தமிழக பட்ஜெட்டில் எந்த தரப்புக்கும் திருப்தி இல்லை: வைகோ

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமூகத்தின் எந்தத் தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் இல்லை என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள 2014-2015 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மூன்று நிதிநிலை அறிக்கைகளின் தொகுப்புபோல இருக்கின்றது.

புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை. விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் எதையும் பூர்த்தி செய்யாமல், இரண்டாவது பசுமைப் புரட்சி ஏற்படும் என்று குறிப்பிடுவது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்.

ஏனெனில், பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை இல்லை. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய், நெல் குவிண்டால் குவிண்டாலுக்கு 3,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி வரும் விவசாயிகளுக்கு நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு முழுமையாகக் கிடைக்கவில்லை. தற்போது பயிர் காப்பீட்டுக்காக ரூ. 242.59 கோடி ஒதுக்கீடு என்பது மிகவும் குறைவானது.

வேளாண் பணிகள் இயந்திர மயமாக்கல் குறித்த முந்தைய அறிவிப்புகள் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இலவசத் திட்டங்களுக்கு சுமார் 2,300 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டு, பாரம்பரிய நீர்நிலைகள் பராமரிப்புக்கு வெறும் 489.49 கோடி ரூபாயும், குடிநீர் திட்டங்களுக்குக் குறைவாகவும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது அதிமுக அரசின் 'சமூக பொறுப்புணர்வு' இல்லாமையைக் காட்டுகிறது.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு கால்நடை வளர்ப்பு முக்கியத் துணைத் தொழில் ஆகும். கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவமனைகள் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு போதுமானது அல்ல.

மேலும் கடந்த ஆண்டு கோமாரி நோய் தாக்கி, ஆயிரக்கணக்கில் கால்நடைகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு அளிக்க முன்வராதது வேதனைக்குரியது ஆகும்.

உணவு மானியத்துக்கு 5,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்; எனினும் கிராமப்புற, நகர்ப்புற வறுமை ஒழிப்புத் திட்டங்கள் புதிதாக இல்லை.

விலைவாசி உயர்வைப் பற்றி அ.தி.மு.க. அரசு பெரிதாக கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

புதிய வேலைவாய்ப்புகள் பற்றிய அறிவிப்புகள் இல்லை. அதே நேரத்தில் மின் ஆளுமை செயல்பாடுகளை அரசு நிர்வாகத்தில் முழுமையாகப் பயன்படுத்திட தனியார்-பொதுப் பங்களிப்புடன் பொதுச்சேவை மய்யங்கள் உருவாக்கப்படும் என்பது அரசு துறை பணி வாய்ப்பை பறிக்கும் நடவடிக்கை ஆகும்.

குழந்தைகளின் உடல்நல பரிசோதனைக்கு 770 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்படும் என்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில், பொதுச் சுகாதாரத் திட்டங்களுக்கும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு மேலும் அதிகரிக்க வேண்டும்.

தொழில்துறை வளர்ச்சிக்கு தனியார் முதலீடுகள் வந்தால் மட்டும் பயன் தராது. ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், குறிப்பாக விசைத்தறி ஜவுளி ஆலைகள் மீட்சிக்கு உறுதியான திட்டங்கள் தேவை.

பலமுனை வரிகளை ஒருமுனை வரியாக மாற்றி சீரமைக்க வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

காவிரி பாசன பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், மேற்கு மாவட்டங்களில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம், கட்டுமானத் தொழில் நெருக்கடி, மணல் தட்டுப்பாடு மற்றும் மணல் கொள்ளை போன்றவை பற்றி குறிப்பிடாதது ஏன் என்று தெரியவில்லை.

தமிழக மீனவர் மீதான தாக்குதல், கச்சத் தீவு, ஈழத்தமிழர் பிரச்சினை போன்றவற்றில் தமிழக அரசின் கருத்தை நிதிநிலை அறிக்கையில் பிரதிபலித்திருக்க வேண்டும்.

நதிநீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசின் துரோகம் பற்றியும் குறிப்பிடவில்லை. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பெருகி வரும் சாலை விபத்துகள் ஆகியவற்றுக்கு முதன்மை காரணமான மதுக்கடைகளை மூடி, முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பையும் ஜெயலலிதா அரசு அலட்சியம் செய்து வருகிறது.

மொத்தத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சமூகத்தின் எந்தத் தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில் இல்லை" என்று வைகோ கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்