டாக்டர் சுப்பையா கொலை வழக்கு: வழக்கறிஞரின் பெற்றோர் சரண்
சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில், நரம்பியல் மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் சுப்பையா. பின்னர், அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரை மருத்துவமனை அருகே, கடந்த 14-ம் தேதி, இரண்டு பேர் பயங்கர ஆயுதங்களுடன் வெட்டிவிட்டுத் தப்பினர். இதில், பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுப்பையா, கடந்த 22-ம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அபிராமபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் உள்ள நிலம் தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில், டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது, காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக, வழக்கறிஞர் பாசில், இவரது சகோதரர் மோரீஸ், தந்தை பி.பொன்னுசாமி (55), தாய் மேரிபுஷ்பம் உள்ளிட்டோரை காவல்துறையினர் தேடிவந்தனர். இதில், வழக்கறிஞர் பாசில், மோரீஸ் இருவரும், கடந்த 25-ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
பாசிலின் பெற்றோர், ஓய்வுபெற்ற ஆசிரியர் பி.பொன்னுசாமி, மேரிபுஷ்பம் ஆகிய இருவரும், கோவை பந்தய சாலை, காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரண் அடைந்தனர். ‘டாக்டர் சுப்பையா கொலை வழக்கில், தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. காவல்துறையினர், தங்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்’ என சரண் அடைவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.