மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், இவ்வழக்கை சமரச மையத்துக்கு பரிந்துரை செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.தேவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு ஏற்புடையதல்ல என்று பெண்ணியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வி.மோகன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், கர்ப்பமான அந்தச் சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இது தொடர்பான வழக்கில் மோகனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்த கடலூர் மகளிர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மோகன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.தேவதாஸ் விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
‘‘இந்த வழக்கைப் பொறுத்த வரை அப்பாவியான சிறுமியும், அவரது பெண் குழந்தையும் பெரிய கேள்விக்குறியாக உள்ளனர். அந்தச் சிறுமிக்கு பெற்றோர் இல்லை. இது போன்ற வழக்குகளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மட்டும் பாதிக்கப்படுவார்.
ஆனால், இவ்வழக்கில் பாலியல் பலாத்காரத்தில் பிறந்த குழந்தையும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது, மிகப்பெரிய சோகம்.
ஆண்களின் இச்சைக்கு பெண்கள் எளிதாக இலக்காகிவிடுகின்றனர். அதனால், அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. நம் நாட்டில் பெண்கள் பெரும் சொத்தாக கருதப்படுகின்றனர். பெண்களை சக்தி, தாய், சகோதரி, செவிலித் தாய், வாழ்க்கைத் துணை, முக்கிய அடையாளம் என்றெல்லாம் அழைக்கின்றனர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருப்பதாக பாராட்டுகின்றனர்.
பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு வழி வகுக்கிறது. இருப்பினும், நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை மிகவும் வருந்தத்தக்க அளவிலேயே இருக்கிறது. அவர்களுக்கு நியாயமான அதிகாரத்தை வழங்குவதன் மூலமே பெண்களிடம் முன்னேற்றத்தைக் காண முடியும். ஆண்களிடம் இருந்து கருணையை எதிர்பார்க்கவில்லை. சமவாய்ப்பைத்தான் அவர்கள் எதிர்பார்க் கின்றனர்.
காலம், செலவு போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் மாற்று முறை தீர்வுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. குற்ற வழக்குகள் மற்றும் பாலியல் வழக்குகளில்கூட சமரசம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெண் குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வழக்கில் சமரச தீர்வு காண முயற்சிக்கலாம். அதற்கு குற்றவாளி சிறையில் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, குற்றவாளி மோகனுக்கு இடைக்கால ஜாமீன் அளிக்கப்படுகிறது. சமரச மையத்தின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.”
இவ்வாறு நீதிபதி தேவதாஸ் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பெண்ணியலாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
வானதி சீனிவாசன் (பாஜக மாநில துணைத் தலைவர்):
பாலியல் பலாத்காரம் செய்தவர் திருமணம் செய்துகொண்டால் குற்றம் செய்தது சரியாகிவிடாது. இந்த விஷயத்தில் சமுதாயத்தின் பார்வை மாற வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் நீதிபதி வழங்கிய இந்த உத்தரவை வரவேற்கிறேன். தவறு செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ விரும்பினால் சட்டம் தடையாக இருக்கக் கூடாது.
சுதா ராமலிங்கம் (மனித உரிமை ஆர்வலர், உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்):
பாதிக்கப்பட்டது சிறுமி என்பதால், இங்கே சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் என்றால், அவர் விரும்பும் நிலையில் சமரச மையத்தை அணுகுமாறு கூறலாம். இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணே சுயமாக முடிவு செய்யும் வழிமுறை வேண்டும்.
‘இனிமேல் உனக்கு வேறுவழியில்லை, உனக்கு கணவன் கிடைப்பான், குழந்தைக்கு அப்பா கிடைப்பார்’ என்றெல்லாம் மூளைச் சலவை செய்து திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கும் போக்கு நல்லதல்ல.
சாந்தகுமாரி (தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் கள் கூட்டமைப்பு தலைவர்):
இந்த உத்தரவு, யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பிறகு சமரசம் மூலம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற தவறான முன் உதாரணத்தை கொடுத்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது. அப்படியென்றால் போராடிப் பெற்ற உரிமைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தல் போன்ற கடும் குற்றச்செயலில் ஈடுபடுவோரை நஷ்டஈடு, சமரசம் மூலம் விடுவித்தால், கடும் குற்றத்துக்காக தண்டனைகள் வழங்கும் சட்டம் நீர்த்துப்போகும் நிலை ஏற்படும். எனவே, இத்தீர்ப்பை எதிர்க்கிறேன்.
பி.சுகந்தி (ஜனநாயக மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர்):
இவ்வழக்கில் குற்றவாளிக்கு கீழ்கோர்ட் தண்டனை வழங்கியது சரியானதுதான். மைனர் பெண்ணை மோசம் செய்தவனை நீதிமன்றமே விடுதலையாக வழிவகுப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும். பெற்றோர் இல்லாத சிறுமி என்ற காரணத்தால் நீதிபதி இப்படி உத்தரவிட்டிருக்கலாம். இருந்தாலும் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெண் குழந்தையின் மறுவாழ்வை அரசு கவனிக்க வேண்டும்.
இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியை நீதிமன்றமே தப்பிக்கவிட்டால், எதிர்காலத்தில் இந்த உத்தரவைச் சுட்டிக்காட்டி பலரும் தப்பிவிடும் அபாயம் இருக்கிறது. ஆதரவற்ற சிறுமிகளை பலாத்காரம் செய்யலாம், சமரச மையம் போய் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற தவறான எண்ணம் இளைஞர்களுக்கு ஏற்பட்டு விடும். அதனால் இந்த உத்தரவு ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago