தமிழக புதிய அமைச்சரவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

தமிழக புதிய அமைச்சரவையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் வழக்கை தொடர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் என்.ராஜாராமன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒரு தண்டனை குற்றவாளியை தலைவராக கொண்ட அதிமுக கட்சி ஆட்சி அமைக்க முடியாது. தண்டனை குற்றவாளியை தலைவராக ஏற்றுக்கொண்டவர் தமிழ்நாட்டின் முதல்வராக ஆக முடியாது. தண்டனை பெற்ற குற்றவாளியிடம் விசுவாசம் கொண்டவரை ஆளுநர் எப்படி ஆட்சி அமைக்க அழைக்க முடியும்?

இதுகுறித்து ஆளுநர் அலுவலகத்துக்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் கிடைப்பதை உறுதிசெய்திடும் வகையில் தேவையான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

மனுதாரர்கள் பொதுநலன் வழக்கு என்ற பெயரில் விளம்பரம் தேடுவது தெளிவாக தெரிகிறது. மனுவுடன் இணைத்திருந்த வாக்குமூலங்கள் நம்பத்தகுந்த விஷயங்கள் இன்றி தெளிவற்றவையாக உள்ளன. அரசியல் அமைப்பு சட்ட விதிமுறை மீறல் குறித்தோ, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்தோ வாக்குமூலங்கள் எதுவும் மனுவில் இல்லை.

அரசியல் அமைப்பு சட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் அல்லது சட்ட மீறல் நடந்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும். அரசின் முடிவுகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய கருவி அல்ல பொது நலன் வழக்கு. ஒரு குற்றவாளியிடம் விசுவாசமிக்க ஒருவர் ஆட்சி அமைக்கக் கூடாது என்பது மனுதாரர்களின் தனிப்பட்ட கருத்து. இதுகுறித்து சட்டத்திலோ, உச்ச நீதிமன்ற தீர்ப்பிலோ எதுவும் சொல்லப்படவில்லை.

எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தொகை 4 வார காலத்திற்குள் காஷ்மீர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE