தமிழகத்தின் மணல் கொள்ளை, கனிம வளக்கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:
'தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஏராளமான தாது மணல் கொள்ளை நடந்து வருகிறது. இந்தியாவின் கனிம வள சட்டம் 1957ன் கீழ் பல நிறுவனங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டது. அவற்றில் 86 சதவிகித உரிமங்கள் வி.வி. மினரல்ஸ் என்ற ஒரே நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் உரிமையாளர் வி. வைகுண்டராஜன் கனிம வள சட்டம் வரையறுத்துள்ள எந்த விதிகளையோ, நியதிகளையோ கடைப்பிடிக்கவில்லை.
ஏறத்தாழ 60 லட்சம் கோடி அளவிற்கு கனிம வளம் சுரண்டப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. இதில் பெரும்பகுதி வி.வி. மினரல்ஸ் கொள்ளை அடித்துள்ளது என்று பத்திரிகைகள் மூலம் தெரிய வருகிறது. தமிழகத்தின் தென்பகுதி மக்கள் இந்த கனிம வளக் கொள்ளை பற்றி அரசு அதிகாரிகளிடமோ, காவல்துறை அதிகாரிகளிடமோ புகார் கொடுத்தால் அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அந்த பகுதியில் உள்ள மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு வி. வைகுண்டராஜன் தனியாக மாதச் சம்பளம் கொடுத்து அவர் ஒரு தனி அரசாங்கம் நடத்தி வருவதாக மக்கள் நம்புகிறார்கள்.
இந்திய உச் சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி கனிம வளக் கொள்ளை பற்றிய வழக்கு ஒன்றின் தீர்ப்பில் கனிம தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும்போது, சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து அனுமதி வாங்குவதை கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்த கனிம மற்றும் தாது தாது மணல் செயல்பாடுகளுக்கு தடை விதித்தது. இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தின் ஆட்சியர் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் வைப்பார் கிராமத்தில் வி.வி. மினரல்ஸ் சட்டத்திற்கு புறம்பாக 30 ஏக்கர் நிலத்தில் மணல் தோண்டி எடுத்ததை கண்டுபிடித்து அறிக்கை அளித்தார்.
தமிழக அரசோ உடனடியாக அந்த ஆட்சியரை மாற்றிவிட்டு, அந்த மாவட்டத்தில் மணல் அள்ளுவதற்கு தடை விதித்துவிட்டு, இதை விசாரிக்க வருவாய்த் துறை செயலர் கெகன்தீப்சிங் பேடி தலைமையில் ஆறு துணை குழுக்களை கொண்ட ஒரு கமிட்டி அமைத்தது. ஆனால் இது ஒரு கண்துடைப்பு நாடகம் என்று மக்களும், அரசியல் கட்சிகளும் சொல்ல ஆரம்பித்த பிறகு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
ஆனால் முதலமைச்சர் தடை விதித்த பிறகும், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் மணல் கடத்தப்படுவதாக பிரபலமான பத்திரிகைகள் புகைப்படத்துடன் செய்திகள் வெளியிட்டன. அதிகாரிகள் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. இதேபோல்தான் ஆய்வுக்குழு அறிக்கையும் இருக்கும் என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள். ஏனெனில் வி. வைகுண்டராஜன் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக மக்கள் நம்பும் ஜெயா டிவியின் பங்குதாரராக இருந்தவர். இதை தமிழக சட்டமன்றத்தில் 19.04.2007ல் அ.இ.அ.தி.மு.க. சட்டமன்றக் கொறடா கே.ஏ. செங்கோட்டையன் பதிவு செய்தார். அன்றைய தி.மு.க. அரசு வி. வைகுண்டராஜனை கைது செய்ய எத்தனித்தபோது நடந்த விவாத்தில் வைகுண்டராஜன் ஜெயா டிவியின் பங்குதாரர் என்பதாலே, அவரை பழிவாங்கும் பொருட்டு தி.மு.க. அரசு குண்டர் சட்டத்தில் அவரை கைது செய்ய முயலுகிறது என்றும், அதைக் கண்டித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்கிறது என்றும் அறிவித்து, வெளிநடப்பு செய்தனர்.
எனவே, இந்த மணல் கொள்ளைக்கு எதிராக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் நம்பிக்கைக்குரியதாக இருக்காது என்றும், மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் ஆசிர்வாதத்தோடுதான் இந்த கொள்ளை நடக்கிறது என்றும் மக்கள் நம்புவதால் இவற்றை விசாரித்து உண்மையை மக்களுக்கு தெரிவித்திடவும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசியலமைப்பு சட்டத்தை நிலைநாட்டிட மத்திய குற்றப் புலனாய்வு (சி.பி.ஐ.) குழு ஒன்று அமைத்திட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்' அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago