இரு அணிகள் இணைப்பு விவகாரம்: தற்போதைய நிலவரம்

By பாரதி ஆனந்த்

கட்சி நடவடிக்கைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு அறவே இல்லாத வகையில், அந்தக் குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கி வைக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

1.00 am: அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். டிடிவி தினகரனை கட்சியிலிருந்து யாரும் ஒதுக்கிவைக்க முடியாது என்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

12.50 am: அமைச்சர்கள் சொன்னாலும் ஓபிஎஸ் நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து எடுக்கும் முடிவு எங்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று நாஞ்சில் சம்பத் கூறினார். >ஓபிஎஸ் நிபந்தனைக்கு கட்டுப்பட முடியாது: தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் பேட்டி

11.50 pm: அதிமுக அம்மா கட்சியில் பல்வேறு திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தமிழக தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். >சசிகலா குடும்பத்தை கட்சியில் ஒதுக்கிவைக்க அமைச்சர்கள் முடிவு: தலைவர்கள் கருத்து

10.45 pm: வெற்றிவேல், சுப்பிரமணி, தங்க தமிழ்ச்செல்வன், செல்வமோகன்தாஸ், ஜக்கையா, கதிர்காமு ஆகிய 6 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்துக்கு வருகை புரிந்து ஆலோசனை. >அதிமுக அம்மா கட்சியில் பிளவா?- தினகரனுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்கள்

10.30 pm: அமைச்சர்கள் அனைவரும் பதவியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றனர். அவர்கள் எடுத்த முடிவு கட்சியின் முடிவு அல்ல என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார். >அமைச்சர்கள் எடுத்த முடிவு கட்சியின் முடிவல்ல: வெற்றிவேல்

10.10 pm: ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார். >தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவு: அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

9.37 pm: ஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள், தமிழக மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது என்றார் அமைச்சர் ஜெயக்குமார். >தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

9.20 pm: அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் தினகரனுக்கு உடன்பாடில்லை என்று சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

9.00 pm: முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை >முதல்வருடன் தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

7.45pm: தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை

5.15 pm: ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். >ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி

4.05 pm: ஓபிஎஸ் பேச்சு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தகவல்.

3.30 pm: சசிகலா குடும்பத்தை ஓபிஎஸ் எதிர்ப்பது அழகல்ல: ஓ.எஸ்.மணியன் கருத்து.

3.15 pm: இரட்டைஇலை துளிர்க்கட்டும். கொடும் வெப்பம் அழியட்டும். மிச்சமிருக்கிற நான்காண்டுகள் மட்டுமல்ல, இன்னும் பல நூறாண்டுகள் அதிமுக ஆட்சி தொடரட்டும் - வைகைச் செல்வன்.

2.45 pm: அதிமுகவில் குடும்ப அரசியல் இல்லை. இணைப்பு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இரு அணிகளும் ஒரே நாளில் கூட இணைய வாய்ப்பு உள்ளது- தம்பிதுரை

2.30 pm: சசிகலா, தினகரன் தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும் - வெற்றிவேல் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

2.00 pm: இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக பிரிந்த அணிகள் மீண்டும் இணைய வேண்டும்- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி.

1.30 pm: பிரிந்த அணிகள் இணைவது தொடர்பான ஆலோசனை தினகரனுக்கு தெரிவிக்கப்படாமலேயே நடந்தது - சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தெரிவித்துள்ளார். >முதல்வர், 6 அமைச்சர் பதவிகளை கேட்கிறார் ஓபிஎஸ்: வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

1.10 pm: ஓபிஎஸ் பழைய பல்லவியே பாடிக்கொண்டிருக்கிறார்- வைகைச் செல்வன் விமர்சனம்.

12.45 pm: எந்த ஒரு குடும்பத்தின் கையிலும் அதிமுக சென்றுவிடக் கூடாது. சசிகலா குடும்பத்தினர் தலையீடு கட்சியில் இருக்கும்வரை பேச்சுவார்த்தை கிடையாது: ஓ.பன்னீர்செல்வம். >சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இணைப்புக்கு சாத்தியமில்லை: ஓபிஎஸ் திட்டவட்டம்

12.30 pm: தயக்கங்களை மறந்து மீண்டும் ஒன்றிணைவோம்- வைகைச் செல்வன்

11.50 am: போர்க்கப்பலை கூவத்தூர் விடுதியாக அதிமுக அம்மா அணியினர் மாற்றிவிட்டனர்: தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

11.45 am:ஓபிஎஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது என செங்கோட்டையன் தகவல்.

11.25 am: முதல்வருடனான ஆலோசனையை முடித்துக் கொண்டு டிடிவி.தினகரனை சந்தித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

11.15 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு. முன்னதாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, செங்கோட்டையன் ஆகியோரும் சந்தித்தனர்.

11.10 am: மக்கள் வாக்களித்த இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்- டெல்லியில் தம்பிதுரை பேட்டி.

11.05 am: சசிகலா, தினகரன் வழக்குகளை கட்சிப் பிரச்சினையுடன் சேர்த்து பார்க்கக் கூடாது- தம்பிதுரை

11.05 am: கப்பலில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றுகூடியிருப்பதன் பின்னணியில் எந்த அரசியலும் இல்லை: டி.ஜெயக்குமார்.

11.00 am: "இரு அணிகள் இணைவது குறித்து சசிகலா தரப்பில் குழு அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள் யார் என எங்களுக்குத் தெரியவில்லை" என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

10.55 am: முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு.

10.50 am: அதிமுக அம்மா அணியினரும் புரட்சித் தலைவி அம்மா அணியினரும் இன்று மாலை சந்திக்க வாய்ப்பு.

முந்தைய நிகழ்வுகள்:

அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஓபிஎஸ், சசிகலா ஆகிய இரு அணியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில், வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது.

வருமான வரி சோதனை முடிந்ததுமே, அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என டிடிவி தினகரனிடம் சில அமைச்சர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்த தினகரன், "அவர் படித்தவர். இதுதொடர்பாக அவரே முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சியில் மூத்த அமைச்சர்கள் சிலர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்துபேச தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.

மேலும், "இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக டெல்லியில் இன்று விசாரணை நடக்கிறது. இரட்டை இலைச்சின்னம் எங்கள் அணிக்குதான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" எனவும் அந்த ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். இதனைத் தொடர்ந்து திங்கள் இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஒற்றுமையாக செயல்பட்டு சின்னத்தை மீட்போம் எனக் கூறியிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்