காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் பகுதி, தருமபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல் பகுதி ஆகும். சுற்றுலாத் தலமாகவும், சுற்று வட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதாரமாகவும் கம்பீரமாக விளங்கிவரும் ஒகேனக்கல் அருவி, காவிரி ஆறு மொத்தமாக வறண்டுவிட்டதால் களையிழந்து காணப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து சில நாட்களுக்கு முன்பு அடியோடு நின்றுவிட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சி குறித்து அறிந்துகொள்ள இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் சிலர் கூறியதாவது: ‘‘நடுத்தர வயதைக் கடந்துவிட்ட நாங்கள், எங்கள் வாழ்நாளில் ஒகேனக்கல் அருவி வறண்டதைப் பார்த்ததே இல்லை. 80 வயதைக் கடந்த எங்கள் குடும்ப முதியவர்களும் இது போன்ற நிலையைப் பார்த்ததில்லை என்றனர். அவர்களின் சிறுவயதி லும், ஒகேனக்கல் அருவி வறண்டு போனதாக மூத்தோர் கூறக்கேட்ட வரலாறும் இல்லை என்கின்றனர்.
இது தமிழகத்தின் தற்போதைய வறட்சி நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆதாரம். 7 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் 100 ஆண்டுகளாக நிற்காமல் ஓடிக்கொண்டு இருந்த காவிரி ஆற்றின் அருவி இன்று வறண்டு போயிருப்பது அடுத்த சந்ததியினருக்கு தண்ணீர் குறித்து விடுக்கப்படும் முன்னெச்சரிக்கை ஆகும்.
அரசியல் உள்ளிட்ட காரணங்களைக் கருதி இதை சாதாரணமாக கடந்து போவது என்பது மத்தியஅரசு செய்யும் பெரும் பாரபட்சமாக அமைந்துவிடும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிகள் தேசிய சொத்து என்பதை ஏட்டளவில் மட்டுமன்றி செயல் அளவிலும் 100 சதவீதம் செய்து காட்டுவது மத்திய அரசின் கடமை.இவற்றை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என தொடர் அழுத்தம் கொடுத்து உரிமையை நிலைநாட்டுவதும், மாநில விவசாயிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து போதிய வறட்சி நிவாரணம் பெற்றுத் தருவதும் தமிழக அரசின் கடமை.
தமிழகத்தில் விவசாயம், குடிநீர் திட்டம் ஆகியவற்றின் அச்சாணியாக விளங்கி வந்த காவிரி, கடைசி அத்தியாயத்துக்கு செல்வதை உணர்த்தத்தான் விவசாயிகள் குழுவினர் ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை குரல்களில் உள்ள நியாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது ஆள்பவர் களின் கடமை’’ என்று அவர்கள் கூறினர்.
சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
சீசன் நிலவரம் குறித்து அறிந்து கொள்ளாமல், கோடை சுற்றுலாவாக ஒகேனக்கல் வரும் பயணிகள் கடும் ஏமாற்றத்தைச் சந்திக்கின்றனர். ஆறும், அருவியும் வறண்டு திரும்பிய திசை யெல்லாம் பாறைகளில் இருந்து அனல்காற்று வீசுவதால், வந்த வேகத்திலேயே ஊர் திரும்பும் நிலைக்கு ஆளாகின்றனர்.
அவர்களுக்கு கிடைக்கும் ஒரே ஆறுதல், ஒகேனக்கல் செல்லும் மலைப்பாதையிலும் ஒகேனக்கல்லைச் சுற்றிய பகுதிகளிலும் உள்ள மரங்கள் சற்றே தளிர் விட்டிருப்பது மட்டும் தான். ஆற்றில் கொஞ்சமாவது நீர்ப்பெருக்கு ஏற்படும் வரை ஒகேனக்கல் சுற்றுலாவைத் தவிர்ப்பதே நல்லது.
வேலையிழந்த தொழிலாளர்கள்
ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் விளங்கினாலும், கோடைக்காலத்தில் அதிகப்படியான மக்கள் வரத்து இருக்கும். தற்போது ஆறு வறண்டு கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் வரத்து வழக்கம் போல் இல்லை.
இதனால், சுற்றுலா மூலம் வருமானம் பெறும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட பரிசல் ஓட்டுநர்கள், 150-க்கும் மேற்பட்ட மசாஜ் தொழிலாளர்கள்,
250-க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள் என அனைவரும் தற்போது வேலையிழந்து உள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago