பார்வையற்ற மாணவர்கள் போராட்டம்: ஜெ. அணுகுமுறை மீது ராமதாஸ் சாடல்

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கிவைக்க பல மணி நேரம் ஒதுக்க முடிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால், பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள பார்வையற்ற பட்டதாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் உண்ணாவிரதம் மற்றும் மறியல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். அக்கறையுடனும், அரவணைப்புடனும் செயல்பட்டு இவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டிய அரசு, பொறுப்பின்றி செயல்பட்டு பிரச்சினையை தீவிரப்படுத்தி வருகிறது.

பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவையோ அல்லது அதிக செலவு பிடிப்பவையோ அல்ல. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை பார்வையற்றவர்களுக்கு மட்டும் 60 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும், மற்ற அரசு வேலைவாய்ப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆகியவை தான் அவர்களின் கோரிக்கைகளில் முக்கியமான சிலவாகும்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ச்சி மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 35% மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் சட்ட சிக்கலோ அல்லது வேறு பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை.

அதேபோல் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் அரசுக்கு ஆண்டுக்கு சில கோடிகள் கூடுதல் செலவு ஆவதைத் தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா தங்களை நேரில் அழைத்துப் பேச வேண்டும் என்று பார்வையற்றவர்கள் கோரி வருகின்றனர். ஆனால், இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கி வைக்க பல மணி நேரம் ஒதுக்க முடிந்த முதலமைச்சரால், பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளைக் கேட்க சில நிமிடங்கள் ஒதுக்க முடியவில்லை.

மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது தான் ஜனநாயக ஆட்சியாகும். இதை உணர்ந்து, வாழ்வாதாரம் கோரி போராடும் பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் மாணவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE