நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் காவல்
நடிகர் எஸ்.வி.சேகர் பல நாடகங்களை நடத்தி வருகிறார். அதில் 'மகாபாரதத்தில் மங்காத்தா' என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தினார். இந்த தலைப்பு மகாபாரதத்தை கேவலப்படுத்துவதாக உள்ளது என்று இந்து மகாசபை தலைவர் ஸ்ரீவாரி எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஏற்கனவே இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் ஸ்ரீவாரி மீது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் எஸ்.வி.சேகர் புகார் கொடுத்திருக்கிறார். அதில், கடந்த சில நாட்களாக எனது செல்போனில் ஏராளமான பெண்கள் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுகின்றனர். ஸ்ரீவாரியின் தூண்டுதல் பேரில் தான் இவ்வாறு பேசுகின்றனர். என்னை கேவலப்படுத்தும் வகையில் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளனர். எனது வீட்டை தாக்கப்போவதாகவும் கூறுகின்றனர். எனவே எனக்கும், எனது குடும்ப உறுப்பினர்களுக்கும், என் வீட்டுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
குஜராத் பயணம் ஏன்?
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டிருக்கும் நிலையில் அவர் திடீரென புதன்கிழமை காலை குஜராத் புறப்பட்டுச் சென்றார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்து பா.ஜனதாவில் எஸ்.வி.சேகர் இணைய உள்ளதாக தெரிகிறது.
நடிகரான எஸ்.வி.சேகர் அதிமுகவில் சேர்ந்து அக்கட்சி சார்பாக எம்.எல்.ஏ ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரசில் இணைந்தார். பின்னர் அதிலிருந்தும் வெளியே வந்து விட்டார்.