தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அத்தியூர் விஜயா பாலியல் பலாத்கார வழக்கு உட்பட 107 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்துள்ளார் விழுப்புரம் வழக்கறிஞர் எம் ரஹ்மான் ஷெரிப்.
அவர் 'தி இந்து'விடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள்:
1976ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறேன். இதை நான் முழுக்க முழுக்க சேவையாகவே செய்துவருகிறேன். முதன் முதலாக எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்தில் ஏ பி பியாக தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் என் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தார்கள். இதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்ற சட்டம்கூட அப்போது எனக்கு தெரியாது. இதனை தொடர்ந்து அரசு வழக்கறிஞராக தேர்வு செய்யப்பட்டேன். பாதிக்கப்பட்டவர்கள் அரசு சார்பில் நான் ஆஜராகவேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதால் தொடர்ந்து அரசின் கூடுதல் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறேன்.
தமிழகத்தின் ஆட்சி மாற்றம் என்னை எந்த விதத்திலும் பாதித்ததில்லை.
செஞ்சி அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, புதுச்சேரி போலீஸார் ஆறுபேர் கடந்த 29-7-1993 அன்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தனர்.
தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்திலேயே நான் அரசு கூடுதல் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன்.
வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையின்போது காவல்துறையினர் எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கவில்லை.
இவ்வழக்கில் கடந்த 11-8-2006 தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ரத்னராஜ் புதுச்சேரி போலீஸார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்தது.
இதேபோல சங்கராபுரம் அருகே வடபொன்பரப்பி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு பெண் கோவாவிற்கு கடத்தப்பட்டார். இவ்வழக்கிற்காக நேரடியாக கோவா தலைநகரம் பனாஜி சென்று அங்குள்ள போலீஸாரின் ஒத்துழைப்போடு வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை சேகரித்தேன்.
அந்த வழக்கு தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் உள்ளது, குறிப்பாக தாழ்த்தப்பட்ட , பழங்குடி இனமக்களுக்காக அதிக அளவிலான வழக்கில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்துள்ளேன். பல வழக்குகளில் போலீஸாரின் ஒத்துழைப்பு இருந்தாலும், சில வழக்குகளில் ஒத்துழைப்பு இருக்காது. அதையும் கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வாதிட்டு வருகிறேன்.
சட்டத்துறை கருத்தரங்கில் பேச ஜப்பான், ஸ்வீடன், ஜெர்மனி, போலந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளேன். வருகின்ற ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதிவரை ஆஸ்திரியா செல்ல இருக்கிறேன். இதனை தொடர்ந்து ஆப்ரிக்காவிற்கு வரசொல்லி அழைப்பு வந்துள்ளது. இரண்டுமாதம் முன்பு சார்க் நாடுகளின் சட்டத்துறை கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ளேன்.
பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் எப்படியாவது என்னை சமாதானப்படுத்த பணத்தாசையில் தொடங்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஆனால் நீதி ஒன்றையே மனதில் கொண்டு தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறேன்.
எனக்கு சாதி ,மதம் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.
உலக நாடுகளில் இருந்து எல்லாம் எனக்கு அழைப்பு வருகிறது ஆனால் இறை தூதர் என்னை இன்னும் மெக்காவிற்கு அழைக்கவே இல்லை. மேலும் அரசு சார்பில் ஆஜராகும் நான் வழக்கிற்காக அரசு அளிக்கும் பீஸை இதுவரை நான் பெற்றதே இல்லை. திருமணமாகாத நான் என் தம்பியுடன் வசித்து வருகிறேன் என்றார்.
அவர் பூனைகளை வளர்ப்பதில் ஆர்வம் உள்ளவர் என்பதை அவர் காலை சுற்றிவந்த நிஞ்ஜா என்ற பூனையுடன் பேசும்போது தெரிந்தது.
வழக்கறிஞர் ஷெரிப் பற்றி பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி முருகப்பன் கூறும்போது, "தமிழகத்தின் மிகப்பெரும் ஆளுமைமிக்க குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரது தாத்தா கவுஸ் ஷெரிப் ஆங்கிலேயர் ராணுவத்தில் மருத்துவராக இருந்தவர். இவரது மாமா காவல் கண்காணிப்பாளர். இவரது அப்பா மஹபூப் ஷெரிப் உதவி ஆட்சியராகவும், ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இவரது தந்தைதான் நெல்லைமாவட்ட மணிமுத்தாறு திட்டப்பணிகளுக்கான ஆய்வு செய்து உருவாக்கியவர்.
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி அதிகமான வழக்குகளை நடத்துகின்ற சிறப்பு வழக்கறிஞர் இவர்தான். 8 வழக்குகளில் நாங்கள் இவரை சிறப்பு வழக்கறஞராக கேட்டிருந்தோம். 6 வழக்குகளில் ஆட்சியரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அரசு நியமித்துள்ள கட்டணத்தை பெறாமல் வழக்குகளை நடத்திவருகிறார்.
படம்: முருகப்பன்
பிரச்சனைகளை பாதிக்கப்பட்டோர் கண்ணோட்டத்திலிருந்து செயல்பட்டு, அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு நீதியினைப் பெற்றுத்தருகின்ற பெரும் செயலை சத்தமில்லாமல், எளிமையாக எவ்விடத்திலும் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் செய்துவருகின்றார்" என்றார்.
மேலும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தை சேர்ந்த பேராசியர் கல்யாணி, "அத்தியூர் விஜயா வழக்கில் ஷெரிப் ஆஜராகாமல் இருந்தால் நிச்சயமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்காது.
படம்: பேராசிரியர் கல்யாணி
மேலும் கேஸ் கட்டை மட்டும் பார்க்காமல் எஸ் ஓ சி ( Scene of crime ) எனப்படும் சம்பவ இடத்தை நேரில் பார்த்து ஆதாரங்களை திரட்டுபவர். அவருக்கு விரைவில் ஒரு பாராட்டுகூட்டம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago