நேரடி உணவு மானியத் திட்டத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்: அன்புமணி

சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரித்து உணவு மானியத்தை நேரடியாக குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான மானியத்தை நேரடியாக குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

முதல்கட்டமாக இந்தத் திட்டம் புதுச்சேரி, சண்டிகர் உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.நேரடி உணவு மானியத் திட்டத்தின்படி, முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதத்திற்கு ரூ.500 முதல் ரூ.700 வரை மானியம் வழங்கப்படும். பின்னர் அரசால் நிர்ணயிக்கப்படும் உணவு தானியங்கள் மற்றும் மண்ணெண்ணெயின் கொள்முதல் விலைக்கு ஏற்ற வகையில் மானியத்தின் அளவு மாற்றியமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இத்திட்டத்தின்படி உணவு தானியங்களையும், மண்ணெண்ணெயையும் இப்போதுள்ளபடியே நியாயவிலைக்கடைகளில் முழு விலையை செலுத்திப் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது வெளிச்சந்தையில் வாங்க வேண்டுமா? என்பதை மத்திய அரசு இதுவரை தெளிவாக அறிவிக்கவில்லை.

சமையல் எரிவாயுவுக்கு நேரடி உணவு மானியம் வழங்கும் திட்டத்தின்படி, ஏற்கெனவே எரிவாயு உருளை வழங்கிய நிறுவனங்களிடமே தொடர்ந்து உருளை பெற முடிவதாலும், அவற்றுக்காக கூடுதலாக அளிக்கப்படும் விலையை அரசு மானியமாக வழங்குவதால் தற்காலிகமாக பாதிப்பு இல்லை; மத்திய அரசு மானியத்தைக் குறைக்கும் போதோ, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதோ தான் சிக்கல் ஏற்படும்.

ஆனால், நேரடி உணவு மானியத் திட்டம் இதேபோல் நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், இதுதொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு, ‘‘இந்திய உணவுக் கழகத்தை கலைக்க வேண்டும்; நேரடி கொள்முதல் முறை ரத்து செய்யப்பட வேண்டும்; தானியக் கொள்முதல் முழுவதும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் நேரடி கொள்முதல் முறைக்கு முடிவு கட்டப்படும்; அவ்வாறு முடிவு கட்டப்பட்டால் நியாயவிலைக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு விடும் . அதனால் தான் சாந்தகுமார் குழுவின் பரிந்துரைகளை ஏற்கக்கூடாது என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்தே பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருந்த போதும் அதை பாமக கடுமையாக எதிர்த்தது. இதையடுத்து இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அத்திட்டத்திற்கு இப்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு உயிர் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.

நேரடி உணவு மானியத் திட்டத்தின் மூலம் உணவு மானியத்தில் ரூ.25,000 முதல் ரூ.30,000 கோடி மிச்சப்படுத்த முடியும் என மத்திய அரசு கருதுகிறது. ஆனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இத்திட்டத்தின்படி நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டால், அதன்பின் அரசு தரும் மானியத்தைக் கொண்டு வெளிச்சந்தைகளில் தான் உணவு தானியங்களை வாங்க வேண்டியிருக்கும். இது மக்களுக்கு எவ்வகையிலும் பயன் தராது.

உதாரணமாக தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. நேரடி மானியத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் சுமார் ரூ.500 மானியம் கிடைக்கும். ஆனால், 20 கிலோ அரிசியும், 10 லிட்டர் மண்ணெண்ணெயும் வாங்க ரூ. 1,500 செலவாகும். இதனால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.1,000 இழப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி, நேரடி நெல் கொள்முதல் முறை ஒழிக்கப்பட்டால் உழவர்கள் தங்களின் விளை பொருட்களை தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்க நேரிடும். இது ஏழைகளுக்கும், உழவர்களுக்கும் மிகப் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.

எனவே, சாந்தகுமார் குழு பரிந்துரைகளை நிராகரித்து உணவு மானியத்தை நேரடியாக குடும்ப அட்டை தாரர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தும் திட்டத்தையும் நிரந்தரமாக கைவிட வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்