கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டபோது தமிழகத்தில் உள்ள சிறப்புநிலை நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப உத்தரவிடப்பட்டது. கரூர் நகராட்சியிலும், மாநகராட்சியாக உயர்த்தக் கோரி அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் நகராட்சியுடன் அதனை சுற்றியுள்ள உள்ளாட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த பலமுறை நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், பல்வேறு அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக கரூர் நகராட்சியை சுற்றியுள்ள உள்ளாட்சிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவற்றை கடந்த 2011-ல் கரூர் நகராட்சியுடன் இணைத்து 6.03 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்ட கரூர் நகராட்சி 53.26 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. வார்டுகள் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கப்பட்டது. கரூர் நகராட்சி மக்கள்தொகை 2.14 லட்சமாக உயர்ந்தது.
திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் கடந்த 2013-ல் மாநகராட்சியாக தரம்உயர்த்தப்பட்டபோது, கரூர் நகராட்சியில் இருந்தும் மாநகராட்சி தரம் உயர்வுக்கான முன்மொழிவு அனுப்பப்பட்டிருந்த நிலையில் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவில்லை.
இதனால், மத்திய அரசு அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளும் தேர்வான நிலையில், மாநகராட்சியாக கரூர் தரம் உயர்த்தப்படாததால் வாய்ப்பை இழந்தது. இதனால், ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் கிடைக்காமல் போனது.
மக்கள் ஏமாற்றம்
கரூர் நகராட்சியை சுற்றியுள்ள 6 ஊராட்சிகளை இணைத்து கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கரூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தரம் உயர்த்தப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாததால் ஸ்மார்ட் சிட்டி வாய்ப்பை கரூர் இழந்த நிலையில் அம்ருத் திட்டத்தில் 1 லட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கரூர் நகராட்சியில் 1 லட்சம் மக்கள்தொகை இல்லாததால் அம்ருத் திட்டத்திலும் தேர்வு செய்யப்படவில்லை.
கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தாததால் சீரற்ற வளர்ச்சி காணப்படுகிறது. விரிவாக்கத்துக்கு முந்தைய கரூர் நகராட்சியில் 2003-ம் ஆண்டு புதை சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கரூர் மற்றும் இனாம்கரூர் பகுதிகள் மட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டதால் கரூர் நகராட்சி விரிவாக்கத்தில் இணைக்கப்பட்ட தாந்தோணி, சணப்பிரட்டி பகுதிகளில் தற்போதும் புதை சாக்கடை வசதியின்றியே உள்ளன.
கரூர், இனாம்கரூர், தாந்தோணி பகுதிகளில் புதிய காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் சணப்பிரட்டியில் புதிய காவிரி குடிநீர் திட்டமின்றி உள்ளது. இதனால், கரூர் நகராட்சியில் உள்ள பகுதிகளில் சீரற்ற வளர்ச்சியும், அடிப்படை வசதிகளில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.
கரூர் நகராட்சியை ஒட்டியுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 19,779 பேர் வசிக்கின்றனர். கரூர் நகராட்சி விரிவாக்கத்துக்கு முன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் என்ன காரணத்தாலோ கரூர் நகராட்சி விரிவாக்கத்தில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி இணைக்கப்படவில்லை.
இந்த ஊராட்சியில் குப்பையை கொட்டக்கூட இடமின்றி கரூர் நகராட்சியில் பணம் செலுத்தி குப்பையைக் கொட்டி வருகின்றனர். கரூர் நகராட்சியை ஒட்டியுள்ள காதப்பாறை ஊராட்சியில் 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 9,574 மக்கள் வசிக்கின்றனர். அதிகளவு மக்கள் தொகை இருந்தபோதும் ஊராட்சிகள் என்பதால் இப்பகுதிகளில் காவிரி குடிநீர், புதைச் சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி பின்தங்கி உள்ளன.
கடந்த 6 ஆண்டுகளில் கரூர் நகராட்சி அதனையொட்டி உள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை உள்ளிட்ட பிற ஊராட்சிகளில் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, கரூர் நகராட்சியின் எதிர்காலம் மற்றும் நகரின் சீரான வளர்ச்சியை கருத்தில்கொண்டு கரூர் நகராட்சியை ஒட்டியுள்ள உள்ளாட்சிகளை கரூர் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
இதன் மூலம் அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படும். சீரான வளர்ச்சி ஏற்படும். சிறப்பு, கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் கரூர் நகரம் மற்றும் நகரை ஒட்டியுள்ள உள்ளாட்சிகள் வளர்ச்சி அடையும். இது கரூர் நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என மக்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து கரூர் மாவட்ட திருக்குறள் பேரவை செயலாளர் மேலை.பழநியப்பன் கூறியபோது, “ஜவுளி ஏற்றுமதி, கொசுவலை, பேருந்து கூண்டு கட்டுதல், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களில் கரூர் சிறப்பு பெற்றுள்ளது. தொன்மை, தொழில், ஆன்மிகம் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. பழமையான சிறப்பு வாய்ந்த கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதன் மூலம் நகரின் அடிப்படை மற்றும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இது நகரின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும்” என்றார்.
ஏஐடியுசி கரூர் மாவட்டச் செயலாளர் ஜிபிஎஸ்.வடிவேலன் கூறியபோது, ‘‘கரூர் நகரின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் நகரம் மேலும் வளர்ச்சி அடையும், வேலைவாய்ப்புகள் பெருகும். பல்வேறு வசதிகள் ஏற்படும். இதனால் கரூர் நகரம், நகரையொட்டியுள்ள, கரூரை ஒட்டியுள்ள பிற மாவட்ட மக்கள் பயனடைவார்கள்” என்றார்.
கரூர் நகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் கூறியபோது, “கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது என்பது அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago