சமீப காலமாக இந்தியாவே உற்று கவனித்துக் கொண்டிருப்பது தமிழக அரசியல் நிலவரத்தை மட்டுமே. ஒரு தியானம் அனைத்துக்கும் ஆல்ஃபாவாக இருந்தது என்றால் நம்பித்தானே ஆகவேண்டும்.
அந்த 'தியானப் புரட்சிக்கு' மக்களின் ஆதரவு உணர்ச்சிப் பெருக்குகளாக வெளிப்பட, ஆட்டம் கண்டது அதிமுக.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஜானகி, ஜெயலலிதா அணிகள் பிரிந்தது எப்படி எதிர்பார்க்கப்பட்ட விளைவாக இருந்ததோ அப்படித்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் விரிசல் ஏற்பட்டதும். ஆனால், இத்தனை விரைவில் அது நடந்தேறிவிடும்; அதுவும் எப்போதுமே அமைதி காத்துவந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மவுன கலைப்பால் அது நிகழும் என்பது மட்டும்தான் யாருமே எதிர்பார்க்காத அதிரடி திருப்பம்.
அதிரடிகளுக்கும், பரபரப்புகளுக்கும் குறைவில்லாத சமீபத்திய தமிழக அரசியல், சில கவன ஈர்ப்புகளை விட்டுச் சென்றுள்ளது. எழுச்சி கொண்ட சசிகலா, புரட்சி பேசிய ஓபிஎஸ், எதிர்பார்ப்புகளை கூட்டிய பொறுப்பு ஆளுநர், பொறுப்பாக செயல்பட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் என பல்வேறு ஈர்ப்புகள் இருக்கின்றன.
சசிகலாவின் திடீர் 'எழுச்சி':
ஜெயலலிதாவின் மறைவு வரைக்கும் சசிகலா தமிழக மக்களுக்கு அவரின் தோழி பிம்பமாக மட்டுமே தெரிந்திருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர்தான் அவரது உருவமும், பேச்சும் தமிழக மக்களின் பொதுப்பார்வைக்கு அடிக்கடி கிடைக்கப்பெற்றது. ஜெயலலிதாவைப் போல் சில ஒப்பனைகள் செய்து கொண்டு அவர் பொது அரங்கில் வந்து சென்றார்.
பொதுச் செயலாளராக அவர் முதல்முதலில் ஆற்றிய உரை 'எழுதிவைத்து படித்தது' என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த வாசிப்பில் ஒரு பதற்றம் இருந்தது என்னவோ உண்மைதான்.
ஆனாலும், ஓபிஎஸ்.ஸுக்கு எதிராக அவர் காய் நகர்த்தியவிதம் அரசியலில் கவனம் பெற்றது. ஆளுநரை சந்தித்து ஆட்சி அழைக்க உரிமை கோரினார் சசிகலா. ஆளுநர் தரப்பிலிருந்து எந்த சமிக்ஞையும் கிடைக்காத சூழலில் அமைச்சர் பாண்டியராஜன், பொன்னையன், மதுசூதனன் என அடுத்தடுத்து பெருந்தலைகள் ஓபிஎஸ் அணியில் இணைய, கூவத்தூர் கிளம்பினார் சசிகலா. ஏனெனில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் அணி மாற்றமும் அவரது கனவை அசைத்துவிடும் என்பதை உணர்ந்திருந்தார். ஒரு நாள் அல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் கூவத்தூர் பயணித்தார். அந்தப் பயணங்கள் அவருக்கு பலனளித்தது. ஓபிஎஸ்.ஸுக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை ராணுவ கட்டுப்பாட்டால் தடுக்கப்பட்டது.
கூவத்தூரில், பத்திரிகையாளர்களுடன் அவர் நிகழ்த்திய அந்த சந்திப்பின் தொனி கவனிக்கப்பட வேண்டியது. அதற்கு முன்னதாக, தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் பிராம்படர் வைத்து பேசினார் என்று கிண்டல் செய்யப்பட்ட அதே சசிகலா, அன்று தன்னை குட்டி சிங்கம் என சுய பிரகடனம் செய்து கொண்டார்.
நீங்கள் எந்த பத்திரிகையைச் சேர்ந்தவர்? தீர்ப்பு வரட்டுமே.. உங்களுக்கு முன்கூட்டியே சேதி வந்துவிட்டதோ.. ஓரளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்.. என்ற சசிகலாவின் அந்த எதிர்கேள்விகள் கருணாநிதி என்ற அரசியல் ஆளுமையை நினைவுபடுத்திச் சென்றது. அது அந்த எதிர்கேள்வி கேட்கும் தினுசு மட்டுமே என்பது வெகு நிச்சயமானது.
சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்குப் பின்னரும் கட்சி கையை விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக தினகரனையும், வெங்கடேஷையும் மீண்டும் கட்சியில் சேர்த்து தனது தலையீட்டை உறுதி செய்து கொண்டிருக்கிறார். எங்கிருந்தாலும் கண் அசைவில் கட்சியை நடத்துவேன் என அவர் கூறியதன் நோக்கம் இதைத் தாண்டி வேறு என்னவாக இருந்திருக்க முடியும்?
சிறை செல்வதற்கு முன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஒரு விசிட். இனி பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள்கூட ஜெ. நினைவிடத்துக்கு சென்றுவிட்டு தான் தேர்வெழுதப் போகிறேன் எனக் கூறுவார்களோ என்ற அளவுக்கு அனைவரும் விசிட் அடிக்கும் இடமாகியிருக்கிறது அந்த இடம். அங்குதான், அந்த சபதம் எடுக்கப்பட்டது. முணுமுணுக்கப்பட்ட சபதம்.. மூன்று முறை ஓங்கி அடித்தபடி எடுக்கப்பட்டது. அத்துடன் சிறைக்கும் சென்றுவிட்டார்.
ஆனால், திடீரென 'எழுச்சி' கொண்ட சசிகலா ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். ஓபிஎஸ் எதிர்ப்பு, ஆளுநர் தாமதம், எம்.எல்.ஏ.க்கள் தாவல் என எதற்குமே மறந்தும்கூட மத்திய அரசை குறை சொல்லவில்லை. தீர்ப்புக்கு பின்னரும்கூட. அவரது அம்புகள் எல்லாம் திமுகவை நோக்கிமட்டுமே பாய்ந்தன. தமிழக அரசியல் குழப்பங்களுக்குப் பின் பாஜக இருக்கிறது என பகிரங்க குற்றச்சாட்டுகள் எத்தனை வந்தாலும் அது எல்லாம் தன் காதுகளில் விழாததுபோலவே இருந்தார் சசிகலா. இந்த 9 நாட்களிலும், ஜெயலலிதாவைப் போல் திமுகவை எதிர்ப்பதாகவே காட்டிக் கொண்டார்.
அடக்குமுறை, அதிகாரம், ஆதிக்கம் இதில் எதை வேண்டுமானால் செலுத்தியோ அல்லது எல்லாவற்றையும் ஒருசேர செலுத்தியோ அடுத்த சலசலப்பு வரும்வரை கட்சியை சசிகலா நிச்சயம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.
'ஓங்கி ஒலித்த' ஓபிஎஸ்:
ஒரு டிரேட்மார்க் சிரிப்பு, லோ டெசிபல் பேச்சு, சட்டப்பேரவையில் 'அம்மா' புகழ் பாட மட்டுமே உயர்த்தப்பட்ட அந்த குரல் போர்க்குரலாக மாறும் வரலாற்றுப் பக்கத்தில் இடம்பிடிக்கும் என்று எந்த ஒரு அரசியல் நோக்கரும் கணித்திருக்க முடியாது. ஆனால், அவர் வீறுகொண்டு எழுந்தார். "ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தினார்கள், கட்சியில் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்துகிறது, கட்சியை மீட்க வேண்டும்" என்றார்.
அம்மா ஆணைப்படி என்று சொல்லிப் பழகியவர் அம்மாவின் ஆன்மா ஆணைப்படி என்றார். ஊடகங்களை சந்திக்கவே செய்யாத முதல்வராக ஜெயலலிதா இருந்தார். ஆனால், ஓபிஎஸ்., ஊடகங்களுக்கு ரிலேயில் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார்.
ஃபேஸ்புக் டைம்லைன்களும், வாட்ஸ் அப் ஷேர்களும் ஓபிஎஸ் ஆக்கிரமிப்புகளால் நிரம்பி வழிந்தன. மவுன கலைப்பு புரட்சி தனக்கு சாதகமாகும் என்று அவர் போட்ட கணக்கு வேறு, நடந்தது வேறு. கணக்கில் தவறு நிகழ்வதும் ஒரு பாகம்தானே. அப்படித்தான், சசி கூடாரத்துக்கு சாதகங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அது கட்டமைக்கப்பட்டதாகக் கூட இருக்கலாம். இருந்தாலும் அவரது மவுன கலைப்பு புரட்சி சரியான பலன்களைத் தரவில்லை.
ஒருவேளை அவர் மவுனமாகவே இருந்திருந்து சசிகலாவும் முதல்வராகியிருந்தால் ஓபிஎஸ் மீண்டும் முதல்வராகியிருக்கக்கூடும் என பொதுவெளியில் கருத்துகள் உலாவுகின்றன. ஆனால், இரண்டாவது முறையாக தமிழகம் ஒரு பேரவமானத்தை சந்தித்திருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபணமானதால் பதவி இழக்கும் 2-வது முதல்வராகியிருப்பார் சசிகலா.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் இருந்து ஒவ்வொருவராக தன்வசம் வருவார்கள் எண்ணிக்கை உயரும் என ஓபிஎஸ் கணித்தார். ஆனால் கூவத்தூர் எண்ணிக்கை குறையாதது, சசிகலாவின் ஆதிக்கம், அவரது குடும்பத்தினர் ஆதிக்கம் அதிமுகவில் என்னவென்பதையே காட்டியிருக்கிறது. அரசாங்கத்தில் இருக்கும் பல முக்கிய நியமனங்கள்கூட சசிகலாவின் சிபாரிசுகள்தான். கட்சியிலும் அப்படித்தான். இப்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அவரது ஆதிக்கம் ஆழமாகிவிட்டது.
இத்தகைய சூழலில் 15 நாள் கால அவகாசம்கூட ஓ.பன்னீர்செல்வம் கூறும் 'தர்மயுத்தத்துக்கு' உதவுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். அதிமுக சசிகலா தலைமையில் வழிநடத்தப்படுவதற்கு கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், சில நிர்வாகிகள் ஆதரவுக்கரம் நீட்டினாலும் அதிமுகவின் பலமான 1.5 கோடி தொண்டர்கள் மத்தியில் அவர் எப்படி தன்னை நிலைநிறுத்திக் கொள்வார் என்பது கேள்விக்குறியே.
இத்தகைய சூழலில் மக்கள் ஆதரவைப் பெற்றுவந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் ஆதரவைக் கோரியதும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆதரவைப் பெற்றுக் கொண்ட விதமும் அவருக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது. ஜெயலலிதாவின் சாயலில் இருக்கிறார் என்பதற்காக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட அதே மரியாதைக்குரியவரா தீபா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அதிமுகவில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சில எம்.பி.க்களின் ஆதரவை மட்டுமே வைத்துக் கொண்டு ஓபிஎஸ் என்ன செய்ய முடியும் என்பதை அவரேதான் நிரூபிக்க வேண்டும்.
அவசியத்தை உணரவைத்த ஆளுநர்:
தமிழக அரசியலின் சமீபத்திய அதிரடிகளின் முக்கிய நாயகர்களுள் ஒருவர் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஓ.பி.எஸ். ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக பதில் அனுப்பிய வித்யாசாகர் ராவ், சசிகலாவின் கோரிக்கைக்கு எந்த பதிலும் தரவில்லை. ஆளுநர் எங்கிருக்கிறார் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு கூடிவந்த நிலையில் அவர் வந்த பிறகும் வெறும் சந்திப்புகள் மட்டுமே நடந்தேறின.
ஆளுநரும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுகிறார் என வாத விவாத நிகழ்ச்சிகள் நடந்தபோதும், ஆளுநர் மாளிகை எவ்வித சலனமும் இன்றியே இருந்தது. இதுவரை ஒரு பொறுப்பு ஆளுநருக்கு இவ்வளவு வேலைப் பளு வந்தது இதுவே முதன்முறையாக இருக்குமோ என்றளவுக்கு அழுத்தங்கள் இருதரப்பிலிருந்தும் அவருக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதும் ஆளுநருக்கு பாராட்டுகள் குவிந்தன. அதற்குப் பிறகும் கலையாத மவுனம் ஒருவழியாக எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க அழைத்ததில் கலைந்தது.
ஆனாலும், அவர் பணி முடிந்துவிடவில்லை பழனிச்சாமி இன்னும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார். பரபரப்பான தலைமைச் செயலகத்தை நாம் கண்டிருப்போம், பரபரப்பான ஆளுநர் மாளிகையையும் நம்மை காண வைத்திருக்கிறார் வித்யாசாகர் ராவ்.
யாருக்கு லாபம்?
இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய கட்சி என்ற அந்தஸ்துடைய அதிமுகவில் ஏற்பட்டுள்ள சலசலப்பு நிச்சயம் திமுகவுக்கு மட்டுமல்ல இன்னும் பல ஆசையுள்ள கட்சிகளுக்கும் அறுவடை காலம்தான். ஆனால், கருணாநிதி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால் இந்த சூழலில் திமுக நிச்சயம் நிறைய சாதித்திருக்கும் என்பதுதான் நிதர்சனம்.
அண்மையில் நடந்த திமுக உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக அரசியல் நிலவரத்தின் பல்வேறு சாத்தியக்கூறுகளும் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் யாருக்கும் ஆதரவில்லை என்ற திமுக நிலைப்பாடு சமயோஜிதமானதே.
"நாங்கள் சுதந்திரமாக, உல்லாசமாக, குதூகலமாக இருக்கிறோம்" என்றெல்லாம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொடுத்த பேட்டியின் எதிர்வினை அடுத்த தேர்தலில் தெரியும். அதன் பயனை திமுக அறுவடை செய்யும்.
சகோதர யுத்தத்தால் திமுக உடையும் என்றே பேசப்பட்டு வந்தது. ஆனால், அதிமுகவில்தான் விரிசல் விழுந்திருக்கிறது. இதுவே திமுகவுக்கு பெரிய பலம். ஒரு செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தீவிரமாக செயல்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களே சொல்லத் தொடங்கிவிட்டனர்.
நிழலா.. நிஜமா?
தமிழக முதல்வராகிவிட்டார் எடப்பாடி.கே.பழனிசாமி. அதற்கு முன்னதாகவே அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராகிவிட்டார் சசிகலாவின் அக்கா மகன் டிடிவி.தினகரன்.
இப்போது எழுந்துள்ள கேள்வி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சுதந்திரமான முதல்வராக கடமையாற்றுவாரா? இல்லை அவரது செயல்பாடுகளில் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலாவின் தலையீடும், போயஸ் தோட்டத்திலிருந்து தினகரனின் தலையீடும் இருக்குமா என்பதே. எடப்பாடி பழனிசாமி நிஜமாக இருப்பாரா அல்லது சசிகலா குடும்பத்தின் நிழலாக இருப்பாரா? காலப்போக்கில் தெரிந்துவிடும்.
சசிகலா முதல்வராக பதவியேற்கப் போகிறார் என்றவுடன் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டெழுந்ததை சமூக வலைதளங்கள் மூலம் உணரமுடிந்தது. சசிகலா எதிர்ப்பு அலைகள், ஓபிஎஸ் ஆதரவு கோஷங்களாக உருமாறின. குறிப்பாக, சமூக வலைதளங்களில் வெளிப்பட்ட சசிகலா எதிர்ப்பு கோஷங்கள் அவர் சிறை சென்ற பிறகு தணிந்துவிட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்வராவார் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பலைகள் அந்த அளவுக்கு பெரிதாக இல்லை என்பது நிதர்சனம். இப்படியிருக்கும் பட்சத்தில் சசிகலா, அவரது குடும்பத்தின் ஆதிக்கம் அப்பட்டமாக தொடருமேயானால் நிச்சயம் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
ஆனாலும், இந்தப் படத்துக்கு ஒரு க்ளைமாக்ஸ்தான் முடிந்திருக்கிறது. இன்னும் சில க்ளைமாக்ஸ் உள்ளனவா? அல்லது இவ்வளவுதானா என்பது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு முடிவு வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, அதிரும் இசைக்கும், ‘பிரேக்கிங் நியூஸ்’களுக்கும் ஒரு சிறிய இடைவேளை.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago