தமது கட்சித் தலைமையில் புதிதாக சமூக ஜனநாயகக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ராமதாஸ், மக்களவைத் தேர்தலுக்கான பாமக வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டார். ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டி இல்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில், கோ.க.மணி கிருஷ்ணகிரி தொகுதியிலும், ஆர்.வேலு அரக்கோணம் தொகுதியிலும், ஆரணி தொகுதியில் ஏ.கே.மூர்த்தியும், சேலம் தொகுதியில் பா.ம.க. இளைஞர் அணி செயலர் அருளும் போட்டியிடுவார்கள். புதுச்சேரி தொகுதியில் ஆர்.கே.ஆர். அனந்தராமன் போட்டியிடுவார் என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் மேலும் கூறும்போது, "பாமக தலைமையில் சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இதற்கான முயற்சி 2 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் எடுத்த முடிவின்படி எடுக்கப்பட்டது.
தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதே எங்கள் கூட்டணியின் கொள்கை. இதை ஏற்றுக் கொண்ட கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறோம்.
காங்கிரஸ், பாஜக, இடதுசாரிக் கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, மதிமுக அல்லாத மாற்று அணியை பாமக அமைக்கும் என்று நான் தொடர்ந்து கூறிவந்தேன். அதற்கு, மக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது. எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டு சமூக ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள், அமைப்புகள் பற்றிய விவரங்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன்.
இந்தப் புதிய கூட்டணி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும். கூட்டணியில் உள்ள யாருக்கு, எத்தனை தொகுதிகள் என்ற விவரத்தையும் விரைவில் அறிவிப்பேன். புதிய கூட்டணி எங்களுக்கு மகிழ்ச்சியாகவும், தேசிய, திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்தியாவிலே முதன்முதலாக வேட்பாளர்களை அறிவித்தது எங்கள் கட்சியாகத்தான் இருக்கும். கூட்டணியில் உள்ளவர்களை கலந்து பேசிய ஒப்புதல் பெற்ற பிறகுதான் தொகுதிகளையும், வேட்பாளர்களையும் அறிவித்துள்ளோம். அன்புமணி ராமதாஸ் நிச்சயமாக தேர்தலில் போட்டியிடுவார். தர்மபுரி தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது ரகசியம்.
தமிழகத்தை கடந்த 46 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக, அதிமுக கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன. எல்லா வகையிலும் சமூக, பொருளாதார, பண்பாட்டு ரீதியாக வளர்ச்சி பெறவில்லை. தமிழக உரிமைகளுக்காக டெல்லியில் போராடி, வாதாடி, அடிக்கடி பேசி பெற வேண்டிய உரிமைகளைப் பெற்றுத் தரவில்லை. பெயரளவிலே முயற்சி செய்துள்ளனர். இதுவே, எங்கள் பிரச்சாரத்தில் முக்கியமாக இடம்பெறும்.
2016-ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்று அணியை உருவாக்கி, தமிழக மக்கள் ஆதரவோடு வெற்றி பெறுவோம்.
ஏற்காடு இடைத்தேர்தலைப் பொறுத்தவரை, பாமக போட்டியிடாது. யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதும் இல்லை" என்றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago