ஜல்லிக்கட்டை வென்றெடுக்காமல் ஓயமாட்டோம் என சபதம்: மதுரையில் 3-வது நாளாக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் - ரயில் மறியல், செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

By என்.சன்னாசி

மதுரையில் மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ‘ஜல்லிக்கட்டை வென்றெடுக்காமல் ஓயமாட்டோம்’ என சபதம் ஏற்றனர். கோவை-நாகர்கோவில் ரயிலை மாணவர்கள், இளைஞர்கள் பாலத்தில் மறித்தனர். அதேபோல் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டமும் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரை தமுக்கம் சந்திப்பில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் 3-வது நாளாக நேற்றும் போராட்டம் நடத்தினர். கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்துள்ளபோதிலும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தமுக்கம் சந்திப்பில் திரண்டனர். கடந்த 2 நாட்களைவிட, நேற்று மாணவர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர்.

அவர்கள் மத்திய, மாநில அரசுகளையும், ‘பீட்டா’ அமைப்பையும் கண்டித்தும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும், ஜல்லிக்கட்டை வென்றெடுக்காமல் ஓயமாட்டோம் என கோஷங்களை எழுப்பி மறியல் செய்தனர். சிலர் குழுக்களாக பிரிந்தும் கோஷமிட்டனர்.

இவர்களுக்கு செல்லூர் உட்பட மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்தனர். வாடிவாசல்களை திறக்கும் வரை வீட்டுவாசல்களை மிதிக்கமாட்டோம் என 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பதாகைகளை ஏந்தி ஊர்வலம் சென்றனர்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகளை தரையில் ஓவியமாக வரைந்து, சுற்றிலும் ரோஜா பூக்களை வைத்து உணர்வை வெளிப்படுத்தினர். செல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் குடங்களில் தண்ணீர், உணவு பொட்டலங்களுடன் பங்கேற்றனர்.

மதுரை மேலவாசல் பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தாரை தப்பட்டையுடன் வந்தனர். அவர்கள் தேவர் சிலை அருகே நின்று, இசையை மீட்டி போராட்டம் செய்தனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

போராட்டத்தில் பங்கேற்ற திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த பிரபு(24), செல்லப்பாண்டியன்(23) ஆகியோர் தமுக்கம் சந்திப்பில் உள்ள நினைவு வளைவின் உச்சி மீது ஏறினர். ஜல்லிக்கட்டுக்காக குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர். அப்போது அங்கிருந்த மாணவர்கள், ‘அமைதி முறையில் போராட்டம் நடத்துகிறோம்’ என அறிவுரை கூறி இருவரையும் இறக்கினர்.

மத்திய அரசு, ‘பீட்டா’ ஆகியோருக்கு எதிராக மாதிரி பாடைகளை கட்டி, அவற்றை சுமந்து சென்றனர். போராட்டக்காரர்களை வெயிலின் கொடுமையில் இருந்து பாதுகாக்க, ஒருவர் பெரிய விசிறியால் வீசி களைப்பாற்றினார்.

போராட்டத் திடல் அருகே, இரு அடுப்புகளை வைத்து மாணவர்கள் சமைத்தனர். தனியார் நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், சக மாணவர்கள் தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகளை விநியோகம் செய்தனர்.

அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் நலன் கருதி காலை முதல் கோரிப்பாளையம் சந்திப்பில் போலீஸார் போக்குவரத்தை சீரமைத்தனர். பிற்பகலில் தேவர் சிலையை மையப்படுத்தி மாணவர்கள் போராட்டம் அமைந்தது. வெளியூர் இளைஞர்களும் அவ்விடத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.

போலீஸார் அவர்களிடம் பேசி தமுக்கம் சந்திப்புக்கு அனுப்பினர். ஒரு கட்டத்தில் கோரிப்பாளையத்தில் பேருந்துகள் செல்ல அனுமதிக்க முடியாது என மறித்தனர். அவர்களிடம் கடலோரக் காவல் படை எஸ்பி. சக்திவேல், உதவி கமிஷனர் திருமலைக்குமார் ஆகியோர் தொடர்ந்து பேசி கலைந்து செல்லுமாறு செய்தனர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போக்குவரத்து போலீஸ் சார்பில், அப்பகுதியில் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் கட்டப்பட்டன. அதில், அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் உள் நோயாளிகள் சிகிச்சை பெறுவதாகவும், ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மதுரையில் 10 இடங்களில் மறியலும், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமும் அதிகரித்துள்ளன.

உசிலம்பட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேனி பிரதான சாலையில் மறியல் செய்தனர். மதுரை காமராஜர் பல்கலை மெயின் கேட் அருகே 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலூர் பேருந்து நிலையத்தில் 10 மாணவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து, பின்பு எச்சரித்து விடுவித்தனர்.

கிடாரிபட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அழகர்கோவில் கோட்டை வாசல் வரை ஊர்வலமாக சென்று, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். மதுரை எஸ்விஎன் கல்லூரி மாணவர்கள் 2-வது நாளாக மறியல் செய்தனர். டி.கல்லுப்பட்டியில் புது மாரியம்மன் கோயில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அக்கல்லூரி முதல்வர் சுவாமிநாதன் உட்பட ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். மதுரை புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் 10 இடங்களில் மறியலும், 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டமும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என போலீஸார் தெரிவித்தனர்.

இயக்குநர் சமுத்திரக்கனி

தமுக்கம் சந்திப்பிற்கு பகல் 12 மணிக்கு திரைப்பட இயக்குநர் சமுத்திரக்கனி வந்தார். அவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

சீமானை தவிர்த்த மாணவர்கள்

நடிகர் சீமான் நேற்று முன்தினம் முதல் மதுரையில் இருந்தாலும், அவரை மாணவர்கள் தவிர்த்ததால் மதுரை அவுட்போஸ்ட் அருகே தனியாக பந்தல் அமைத்து தனது கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கைதிகள் உண்ணாவிரதம்

எல்லீஸ் நகர் மேம்பாலம் அருகே பிஎஸ்என்எல் டவரில் 6 இளைஞர்கள் நேற்று காலை ஏறி ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கினர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை மத்திய சிறையில் 1, 100 கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கோவை- நாகர்கோவில் பயணிகள் ரயிலை நேற்று மதியம் 2.15 மணிக்கு மதுரை செல்லூர் மேம்பாலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மறித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ரயிலை இயக்கவிடவில்லை. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த ரயிலில் மதுரைக்கு வந்தவர்கள் செல்லூரில் இறங்கி ஆட்டோக்களை பிடித்து வீடுகளுக்குச் சென்றனர். விருதுநகர் உட்பட தென்மாவட்ட பகுதிக்கு செல்வோர் நீண்ட நேரமாக ரயிலில் காத்திருக்கும் சூழல் உருவானது. மூன்றாவது நாளாக மதுரையில் நேற்றும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கோரிப்பாளையம் வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. அண்ணா நகர் பகுதியில் இருந்து நகருக்குள் செல்லும் பேருந்து உட்பட வாகனங்கள் கோரிப்பாளையம் வழியாக செல்ல முடியவில்லை. செனாய் நகர் வழியாக திருப்பிவிடப்பட்டது.

தமுக்கம் சந்திப்பில் இருந்து நான்கு திசைகளிலும் தலா 2 கி. மீ. தூரம் வரை மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இப்போராட்டம் இரவிலும் நீடித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்