மதுரை: சாலையோரம் தவித்த பெண்ணுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய நீதிபதி
மதுரை ஆண்டாள்புரம் பஸ் நிறுத்தம் அருகே மரத்தடியில், எவ்வித பாதுகாப்புமின்றி சித்ரா என்ற பெண்ணும், அவரது தந்தை சௌந்தரபாண்டியனும் கடந்த 3 ஆண்டாக வசித்து வருவதாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டினுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் வழக்குரைஞர் முத்துக்குமார், சோலை அழகு ஆகியோர் மூலம் அந்தப் பெண்ணை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து, அவர்களின் நிலையைக் கேட்டறிந்தார்.
பின்னர் சித்ராவும், அவரது தந்தையும் கூடல்புதூரில் தனது தாயார் நடத்தி வரும் காப்பகத்திலேயே தங்கிக் கொள்ளலாம் எனக் கூறியதுடன், அங்கேயே வேலை செய்து ஊதியம் பெற்றுக் கொள்ளவும் வழி செய்து கொடுத்தார்.
இதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட சித்ரா, வியாழக்கிழமை முதல் அந்தக் காப்பகத்திற்கு வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.