உள்ளாட்சி: தமிழகத்தின் அவசரத் தேவை... நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை தொடங்கிவிட்டது. நீலகிரியைத் தமிழ கத்தின் தண்ணீர்த் தொட்டி என்பார்கள். அங்கேயே நிலத்தடி நீர் கடுமையாக கீழே இறங்கிவிட்டது. சென்னையின் குடிநீர் தேவைக்காக விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

ஒரு நாளைக்கு சுமார் 100 மில்லியன் லிட்டர்கள் வரை விவசாய கிணறுகளில் இருந்து சென்னையின் குடி நீருக்காக உறிஞ்சுகிறார்கள். சென்னையில் மட்டும் தண்ணீர் லாரிகள் ஒரு நாளைக்கு 6,500 நடை வரை அடிக்கின்றன.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் தண்ணீர் இருப்பு கவலைக்கிடமாக இருக்கிறது. கல்குவாரிகள், ஏரிகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கங்களில் இருந்தெல்லாம் தண்ணீரைக் குடிக்க முடியுமா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்.

ஆனாலும் குடிநீர் பிரச்சினை தீரவில்லை. ஆனால், கடந்த 2012-13 தொடங்கி 2015-16 நிதியாண்டு வரை, கடந்த ஐந்து ஆண்டுகளில் குடிநீர் விநியோகத்துக்கு மட்டும் தமிழக அரசு செய்துள்ள செலவுகளைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் ஐந்து ஆண்டுகளில் செய்த செலவு ரூ. 9,148 கோடி. சென்னையில் குடிநீர் விநியோகம் செய்ய மட்டும் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் செய்துள்ள செலவு ரூ.1,979 கோடி. கடல் நீரைக் குடி நீராக்க பேரூரில் ரூ.4,070 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள். நெம்மேலியில் ரூ.1,371 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள். ராமநாதபுரத்திலும் தூத்துக்குடியிலும் தலா ரூ.1,500 கோடிகளைக் கொட்டியிருக்கிறார்கள்.

ஊரக வளர்ச்சித் துறை மூலம் செய் யப்பட்ட செலவு மட்டும் ரூ.5,498 கோடி யாகும். இந்த 2016-17 நிதியாண்டில் மட்டும் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.65 கோடியிலும் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ.46 கோடியிலும், ஊரகப் பகுதிகளில் ரூ.703 கோடியிலும் என உள்ளாட்சிகளில் மட்டும் ரூ. 814 கோடியில் குடிநீர் பணிகள் நடக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ரூ.18,841 கோடி குடிநீர் விநியோகத்துக்காக மட்டும் செலவிடப்பட்டிருக்கிறது.

இது மாநில அரசு செய்துள்ள செலவு மட்டுமே. மாநகராட்சி கள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் தங்களது சொந்த நிதியில் குடிநீருக்காக செய்துவரும் செலவுகள் தனி. இவை தவிர மத்திய, மாநில அரசு களின் நிதிக்குழு மானியத் திட்டங்கள், ஒருங் கிணைத்து ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டம், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டம், தாய் திட்டம், பேரிடர் நிவாரண நிதி ஆகிய திட்டங்களில் இருந்தும் குடிநீர் விநியோகச் செலவுகளுக்காக ரூ.1,478 கோடியை முன்பதிவு செய்து வைத்திருக்கிறது தமிழக அரசு. ஆனாலும், குடிக்க தண்ணீர் இல்லை!

குடிநீர் பிரச்சினையைத் தமிழக அரசு ‘விநியோகம்’ என்கிற ஒற்றைப் பக்கத்தில் இருந்து மட்டுமே அணுகுவதுதான் பிரச் சினைகளுக்குக் காரணம். ‘நீர் ஆதாரம்’ என்கிற இன்னொரு பக்கத்தை அரசு கண்டுகொள்வது இல்லை. அதற்காக செலவு செய்யப்படும் மொத்த பணமும் ஊழலில் கரைந்துவிடுகிறது. உதாரணத்துக்கு, குடிநீர் பிரச்சினை வரும் போதெல்லாம் நதியின் படுகைகளிலும் நிலத்தடி நீர் கணிசமாக இருக்கும் கிராமங்களிலும் கூடுதலாக ராட்சஷ ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுகிறார்கள். ஏற்கெனவே தோண்டிய ஆழ்துளைக் கிணறுகளை மேலும் ஆழப் படுத்துகிறார்கள். புவியியல்ரீதியாக மிகவும் ஆபத்தானது இது.

அளவுக்கு அதிகமாக தோண்டப்படும் ஆழ்துளைக் கிணறுகளால் ஆற்றின் இயல்பான நீரோட்டம் தடைபடும். ஆறுகள் காலம் காலமாக மரபு வழியில் பயணிக்கும் தன்மை கொண்டவை. நிலத்தடி நீரின் தன்மையைப் பொறுத்தே அந்த மரபு வழிப் பயணம் அமையும். இப்போது ஓடிக்கொண்டிருக்கும் காவிரி ஒருகாலத்தில் சென்னைக்கு மிக அருகில் ஓடிய ஆறுகளில் ஒன்று என்றால் நம்ப முடிகிறதா? செயற்கைக் கோள் மூலம் கண்டறியப்பட்ட உண்மைகளில் ஒன்று இது. காவிரியை நாம் எங்கு துரத்தியிருக்கிறோம் பாருங்கள்.

தவிர, அதிக எண்ணிக்கையில் மற்றும் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு களைத் தோண்டுவதால் மண்வளமும் பாதிக்கப்படுகிறது. அதிகளவு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும்போது கோடையில் நிலத்தடி நீர் மிக அதிகமான ஆழத்துக்கு கீழே இறங்கிவிடும். சிறிது காலத்தில் மீண்டும் நிலத்தடி நீர் உயரும்போது அந்தத் தண்ணீர் பூமியின் அடியாழத்தில் இருக்கின்ற, பல்வேறு கடினமான கனிமங்களையும் சேர்த்தே வெளியே கொண்டுவரும். இந்தத் தண்ணீரைப் பாசனத்துக்கு பயன்படுத்தும்போது விவசாய நிலம் களர் நிலமாகிவிடும்.

குடிநீராகப் பயன் படுத்தும்போது பல்வேறு நோய்கள் ஏற்படும். இந்தப் பிரச்சினை காரணமாக கங்கையின் சில இடங்களில் நீரோட்டம் பாதிக்கப்பட்டதுடன், கங்கை டெல்டாவின் வண்டல் மண்வளமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப்பில் இருந்து ராஜஸ்தானின் தார் பாலைவனத்துக்கு தண்ணீர் கொண்டுச் செல்லும் இந்திரா காந்தி கால்வாய் பகுதிகளிலும் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம்.

உலகில் எதை வேண்டுமானாலும் உற்பத்தி செய்துகொள்ளலாம். ஆனால், எவ்வளவு கோடிகளைக் கொட்டினாலும் தண்ணீரை மட்டும் உற்பத்தி செய்ய முடியாது. தண்ணீரை நாம் சேமிக்க மட்டுமே இயலும். எனவே, இன்றைய நமது அவசரத் தேவை நீர்நிலைகளைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாப்பது மட்டுமே.

ஏரிகளையும் கண்மாய்களையும் குடிமராமத்து செய்வது மட்டுமே தண்ணீர் சேமிப்பு என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் சேமிப்பு நிறைய பரிமாணங்களைக் கொண்டது. எல்லையற்றது. வீடுகளில் தொடங்கி வயல்கள், சாலைகள், திறந்தவெளிகள், ஆறுகள், குளங்கள் என தண்ணீர் சேமிப்பு முறைகள் பல உள்ளன.

எங்கெல்லாம் நிலத்தடி நீரை செறிவூட்டும் வாய்ப்புகள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்கள் மேற் கொள்ளலாம். உதாரணத்துக்கு, மழை பெய்தால் சென்னையில் எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கும் என்கிற விரிவான விவரங்கள் அடங்கிய அறிவியல்பூர்வமான வரைப்படம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலை உணர் மையம் தயாரித்துள்ளது. அங்கெல்லாம் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டங்களை செயல்படுத்தலாம்.

ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும் பயன்பாட்டில் இல்லாத கிணறுகள், நிலத்தடி நீர் வற்றிவிட்ட ஆழ்துளைக் கிணறுகள் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்றன. இவற்றை நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, ராஜஸ்தானில் நடை முறையில் இருக்கும் ஒரு திட்டத்தை சொல்கிறேன். அங்கு விவசாயக் கிணறுகளில் நீர் சேமிக்கும் திட்டம் பிரபலம். வயல்களில் பெய்யும் மழை நீரை மொத்தமாக அறுவடை செய்யும் திட்டம் இது. வயல்களில் பெய்கின்ற மழை நீர் அனைத்தும் விவசாயக் கிணற்றுப் பக்கம் வரும்படியாக கால்வாய் அமைப்பார்கள். இந்தக் கால்வாய் மூலம் தண்ணீர் நேரடியாக கிணற்றுக்குள் பாயாது. அவ்வாறு பாய்ந்தால் கிணற்றில் அதிகளவு மண் சேர்ந்து கிணறு விரைவில் தூர்ந்துவிடும்.

கிணற்றின் முகப்பில் நிலத்தடியில் ஒரு திறந்தவெளி தொட்டி கட்டுவார்கள். தொட்டியின் அடிப்பாகத்தில் கூழாங்கற்கள், கரித்துண்டுகள், மணல் கொட்டப்பட்டு, வலை வைத்து இறுக்கி மூடப்படும். கால்வாயில் இருந்து இந்தத் தொட்டியில் விழும் மழை நீர் வடிக்கட்டப்பட்டு கிணற்றுக்குள் விழும். தமிழகம் முழுவதும் உள்ள வயல்களில் விவசாயிகள் இதனைப் பயன்படுத்தலாம்.

திறந்தவெளி கிணற்றில் மட்டும் அல்ல, ஆழ்துளைக் கிணறுகளிலும் மழை நீர் சேகரிக் கலாம். ஆழ்துளைக் கிணற்றை சுற்றிலும் ஒரு தொட்டி கட்ட வேண்டும். ஆழ்துளைக் கிணற்றின் உட்பகுதியில் இருக்கும் குழாயில் ஒரு மீட்டர் ஆழத்துக்கு குழாயைச் சுற்றிலும் துளைகள் இட வேண்டும். இதைச் சுற்றி இறுக்கமாக வலை கட்ட வேண்டும்.

குழாயைச் சுற்றி கூழாங்கற்கள், கரித்துண்டுகள், மணல் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இப்போது தூய்மையாக வடிகட்டப்பட்ட தண்ணீர் ஆழ்துளைக் கிணற்றில் செறிவூட்டப்படும். தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துகளில் இதனை செயல்படுத்தி இருக்கிறார்கள். இவை மட்டும் அல்ல, இன்னும் நிறைய இருக்கிறது.

- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்