சைபர் குற்றங்களை ஒடுக்க அதிக நிதி ஒதுக்கீடு: ஜெ. வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சைபர் குற்றங்களை ஒடுக்குவதற்கு மத்திய அரசு தனது நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறையை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளதாக, டெல்லி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று தில்லியில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தில், தமிழகம் சார்பில் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டு, முதல்வர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

* நமது ஜனநாயக கட்டமைப்பில் பிளவை ஏற்படுத்த முயலும் பிரிவினைவாத சக்திகளை உறுதியுடன் முறியடிக்க, இதுபோன்ற தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தைப் பயன்படுத்தி, பாரம்பரிய இந்தியாவின் மதிப்புகளை நாம் வலுப்படுத்துகிறோம்.

* சட்டம்-ஒழுங்கு பராமரித்தலை பொறுத்தவரை, இதுவரை தமிழகத்தில் மத அடிப்படைவாதம், இடதுசாரி பிரிவினைவாதம், மதவாத வன்முறைகள் இல்லை. இதற்கு காரணம், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையினருக்கு தாம் சுதந்திரமான, சமரசம் செய்துகொள்ளாத ஆதரவை அளித்திருப்பதுதான். சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதில் தமிழகம் சிறப்பான சாதனைபுரிந்து, தேசிய அளவில் தற்போது தமிழகம் அமைதிப் பூங்கா என்ற நற்பெயரை எடுத்துள்ளது.

* தமிழகத்தில் மத மோதல்கள் அல்லது சாதி அடிப்படையிலான பதற்றங்களை உருவாக்க முயலும் எந்தவொரு சக்திகளுக்கும் அரசு இடங்கொடாமல், அதுபோன்ற சக்திகளின் நடவடிக்கைகளை இரும்புக்கரம்கொண்டு அடக்குவதற்கு காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.

* தமிழக உளவுத்துறையினரின் சிறப்பு பிரிவினர், மதவாத அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்புடன் கண்காணித்து வருகிறார்கள். பேச்சுக்கள், துண்டுப் பிரசுரங்கள், ஒலி-ஒளி வெளியீடுகள் மற்றும் இதர நடவடிக்கைகள் மூலம் மத உணர்வுகளை தூண்டும் வகையில் செயல்படுவோருக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

* நாட்டில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் அடிப்படை கடமையாகும். ஆனால், அதற்கு மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் அவசியம். உள்நாட்டு சண்டையில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு, மத்திய அரசும், மாநிலங்களும் சம அளவிலான பங்குதாரர்களாக இருப்பதுடன், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சம உரிமைகளை அளிக்க வேண்டும். என்றாலும், அரசியல் சாசனத்தில் மாநில அரசுகளுக்கு உள்ள உரிமைகள் மீது ஆதிக்கம் செலுத்தும் வகையில், மத்திய அரசு தன்னிச்சையான நடவடிக்கைகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.

* இந்தியாவின் சில பகுதிகளில் விரும்பத்தகாத வகுப்புக் கலவரங்கள் நடைபெற்றதையடுத்து, 2011-ம் வருடத்திய வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை சட்டமாக்க வேண்டுமென கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த சட்ட மசோதா, மத அல்லது வகுப்பு கலவரத்தையோ, திட்டமிட்ட வன்முறையையோ தடுக்கும் நோக்கத்தை பூர்த்தி செய்ய இயலாது என்பது எனது கருத்து. மசோதாவில் இடம்பெற்றுள்ள பல ஷரத்துக்கள் வார்த்தை ஜாலமாக இருப்பதால், அவற்றை தவறாக பயன்படுத்த சாத்தியம் உள்ளது.

* சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் சமூக விரோத சக்திகளின் சவால்களை, வலுவான, திறமையான, ஆயுதம் பலம் பொருந்திய, கட்டுக்கோப்பான காவல்துறையால் மட்டுமே சந்திக்க முடியும்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

* காவல்துறையை நவீனப்படுத்துவதும், உளவுப்பிரிவு மற்றும் காவல்துறை பயிற்சி கட்டமைப்பு வசதியை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை மாநில முதலமைச்சர்கள் நன்கு அறிவார்கள். காவல்துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும் மாநில அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு குறுக்கீடாக நிதி கட்டுப்பாடு உள்ளது. காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக வழங்கப்படும் நிதியுதவியை கணிசமாக உயர்த்த வேண்டும்.

* 2012-2013-ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டில் காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக மத்திய அரசு வழ‍ங்கிய நிதியுதவி கணிசமாக குறைந்து விட்டது. நவீனமயமாக்கும் திட்டத்திற்கான மத்திய அரசின் பங்களிப்பு 75 சதவீதத்திலிருந்து, 60 சதவீதமாக குறைந்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. எனவே, மாநிலங்களில் காவல்துறையை நவீனமாக்குவதற்காக திருத்தி அமைக்கப்பட்ட தேசிய திட்டத்தை அறிவிப்பதோடு, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினையும் கணிசமாக உயர்த்த வேண்டும்.

சைபர் குற்றங்கள்

* நாளுக்கு நாள் பெருகி வரும் குற்றங்கள், குற்றங்களின் தன்மை, வகுப்புவாதம், நவீன தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரம் போன்றவை நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவை கட்டுப்படுத்தப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி, தீவிர வெறுப்புணர்வை தூண்டும் பிரச்சாரத்தையும், சைபர் குற்றங்களையும் ஒடுக்குவதற்கு நவீன சாதனங்கள் பெறுவதற்கும், காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பதற்கும், கணிசமான முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முதலீடு செய்துள்ள போதிலும், இந்திய அரசு தனது பொறுப்பினை தட்டிக்கழிக்காமல், நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும்.

நவீன சாதனங்கள் பெறுவதற்கும், காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பதற்கும், கணிசமான முதலீடு தேவைப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் முதலீடு செய்துள்ள போதிலும், இந்திய அரசு தனது பொறுப்பினை தட்டிக்கழிக்காமல், நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும்.

சமூக ஊடகங்கள்

* மக்கள் தொடர்பு மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு சமூக ஊடகங்களை திறம்பட பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இணைய ஊறுகளான ஹேக்கிங், சைபர் புல்லிங் உள்ளிட்ட சமூக ஊடகத்தை, சமூக விரோத சக்திகள் தவறாக பயன்படுத்துவதை குறைக்க, இத்தகைய இணைய தளங்களில் பயிற்சி பெற்ற ஊழியர்கள் மூலம், தேவையான தடுப்பு நடவடிக்கைகள், தீவிர கண்காணிப்பு மற்றும் நிர்வாகம் மேற்கொள்ளப்படவேண்டும்.

* வகுப்பு கலவரங்களை தடுக்கவும், நிலைமையை சமாளிக்கவும், உரிய நேரத்தில் உளவுத் தகவல்களை சேகரித்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

* சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் காவல்துறை, இவையெல்லாம், அரசியலமைப்பு சட்டப்படி, மாநிலம் சார்ந்த விஷயங்கள் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். மாநிலங்கள் சமமான கூட்டாளிகளாக மதிக்கப்பட வேண்டும். ஆதாரங்கள், தகவல்கள், நுண்ணறிவு ஆகியவற்றை மாநிலங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், பங்கரவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம், வகுப்புவாதம் ஆகியவற்றை தீவிரமாக ஒடுக்க முடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்