இந்த வாரம், சற்று வித்தியாசமாக மூதாட்டிகள் 50 பேருக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். தள்ளாத வயதில், இத்தனை பேரும் ஒன்றாக ஆட்சியர் தேடி வர என்ன காரணம் எனக் கேட்டபோது, அவர்கள் கூறியது:
சூலூர் தாலுகாவைச் சேர்ந்த பூராண்டம்பாளையத்தில், வசித்து வருகிறோம். இங்கு மட்டும் சுமார் 150 பேருக்கும் மேல், எங்களைப் போல ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர். இதில், கணவனை இழந்தவர், ஆதரவற்ற நிலையில் தனிமையில் வசிப்பவர், மாற்றுத்திறனாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர் என, அனைவருமே ஏதாவது ஒருவகையில் ஆதரவற்றவர்களாக உள்ளோம்.
எங்களுக்கு, கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக அரசின் முதியோர் உதவித் தொகை கிடைத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் முதல் 2013 பிப்ரவரி வரை, உதவித்தொகை வரவில்லை. இந்த நான்கு மாதம் என்பது குறைந்தபட்ச காலமே. சிலருக்கு 6 மாதங்கள் வரை இந்த உதவித்தொகை வரவில்லை.
பலமுறை அதிகாரிகளிடம் பேசியதன் பயனாக, கடந்த சில மாதங்களாக பணம் வருகிறது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணம், என்ன ஆனது என்று தெரியவில்லை. அதை கொடுத்து உதவினால், பேருதவியாக இருக்கும் என்றனர்.
அவர்களை அழைத்து வந்த கோபால்சாமி கூறியது: கடந்த பிப்ரவரி மாதம், இந்த உதவித்தொகையை பெறும் நபர்கள் எத்தனை பேர் என பூராண்டம்பாளையம் பஞ்சாயத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டோம். ஆனால், பதில் இல்லை. ஏப்ரல் 16 ஆம் தேதி, மறுபடியும் மனு அனுப்பினோம், அதற்கும் பதில் வரவில்லை.
சூலூர் வட்ட சமூகநல பாதுகாப்பு அலுவலரிடம் அணுகி, தகவலைப் பெற அறிவுறுத்தினார்கள். ஆனால், அவரும் இதுகுறித்து பதில் கூற மறுக்கிறார். சுல்தான்பேட்டை அலகாபாத் வங்கிக் கணக்கிலேயே, பயனாளிகளுக்கு உதவித்தொகை வரும்.
எனவே, வங்கி மேலாளரிடம் இடைப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட வேண்டிய பணம் குறித்து கேட்டால், அவரும் பதில் கூற மறுக்கிறார். இதில், சுமார் ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பணம் எங்கே போனது என, கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்றார்.