சொத்துக் குவிப்பு வழக்கு: அக்.30-ல் ஜெ. நேரில் ஆஜராக உத்தரவு

By செய்திப்பிரிவு





ஜெயலலிதாவின் சொத்துக்கு விப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் புதிய நீதிபதி முடி கவுடர் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சரியாக காலை 11 மணிக்கு வழக்கை விசாரித்த நீதிபதி முடி கவுடர், ''வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் எங்கே?'' என வினவினார். அதற்கு ஜெயலலிதா தரப்பில் ஆஜரான‌ வழக்குரைஞர் பி. குமார், ''குற்றவியல் நடைமுறை சட்டம் 317-ஆம் பிரிவின்படி குற்றவாளிகள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'' என மனுவை நீட்டினார்.

உடனே நீதிபதி முடி கவுடர் அரசு தரப்பு வழக்குரைஞர் பவானி சிங்கிடம் ''இதற்கு நீங்கள் (பவானி சிங்) ஆட்சேபம் தெரிவிக்கிறீர்களா?'' என கேட்டார். அதற்கு பவானி சிங், ''நான் ஆட்சேபிக்கவில்லை'' என்றார். இதனால் கோபமடைந்த நீதிபதி முடி கவுடர், ''இனி வழக்கு விசாரணைக்கு வருகிற எல்லா நாள்களிலும் வ‌ழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். அப்போதுதான் வழக்கில் என்ன நடக்கிறது என தெரியும். எனவே, அடுத்த விசாரணை நாளில் தவறாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராக வேண்டும்'' என கூறினார்.

இதனையடுத்து ''நான் (நீதிபதி) புதிதாக இந்த வழக்கிற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதால் வழக்கு தொடர்புடைய ஆவணங்களை படிப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதன் பிறகு வழக்கின் இறுதி வாதத்தை வைத்து கொள்வோம்''என்றார். அதனைத் தொடர்ந்து அரசு வழக்குரைஞர் பவானி சிங்கிடம் வழக்கு தொடர்புடைய ஆவணங்களை நீதிபதி கேட்டார். அதற்கு பவானி சிங் ''எனக்கு நகல் இன்னும் கிடைக்கவில்லை'' என்றார்.

இதனால் மீண்டும் கோபமடைந்த நீதிபதி முடி கவுடர், ''வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில்தான் இருக்க வேண்டும். எனவே, சென்னை மத்திய ரிசர்வ் வங்கியில் இருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல வழக்கில் இணைக்கப்பட்டுள்ள‌ லெக்ஸ் ப்ராப்பர்டி நிறுவனத்தின் சொத்துக்களையும் அதன் ஆவணங்களையும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டும்'' என உத்தரவிட்டார்.

இதனைத் தொட‌ந்து பேசிய ஜெயலலிதாவின் வழக்குரைஞர் பி. குமார், ''கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் பவானி சிங் நீக்கம் தொடர்பான மனு மீதான விசாரனை நிலுவையில் இருக்கிறது. மேலும் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்பதால் அக்டோபர் 23-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைக்க வேண்டும்'' என வேண்டுகோள் வைத்தார். அதற்கு அரசு வழக்குரைஞர் பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. தாம் (பவானி சிங்) இறுதி வாதத்திற்கு தயாராக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முடி கவுடர், வழக்கை அக்டோபர் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் வழக்கில் குற்றம் சட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்ற முதல் நாள் விசாரணையிலே நீதிபதி முடி கவுடர் இப்படியொரு அதிர்ச்சி உத்தரவை பிறப்பித்து இருப்பதால் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கர்நாடக அரசிற்கு திமுக கடிதம்!

சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா ஜெயலலிதாவுக்கு சாதக‌மாக நடந்து கொண்டார். ஆதலால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என திமுக பொதுசெயலாளர் க. அன்பழகன் சார்பில் கர்நாடக அரசிற்கும், கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடந்த வியாழக்கிழமை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிபதி பதவி நீட்டிப்பு விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுக பொது செயலாளர் க. அன்பழகனின் சார்பாக தர்மபுரி திமுக எம்.பி.யும், வழக்குரைஞருமான தாமரைச்செல்வன், நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என கர்நாடக அரசிற்கும்,கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச்.வஹேலாவிற்கும் 19 பக்க கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து திமுக எம்.பி.தாமரைச்செல்வன் கூறியது: ''நீதிபதி பாலகிருஷ்ணா சொத்து குவிப்பு வழக்கை விசாரித்தபோது ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் ஒரு கேள்வி கூட கேட்காமல் விசாரணைக்கு எடுத்து கொண்டார். ஆனால் இதுநாள் வரை எந்த மனுவின் மீதும் தீர்ப்பே அளிக்காமல் வழக்கை விசாரித்துள்ளார். அதற்கு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மேலும் குற்றவாளிகள் தரப்பில் ஆவணங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போதெல்லாம் அனுமதித்தார். அதுமட்டுமில்லாமல் வழக்கில் ஜெயலலிதா தரப்பில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட 50 ஆவணங்களையும் உடனடியாக வழக்கில் சேர்த்து கொள்வதாக அறிவித்தார்.

சாட்சிகளின் விசாரணையின் போது ஆஜரான ஆடிட்டர் வைத்தியநாதன் தனக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களை பற்றி எல்லாம் வாக்கு மூலம் அளித்தார். அதற்கு அரசு வழக்குரைஞர் பவானி சிங்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் நீதிபதி பாலகிருஷ்ணா, வைத்தியநாதனின் வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதுமட்டுமில்லாமல் சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக பணியாற்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் சம்பந்தம் அரசு தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தவர். ஆனால் அவரை ஜெயலலிதா தரப்பு சாட்சியாக மாற்றி சம்மனே வழங்காமல் சாட்சியாக விசாரித்து இருக்கிறார். இது நீதிமன்றத்தையே கேலி கூத்தாக்கும் செயலாகும்.

பாலகிருஷ்ணா பதவியை நீட்டித்தால் ஜெயலலிதா விடுதலையாகி விடுவார்!

இவை அனைத்தையும் விட சொத்து குவிப்பு வழக்கில் அரசு வழக்குரைஞர் இல்லாமலே வழக்கை இரண்டு மாதங்கள் நடத்தியுள்ளார். செப்டம்பர் 30-ஆம் தேதி தாம் (பாலகிருஷ்ணா) ஓய்வு பெறப்போகிறோம் என்பதால் வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்றெண்ணி பாராபட்சமாக விசாரித்து இருக்கிறார். எனவே நீதிபதி பாலகிருஷ்ணாவிற்கு பதவி நீட்டிப்பு வழங்கினால் சொத்து குவிப்பு வழக்கில் நீதியை நிலைநாட்ட வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவை விடுதலை செய்து விடுவார். எனவே அவருக்கு எக்காரணம் கொண்டும் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என கர்நாடக அரசிற்கும்,கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எச். வஹேலாவிற்கும் கடிதம் அளித்திருக்கிறோம். மேலும் இக்கடிதத்தின் நகல்களை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணிபுரிகிற 30 நீதிபதிகளுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பி இருக்கிறோம்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்