திருப்பூர் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் புதிய வகை ‘சாஸ்த்ரா பாக்டீரியா’வைக் கண்டுபிடித்துள்ளது.
சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரின் நிறம் நீக்கல், உவர் தன்மை நீக்கல், நச்சுத்தன்மை நீக்கலுக்கு பாக்டீரியாவைக் கொண்டு சுத்திகரிக்கும் புதிய தொழில்நுட்பம் குறித்து மக்கள் பிரதிநிதிகள், திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பேராசிரியர்களிடையேயான கலந்துரையாடல் சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அப்போது பேசிய சாஸ்த்ரா துணைவேந்தர் ஆர்.சேதுராமன், “எங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்புக் குளத்திலிருந்து கண்டறியப்பட்ட புதுவகை பாக்டீரியாவைக் கொண்டு சாயப்பட்டறை கழிவுநீரின் நிறம் நீக்கல், உவர் நீக்கல், நச்சு நீக்கல் மற்றும் சுத்திகரிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனி இது ‘சாஸ்த்ரா பாக்டீரியா’ என அழைக்கப்படும் இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கோரி விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இந்த பாக்டீரியாவைக் கண்டுபிடித்த சாஸ்த்ரா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பம் மற்றும் உயர்தர உயிரி பொருள்கள் மைய முதுநிலை உதவிப் பேராசிரியர் மீரா பார்த்தசாரதி பேசியபோது, “இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்த மிகப் பெரிய தொழில் நெசவு. உலகச் சந்தையில் இந்திய ஜவுளிகள் 7 சதவீதம் பங்களிப்பு செய்கிறது. இதில், 60 சதவீதம் திருப்பூரில் உற்பத்தியாகின்றன.
திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரித்து வெளியேற்றாத பட்டறைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையால், 720 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
சாயப்பட்டறை கழிவுநீரைச் சுத்திகரிக்க செலவும், மின்சாரமும் அதிகமாகின்றன. இந்தப் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு இப்புதிய தொழில்நுட்பம் பயன்படும். தற்போது திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீர் சுத்திகரிப்பு 7 நிலைகளில் நடைபெறுகிறது. இந்தப் புதிய முறையால் 2 நிலைகளிலேயே சுத்திகரிப்பு செய்து விடலாம். இதில், செலவும் குறைவு, எளிதானது.
திருப்பூரிலிருந்து சேகரித்த சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் இந்தப் புதிய முறையை பரிசோதனை செய்தபோது, அதில் விடப்பட்ட ஜீப்ரா வகை மீன்கள் 7 நாள்களுக்குப் பின்னரும் உயிருடன் இருந்ததோடு, நச்சுத் தன்மையும் இல்லாமல் இருந்தது” என்றார். மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் பேசியபோது, “சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலான இதுபோன்ற புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய இந்த தனியார் பல்கலைக்கழகம் பாராட்டுக்குரியது” என்றார்.
கூட்டத்தில் பேசிய திருப்பூர் சாயப்பட்டறை உரிமையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினர், இந்தப் புதிய கண்டுபிடிப்பைப் பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்துவதற்குத் தேவையான உதவிகளையும், கழிவுநீர்த் தொட்டிகளையும் ஒதுக்கித் தருவதாகத் தெரிவித்தனர். திருப்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே. தங்கவேலு, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி, சாஸ்த்ரா அறிவியல் புலத்தலைவர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago