எம்ஜிஆரின் அபூர்வ புகைப்படங்கள், தகவல்களை ஆவணப்படுத்தும் ஆசிரியர்: 100 பள்ளிகளில் கண்காட்சி நடத்த திட்டம்

By ரெ.ஜாய்சன்

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அவர் குறித்த அபூர்வ புகைப்படங்கள், தகவல்களை ஆவணப்படுத்தி வருகிறார் தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற வரலாற்று ஆசிரியர்.

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் வே.குப்புசாமி (69), வரலாற்று ஆசிரியர். தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகளும், தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 ஆண்டுகளும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பழங்கால பொருட்கள் சேகரிப்பு

வரலாற்று ஆசிரியர் என்பதாலோ என்னவோ அரிய வரலாற்று பொக்கிஷங்களை சேகரித்து பாதுகாப்பதில் குப்புசாமிக்கு அலாதி பிரியம். ஏராளமான பண்டைய கால பொருட்களை சேகரித்து தனது இல்லத்தையே வரலாற்று களஞ்சியமாக மாற்றியுள்ளார்.

இது மட்டுமின்றி மகாத்மா காந்தி தொடங்கி அப்துல்கலாம் வரை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த தலைவர்களின் அரிய புகைப்படங்கள், அவர்களை பற்றிய முக்கிய தகவல்கள், ஆவணங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

அபூர்வ புகைப்படங்கள்

தனது மனம் கவர்ந்த தலைவர்களில் ஒருவராகவும், தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவருமான எம்ஜிஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் ஆவணப்படுத்தியுள்ளதுடன், அவரது அபூர்வ புகைப்படங்களையும் சேகரித்து வைத்துள்ளார்.

எம்ஜிஆர் பங்கேற்ற சினிமா நிகழ்ச்சிகள், விருது பெறும் விழாக்கள், பாராட்டு விழாக்கள், அரசியல் கூட்டங்கள், உலக மற்றும் தேசியத் தலைவர்களுடன் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த படங்கள், அமெரிக்காவுக்கு அவர் சிகிச்சைக்கு சென்ற போதும், சிகிச்சை முடிந்து அங்கிருந்து திரும்பிய போதும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இறுதிச் சடங்கு நிகழ்ச்சி போன்ற பல முக்கிய நிகழ்வுகளை புகைப்படங்களாக ஆவணப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும், எம்ஜிஆர் தொடர்பாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள், கட்டுரைகள், பேட்டிகள், புத்தகங்கள், பத்திரிகைகளில் அவர் எழுதிய, ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘எனது வாழ்க்கை பாதையிலே’ உள்ளிட்ட தொடர்கள், சினிமா இதழ்களில் அவரைப்பற்றி வெளிவந்த தகவல்கள், அவரது சினிமா குறித்த விமர்சனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். ‘தி இந்து’ நாளிதழில் 100 நாட்கள் தொடராக வந்த ‘எம்ஜிஆர்-100’ என்ற கட்டுரைகளும் இதில் அடங்கும்.

எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் குறுந்தகடுகள், பாடல்கள் மற்றும் வசனம் அடங்கிய சுமார் 700 இசைத்தட்டுகளையும் சேகரித்து வைத்துள்ளார். இசைத்தட்டுகளை இயக்க பழைய கிராமபோன் கருவி ஒன்றையும் வைத்துள்ளார்.

தூய்மையானது

எம்ஜிஆர் மீது தனக்கு மிகுந்த பற்று ஏற்படுவதற்கான காரணம் குறித்து குப்புசாமி கூறும்போது, ‘‘எம்ஜிஆரின் சினிமா வாழ்க்கையும் சரி, அரசியல் வாழ்க்கையும் சரி தூய்மையானதாவே இருந்தது. எந்தப் படங்களிலும் அவர் மோசமான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. சிகரெட், மது பழக்கங்களை சினிமாவில் கூட அவர் தொடவில்லை.

மேலும், அரசியலுக்கு வந்த பிறகு அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம் இன்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. இதுபோன்ற அவரது நல்ல திட்டங்கள் என்னை கவர்ந்ததன் காரணமாகவே அவர் மீது எனக்கு பற்று ஏற்பட்டது.

எம்ஜிஆர் தொடர்பான தகவல் எந்த பத்திரிகைகளில் வெளிவந்தாலும் அவற்றை உடனடியாக சேகரிப்பேன். எம்ஜிஆர் குறித்த ஆயிரம் புகைப்படங்கள், 25 புத்தகங்கள், ஏராளமான இசைத்தட்டுகளை சேகரித்து வைத்துள்ளேன். எம்ஜிஆர் 130 படங்களில் நடித்துள்ளார். இதில் 100 படங்களின் குறுந்தகடுகள் என்னிடம் உள்ளன. இவற்றை சேகரிக்க எம்ஜிஆரின் தொண்டர் செல்வம் என்பவர் எனக்கு உதவினார்.

நகைகளை விற்று உதவினார்

மேலும், என்னோடு பணியாற்றிய அருட்சகோதரர்கள் லூர்து, லாரன்ஸ் ஆகியோரும் பெரிதும் உதவி புரிந்தனர். எனது மனைவி முத்துலெட்சுமி இதற்காக அவரது நகைகளை விற்றும் கூட பணம் தந்துள்ளார்.

சென்னை, மதுரை, திருச்சி என தமிழகம் முழுவதும் சென்று சுமார் 25 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு இவற்றை சேகரித்து வரலாற்று பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்.

வருங்கால சந்ததிகளான மாணவர்களுக்கு இவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

100 பள்ளிகளில் கண்காட்சி

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 பள்ளிகளில் எம்ஜிஆர் குறித்த கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளேன். இது தொடர்பாக பள்ளிகளிடம் பேசி வருகிறேன். முதல் கட்டமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கண்காட்சி நடத்த முடிவு செய்துள்ளேன்.

இன்று அறிவியலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வரலாற்றுக்கு கொடுப்பதில்லை. நமது பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாக்க வரலாறு முக்கியம். எனவே, வரலாற்றுக்கும் இன்றைய மாணவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்