நாங்களும் அகதிகளாக வருவோம் - இடுக்கித் தமிழர்களின் கண்ணீர்க் கதை

By குள.சண்முகசுந்தரம்

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியது பென்னி க்விக் என்பது தெரியும். ஆனால், அணையின் கட்டுமானப் பணிகளைச் செய்தவர்கள் தமிழர்கள் என்பதும், அணைக்குள் 234 தமிழர்களின் இறுதி மூச்சு அடங்கிக் கிடக்கிறது என்பதும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 1878-ல் கேரளத்தின் பார்வதி மலைச் சாரலில் பிரிட்டிஷ் தேயிலை வியாபாரியான ஜான் டேவிட் மன்ட்ரோவுக்காக முதல் தேயிலைச் செடியை நட்டுவைத்தவள் ஒரு தமிழச்சி என்கிறது கேரளத்தின் தேயிலைச் சரித்திரம். இன்றைக்கு, மலையாள தேசத்தில் சுமார் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் வளர்ந்து கிடக்கும் தேயிலைக்கு அதுதான் முதல் வித்து. தமிழகத்தை ஒட்டியிருக்கும் இடுக்கி மாவட்டத்துக்குள் வரும் தேவிகுளம், பீர்மேடு தாலுக்காக்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழர்கள்தான் வசிக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே நெல்லை, ஒன்றுபட்ட மதுரை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களிலிருந்து குரங்கனி வழியாகக் கேரளத் தேயிலைத் தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டவர்களின் வாரிசுகள். கேரளத்தின் மொத்த வரி வருவாயில் சராசரியாக 10 % இடுக்கி மாவட்டத்திலிருந்து வசூலாகிறது. 8 மாதங்கள் மழை, 12 மாதங்களும் குளிர், ஆளை மிதித்துக் கொல்லும் யானைகள், ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் ... இத்தனைக்கும் நடுவில்தான் இவர்கள் தேயிலை நிறுவனங்களுக்காகத் தேய்ந்துகொண்டிருக்கிறார்கள் . அதுவும் சொற்பக் கூலிக்கு!

“சுமார் 5,000 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிரிட்டுக்கொள்வதற்கு பூஞ்ஞார் மகாராஜாவிடம் அன்றைக்கு ஒப்பந்தம் போட்ட தேயிலை நிறுவனங்கள் இன்றைக்கு 55 ஆயிரம் ஏக்கருக்கு விரிந்திருக்கின்றன. ஆனால், அவர்களை உயர்த்திய தொழிலாளர்களுக்கு இங்கே கால் காணி நிலம் இல்லை. காரணம்... தமிழர்களாகப் பிறந்தது” என்று தொடங்கினார் கேரளத் தமிழர்கள் கூட்டமைப்பின் அமைப்பாளர் அன்வர் பாலசிங்கம்.

“மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோதே இடுக்கியைத் தமிழகத்துடன் இணைக்காமல் விட்டதால், நாங்கள் இப்போது கால்நடைக்குச் சமமாகிப்போனோம். இடுக்கித் தமிழர்களுக்குக் கேரளத்தில் சாதிச் சான்றிதழ் கொடுக்க மாட்டார்கள். மொழிவாரிப் பிரிவினைக்கு முன்பு பெரியகுளம் தாலுக்காவில்தான் இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு, தேவிகுளம் பகுதிகள் இருந்தன. அதனால், இடுக்கித் தமிழர்கள் சாதிச் சான்றிதழ் கேட்டால், '1950-க்கு முன்பு பெரியகுளம் தாலுக்காவில் இருந்ததற்கான இருப்பிடச் சான்று தந்தால்தான் சாதிச் சான்றிதழ் தருவோம்' என்கிறார்கள்.

இதெல்லாம் சாத்தியமில்லை என்பதால்தான் இங்குள்ள நம் பிள்ளைகள் (தமிழகத்தில் சாதிச் சான்றிதழ் பெற்று) படிப்புக்காகத் தமிழகத்துக்கு ஓடிவருகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் கேரளத் துணைத் தலைவராக இருக்கிறார் முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.கே.மணி. அவரது மகனுக்கே பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் சாதிச் சான்றிதழ் வழங்கினார்கள்.

மறுக்கப்படும் உரிமைகள்

மொழிவாரி சிறுபான்மையினருக்கான எந்தச் சலுகையும் கேரளத் தமிழர்களுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால், சாதாரண உரிமைகள்கூட இல்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழர்களைத்தான் அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். ஆனால், வீம்புக்காக மலையாளிகளைப் பணியமர்த்துகிறார்கள். அரசு அலுவலகங்களில் மலையாளத்தில்தான் மனு கொடுக்க வேண்டும் அதில் கட்டாயம் மலையாளத்தில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவே போட்டிருக்கிறார்கள். இப்போது, படிப்புக்காகவும் பிழைப்புக்காகவும் தமிழகம் வந்துபோகும் தமிழ்ப் பெண்கள் ஹெச்.ஐ.வி. தொற்றுடன் வருகிறார்கள் என்ற விஷமப் பிரச்சாரத்தையும் கேரளத்தில் சில பேர் திட்டமிட்டுப் பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்” என்று கொதித்த பாலசிங்கம், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

தண்ணீருக்கே உத்தரவாதம் இல்லை

“மூணாறில் 1984-ல் தொடங்கப்பட்ட அரசுக் கல்லூரியில் மூன்று துறைகள்தான் இருக்கின்றன. பள்ளிக்கூடங்களில் போதிய தமிழாசிரியர்கள் நியமனம் இல்லை. ஆயிரக் கணக்கில் தேயிலைத் தொழிலாளிகள் இருக்கும் இடத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கிடையாது. இங்குள்ள தொழிலாளிக்கு அவசரச் சிகிச்சை என்றால் தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்குத்தான் ஓட வேண்டும். இவ்வளவு ஏன்? தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீரில்லை. மலைக் குட்டைகள் நிரம்பி அவற்றிலிருந்து வரும் தண்ணீரைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தக் குட்டைகளில் ஏதாவது விலங்குகள் விழுந்து செத்துக் கிடந்தாலும் நாற்றம் எடுக்கும்வரை யாருக்கும் தெரியாது.

மொழிவாரிப் பிரிவினைக்குப் பிறகு இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் பெயரில் சொந்தமாக ஒரு சென்ட் நிலம்கூட வாங்க முடியவில்லை. தமிழர்களுக்குப் பட்டாவும் தர மாட்டார்கள்; பத்திரமும் போட மாட்டார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு தேவிகுளம் சார்பதிவாளர் எல்லையில் கொடுத்த மொத்தப் பட்டாக்கள் 56. வாங்கியது அத்தனையும் மலையாளிகள்.

பீர்மேடு, தேவிகுளம், உடுமஞ்சோலை மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழர்கள் 60 சதவீதம் இருக்கிறார்கள். இங்கு தமிழர்கள்தான் எம்.எல்.ஏ-க்களாக வர முடியும். ஆனால், தேவிகுளம் தவிர மற்ற இரண்டு தொகுதிகளிலும் எந்தக் கட்சியும் தமிழனை வேட்பாளராக நிறுத்துவது இல்லை. கேரள அரசியல் கட்சிகள் இந்த விஷயத்திலும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

வரவிருக்கும் அபாயம்

இத்தனையும் போதாதென்று இன்னொரு நெருக்கடியும் இப்போது கேரளத் தமிழர்களை அச்சுறுத்துகிறது. தேவிகுளம் தாலுக்காவில் ஐந்து வனச் சரணாலயங்களையும் இரண்டு தேசிய சுற்றுச்சூழல் பூங்காக்களையும் அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மத்திய வனத்துறை அமைச்சகம். இந்தப் பகுதிகளில் தமிழர்கள் மட்டுமே வசிக்கிறார்கள். திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழர்கள் தெருவுக்கு வந்துவிடுவார்கள்.

கேரளத் தமிழர்கள் இத்தனை நெருக்கடியில் இருக்கிறார்கள். ஆனால், தமிழ், தமிழர் என்று சொல்லியே பிழைப்பு நடத்தும் தமிழ்நாட்டுத் தலைவர்கள் யாரும் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை. இதற்கு ஒரே தீர்வு, நேரியமங்களம் பாலத்திலிருந்து பீர்மேடு வரையிலான 224 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைத் தனியாகப் பிரித்து எங்கள் பகுதிக்குத் தனி மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாங்களும் விரைவில் அகதிகளாகத் தமிழகம் வருவோம் “ என்று முடித்தார் பாலசிங்கம்.

அவரது குற்றச்சாட்டுகளை, ஆளும் கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவரான ஏ.கே.மணியிடம் அடுக்கினோம். “உங்களுக்கு வந்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகத் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால், கேரளத்தில் மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்.

மொழிவாரிப் பிரிவினைக்கு முன்பு யார் யார் எந்த மாநிலத்தில் இருந்தார்களோ அதற்கான அத்தாட்சியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் கொடுப்பதாகச் சொல்வதில் தவறு இல்லை. தமிழர்கள் இங்கேயும் தமிழகத்திலும் சான்றிதழ் வாங்கிக்கொண்டு அரசின் அனுகூலங்களை அனுபவிக்கிறார்கள். அதைத் தடுக்கத்தான் இந்தச் சட்டம். கேரளத்தில் மட்டுமில்லை, ஆந்திரம், கர்நாடகம், ஏன் தமிழகத்துலேயுமே இந்தச் சட்டம் அமலில் இருக்கு. மொழிவாரிப் பிரிவினைக்கு முன்பு, என்னோட தந்தையார் இங்கே கங்காணியாக இருந்தார். அதற்கான ஆதாரங்களைக் கொடுத்து எனது மகனுக்குச் சாதிச் சான்றிதழ் வாங்கினேன்.

வனச் சரணாலயத் திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தத்தான் போகிறார்கள். யாராக இருந்தாலும் ஆக்கிரமிப்பில் இருந்தால் அப்புறப்படுத்தத்தான் செய்வார்கள். அதற்காக ஒட்டுமொத்தமாகத் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட மாட்டார்கள். இடுக்கியில் தமிழர்களுக்குப் பட்டய பூமி இல்லை என்பதும் தவறு. எனக்கு இருக்கிறது. 'கே.டி.ஹெச். ஆக்ட்' என்ற விசேஷ சட்டம் அமலில் இருப்பதால் மூணாறு பகுதியில் யாரும் நிலம் வாங்க முடியாது. சில பேர், சட்ட விரோதமாக நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு பட்டயம் கேட்கிறார்கள். இது எப்படிச் சரியாகும்? பிறருடைய இடத்தில் உட்கார்ந்துகொண்டு 'தனி மாநிலம் கொடு' எனக் கேட்பது நியாயமா? தமிழ்நாட்டில் தமிழில்தானே மனு கொடுக்கிறோம். அதுபோல, கேரளத்தில் மலையாளத்தில் மனு கொடுங்கள என்று கேட்பதில் தவறில்லையே!” என்றார்.

தேவிகுளம் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வான ராஜேந்திரனிடமும் இதுகுறித்துப் பேசினோம். கொஞ்சம் காட்டமாகவே பேச ஆரம்பித்தவர், “நிலப் பட்டா, கல்வி, வேலைவாய்ப்பு இவை சம்பந்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு சட்டம் இருக்கு. இது மொழிவாரிப் பிரிவினைக்கு முந்தைய சட்டம். இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் கோரி, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நாங்கள் பேசியிருக்கிறோம்.

சில பேர் இங்கே தனி மாநிலம் கேட்டு ஊர்வலம் போனார்கள், சி.டி-க்களை வெளியிட்டார்கள், புத்தகங்களைப் போட்டார்கள். அதனால்தான் கேரள அரசாங்கம் சாதிச் சான்றிதழ் விவகாரத்தில் கெடுபிடிகளை அதிகமாக்கிருச்சு. இருப்பினும் இந்த விவகாரத்தை நாங்கள் உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, பிறப்புரிமை உள்ள மனிதனுக்கு இந்திய சுதந்திரச் சட்டத்தில் உள்ள உரிமைகள் எதுவும் மறுக்கப்படக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருக்கிறோம். ஆனால், சிலர் மொழிப் பிரச்சினையை முன்வைத்து, அரசியலாக்கி குளிர் காயப் பார்க்கிறார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேறாது” என்றார்.

தொடர்ந்து மேலும் பலரிடம் பேசியபோது, அவர்கள் சொன்ன விஷயங்களும் இதைப் போலவே இருந்தன. தமிழ்த் தொழிலாளிகள் முன்வைக்கும் தீர்வு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவர்கள் முன்வைக்கும் பிரச்சினைகளின் நியாயம் யாராலும் நிராகரிக்க முடியாதது. அரசு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், ஒரு நாள் இடுக்கித் தமிழர்கள் அகதிகளாக வந்து நம் முன் நிற்கலாம்!

தொடர்புக்கு:mduedl@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்