தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ், செல்லூர் கே.ராஜு, ராமநாதபுரம் ஆட்சியர் க.நந்தகுமார் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அங்கிருந்த 50 பேர் கொண்ட கும்பல் கார்கள் மீது கற்களை வீசியது. இதில், முதுகுளத்தூர் எம்எல்ஏ முருகனின் கார் கண்ணாடி உடைந்ததாகக் கூறப்பட்டது. போலீஸார் அந்த கும்பலை விரட்டியடித்தனர்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, கேஆர். பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, ஜே.கே. ரித்தீஷ் எம்.பி., மற்றும் சேடபட்டி முத்தையா, பொன்.முத்துராமலிங்கம் ஆகியோருடன் வந்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தன்னுடன் வந்த கார்களை எல்லாம் திருப்பி அனுப்பிவிட்டு, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாமக தலைவர் கோ.க.மணி, தேமுதிக சார்பில் ஏ.கே.டி.ராஜா, மூவேந்தர் முன்னேற்றக் கழக நிறுவனர் டாக்டர் என். சேதுராமன், உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் பகல் 11 மணிக்கு மேல் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சில இளைஞர்கள் தடுப்புகளைத் தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் காவலர் முனியாண்டி காயம் அடைந்தார். போலீஸார் தடியடி நடத்தி அந்த கூட்டத்தைக் கலைத்தனர்.
கடலாடி அருகே தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்றவர்களையும் போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.
மேலும், அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ், செல்லூர் கே.ராஜு ஆகியோர் வந்த கார்கள் மீது விஷமிகள் சிலர் சகதியை எறிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.