபெறவுள்ள ஏற்காடு தொகுதி இடைத் தேர்தல், பரபரப்புக்கு குறைவில்லாத ஒரு இடைத்தேர்தலாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமே இல்லை.
பதினான்காவது சட்டசபை அமைந்த பிறகு நடைபெறும் இத்தேர்தல், பல கட்சிகளுக்கு, குறிப்பாக, தேமுதிகவு-க்கு, மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அக்கட்சிகள், பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தங்களது பலத்தைச் சோதித்துப் பார்த்து கொள்வதற்கான வாய்ப்பை இது ஏற்படுத்திக் கொள்ள உதவும்.
பலப்பரீட்சை
இந்த இடைத்தேர்தல், பல கட்சிகளுக்கு, குறிப்பாக தே.மு.தி.க-வுக்கு தங்களது பலத்தைச் சோதித்துப் பார்த்துக் கொள்ள வாய்ப்பாக அமையும். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இந்த தேர்தல் நடைபெறவுள்ளதால், முன்னெப்போதும் இல்லாத ஒரு பரபரப்பான இடைத்தேர்தலாக, அமையும் என்பது தெரிந்ததே.
இடைத்தேர்தல் நெருங்கி வந்தாலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சில முக்கிய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை மறைமுகமாகத் தொடங்கிவிட்டன.
பணிகளில் முந்திய திமுக
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே, நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தி.மு.க தொடங்கிவிட்டது. பொதுத்தேர்தல் செலவுக்கான நிதி வசூலை அக்கட்சியினர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர். இது மட்டுமின்றி, அக்கட்சியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டமும் நடைபெற்றது. அதில், 2014 பொதுத் தேர்தல் பற்றி முடிவெடுக்க கட்சித் தலைவர் கருணாநிதிக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகனுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வை எதிர்க்க எந்தெந்த பிரச்சினைகளை கையில் எடுப்பது என்பது பற்றிய வியூகம் வகுக்கப்பட்டது.
காங்கிரஸ்-தேமுதிக
இதற்கிடையே, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிய திமுக-வும் காங்கிரஸ் கட்சியும், தற்போது, நெருங்கி வருவது போல் தோன்றுகிறது. நாடாளுமன்ற மேல் சபை தேர்தலின்போது, திமுகவுக்குத் தண்ணி காட்டிய காங்கிரஸ், இறுதியில் தேமுதிகவை ஆசைகாட்டி பரிதவிக்கவிட்ட பிறகு, நீண்ட கால நட்பான திமுகவுடன் கைகோர்த்து, கருணாநிதியின் மகள் கனிமொழி கரைசேர உதவியது.
ஆயினும், மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரசில் கணிசமான ஆதரவாளர்களைப் பெற்றவர்களில் ஒருவரான ஜி.கே. வாசன், தேமுதிகவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. மறைந்த அவரது தந்தை மூப்பனாரின் நினைவுநாளில், வாசனை, விஜயகாந்த் சந்தித்துப் பேசியதை சிலர், இருகட்சிகளும் நெருங்கி வருவதற்கான அறிகுறியாகவே பார்க்கிறார்கள். அதேநேரத்தில், வாசன் ஆதரவாளரான, யுவராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது முதல், வாசனுக்கும் கட்சி மேலிடத்துக்கும், குறிப்பாக ராகுல் காந்திக்கும் இடையே, லேசான புகைச்சல் இருந்து வருகிறது. தமிழ்மாநில காங்கிரசுக்கு மீண்டும் வாசன் உயிர்கொடுக்கவும் கூடும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
"காங்கிரசை நம்ப தயார் இல்லை"
அதே நேரத்தில், தேமுதிகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அடித்துக் கூறுகின்றனர் கேப்டன் கட்சியினர். மேல்சபை தேர்தலின்போது கடைசி நிமிடத்தில் திமுக-வின் பக்கம் காங்கிரஸ் சேர்ந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆயினும், இடைத்தேர்தலில் தேமுதிக பங்கேற்பது உறுதி என்றும் தெரிவிக்கிறார்கள். இது பற்றிய அறிவிப்பினை தூத்துக்குடியில் நடைபெறவுள்ள கட்சிக் கூட்டத்தில் விஜயகாந்த் தெரிவிக்கக் கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கட்சித் தலைவர்கள் கூறுகிறார்கள்.
மோடி... ஜெயா மௌனம்
இது ஒரு புறமிருக்க, தமிழக முதல்வரின் நீண்ட கால நண்பரான நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் திட்டமிடல் குழுத் தலைவராக மோடி அறிவிக்கப்பட்டபோது அவருக்கு உடனே வாழ்த்துக்களைச் சொன்ன ஜெயலலிதா, முன்னவர், பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பல நாள்கள் ஆகியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக இதுவரை செய்தி வெளியாகவில்லை.
தமிழகத்தில் நாற்பதும் நமக்கே என்று தொண்டர்களிடம் வலியுறுத்தி வரும் அவர், கடந்த திங்கள்கிழமை, நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களின் பட்டியலை வெளியிட்டதன் மூலம் அவரும் லேட்டஸ்டாக களத்தில் குதித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட நபர்களும் விறுவிறுப்பாக களத்தில் இறங்கி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைத் தொடங்கிவிட்டனர். மோடிக்கு வாழ்த்து சொன்னால் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகும் வாய்ப்பு உள்ளது. எனவே, தனது வியூகத்தை அதிமுக கவனமாக வகுக்கும் என்று கட்சியினர் கூறுகிறார்கள். தன்னை சந்தித்த பத்திரிகையாளர் சோவுடன் கூட இது பற்றி அவர் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவதை விரும்பவில்லை என்றே கட்சியினர் கூறுகின்றனர். அனைத்துக் கட்சியினரிடம் இருந்து ஒதுங்கியிருக்கும் பா.ம.க,வுக்கு ஓரளவு செல்வாக்கு இருந்தாலும் இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றே சொல்லப்படுகிறது.
ஆயினும், அதிமுகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்று அவர் சில தினங்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருப்பது அரசியல் நோக்கர்களை சிந்திக்க வைத்துள்ளது. ஏனெனில், திடீர் முடிவுகளுக்குப் பெயர் போன அவர், திமுக-வுடன் கைகோர்த்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு நிலை வந்தால், விடுதலைச் சிறுத்தைகள் அந்த கூட்டணியில் நீடிப்பதை விரும்பமாட்டார்கள்.
அதிமுக, தேமுதிக, மற்றும் திமுக இடையே மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது. மற்ற சிறிய கட்சிகள், யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ, அதுவே 2014 தேர்தலிலும் தொடரும் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்து.
குழப்பத்தில் தேர்தல் ஆணையம்
செப்டம்பர் இறுதியில் ஏற்காடு இடைத்தேர்தலை, நடத்த முதலில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அது தள்ளிப் போனது. மேலும், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மத்தியில் தொடங்கும் என்பதால், அது முடியும் மாதமான டிசம்பர் வரை பொறுத்திருக்கலாமா என்றும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தெரிய வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago