தமிழர்களுக்கு சிங்கப்பூர் அரசு இழப்பீடு தர வேண்டும்: ராமதாஸ்

லிட்டில் இந்தியா கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சிங்கப்பூர் அரசு இழப்பீடு தர வேண்டும் பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சிங்கப்பூரில் கடந்த 8 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்ற தொழிலாளி சாலைவிபத்தில் கொல்லப்பட்டார்.

இதையடுத்து நடந்த வன்முறைகளுக்கு தமிழர்கள் தான் காரணம் என்று கூறி அங்கு பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்தது. அவர்களில் 28 பேரின் கைதை மட்டும் கணக்கு காட்டிய காவலர்கள், மற்றவர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தனர்.

தற்போது 52 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கென பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றில் ஒன்றைக் கூட பின்பற்றாமல் சர்வாதிகாரமான முறையில் சிங்கப்பூர் அரசு நடந்திருக்கிறது.

இதற்காக, சிங்கப்பூர் அரசை இந்தியா கண்டிப்பதுடன், வெளியேற்றப்பட்ட 52 இந்தியர்களுக்கும், விபத்தில் கொல்லப்பட்ட சக்திவேல் குமாரவேலுவின் குடும்பத்திற்கும் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழ் பேசுபவர்களையே தூதர்களாகவும், தூதரகப் பணியாளர்களாகவும் நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE