ஓ.வி. விஜயன் என்றழைக்கப்படும், ஒட்டுபுலக்கல் வேலுக்குட்டி விஜயன் (Ottupulackal Velukkuty Vijayan) சிறந்த மலையாள மொழியின் எழுத்தாளர் மட்டுமின்றி, பத்திரிக்கையாளராகவும், கவிஞராகவும், கேலிச்சித்திர ஓவியராகவும் பிரபலமானவர். 6 நாவல்கள், 9 குறுங்கதைகள், மற்றும் 9 கட்டுரைகள் எழுதியுள்ள இவரின் 'கசாக்கின் இதிகாசம்' என்ற நாவல் மிகச் சிறப்புக்குரியதாக போற்றப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று இந்த எழுத்தாளரின் நினைவாக அவரின் உருவம் பொறித்த 10 கிராம் எடையுள்ள வெள்ளி நாணயம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது பாலக்காடு தபால்தலை மற்றும் நாணய சேகரிப்பாளர் மன்றம். ரூ.700 விலை கொண்ட அந்த நாணயத்தை அபூர்வ பொக்கிஷமாக வாங்கி சென்றுள்ளனர் ஏராளமான இலக்கிய ஆர்வலர்கள், பண்டைய பொருள் சேகரிப்பாளர்கள். இந்த நாணயத்தை கடந்த மாதமே ஓர் இலக்கிய அமைப்பு வெளியிட்டு விட்டது.
அதை நூற்றுக்கணக்கான இலக்கிய ஆர்வலர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். தற்போது அறிமுக நிகழ்ச்சிகள் எங்கெங்கு நடக்கிறதோ அங்கும் இந்த நாணயங்கள் அறிவு வட்டத்தால் வசிகரீக்கப்பட்டு வாங்கப்படுகின்றன என்கிறார்கள் இதை அறிமுகப்படுத்திய பாலக்காடு தபால் தலை மற்றும் நாணய சேகரிப்பு மன்றத்தினர். ஒரு மறைந்த எழுத்தாளரை, கேலிச் சித்திரக்காரரை, கவிஞரை கேரள கலை, இலக்கிய உலகம் எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமோ அப்படியெல்லாம் கொண்டாடுகிறது.
ஆனால் தமிழகத்தில்? நமக்கு ஷாராஜ் என்கிற எழுத்தாளரை எத்தனை பேருக்கு தெரியும்? விஜயன் போல் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட 45 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறை எழுத்தாளர் ஓவியராக, கவிஞராக, சிறுகதையாளராக அறியப்பட்டவர். அவரின் எள்ளல், நையாண்டி, கேலி, கிண்டல் மோஸ்தரிலான அங்கதச் சுவை ததும்பும் சிறுகதைகளையும் நூற்றுக்கணக்கில் வடித்தவர். அவர் சிறுகதைகளும், கோட்டோவியங்களும், கவிதைகளும் சிற்றிதழ்களில் மட்டுமல்ல தமிழகத்தின் முன்னணி இதழ்கள் அத்தனையிலும் வெளி வந்திருக்கிறது.
'வடக்கந்தரையில் அம்மாவின் பரம்பரை வீடு!', 'வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது!' ஆகிய சிறுகதை தொகுப்புகள், 'கெளதமபுத்தனின் மதுபானக்கடை!' என்ற கவிதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டவை. எப்போதும் சமூகம் குறித்தும், தமிழ் இலக்கியத்தில், ஓவியக்கலையில் புது மணம் கமிழ்வதையே சிந்தித்தவர். அப்படிப்பட்ட கலை, இலக்கியமே மூச்சாகி நிற்கும் தமிழ் எழுத்தாளர், ஓவியர் இப்போது அரசு ஆஸ்பத்திரியில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதுதான் அதிர்ச்சி செய்தி.
நண்பரின் இரு சக்கர வாகனத்தில் பின் சீட்டில் அமர்ந்து வந்த அவரை எதிர் வந்த கார்காரர் தூக்கி வீசியதில் 2 நாட்கள் சுயநினைவற்று இருந்திருக்கிறார். வலதுகையும், வலது காலிலும் பலமான எலும்பு முறிவு. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான வசதியின்றி அரசு மருத்துவமனையின் வாசம். திருமணமாகாத அவருக்கு உறுதுணையாக சகோதரிகளே உடன் இருக்க, அடுத்தடுத்த அறுவை சிகிச்சைகள். உடலில் ரத்தம் இருக்கிறதா? ஊன் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
இன்னமும் எத்தனை நாள் ஆஸ்பத்திரி வாசம்; அதை சமாளிக்க பொருளாதார வசதி இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆஸ்பத்திரிக்கு வந்து 21 நாட்கள் ஆகி விட்டது. பாலாவின் திரைப்படத்தில் வரும் சேது போல் இருக்கிறார். அவ்வப்போது எழுத்துலக நண்பர்கள் வந்து பார்க்கிறார்கள். கவிஞர்கள் செங்கவின், அம்சப்பிரியா உள்ளிட்ட நண்பர்கள் நேற்று பார்த்த வேளை. அவருக்கு உதவியாக ரொம்பவும் சிறுதொகையை கொடுக்கிறார்கள். சுத்தமாக மறுதலிக்கிறார்.
'என்னை இந்த அரசு ஆஸ்பத்திரி மருத்துவர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்கிறார்கள். சகோதரிகள் உடன் இருக்கிறார்கள். நீங்கள் இப்படி வந்து பார்ப்பதும் ஆறுதல் கூறுவதுமே போதும்!' என்கிறார் நெகிழ்ச்சியுடன். 'நீண்ட நாட்களாக ஒரு நாவல் எழுத எண்ணம். அதை இங்கே வலியாக பதிவு செய்ய உள்ளேன். அது இங்கே சுற்றியிருப்பவர்களின் உடல்வலி; மனவலி; அதையும் மீறின ஆன்ம வலியாக!' என 50க்கும் மேற்பட்ட படுக்கைகளில் கிடக்கும் நோயாளிகளை காட்டி பேசுகிறார். மனம் நெகிழ்கிறது.
அவர் சமய சார்பாளர் அல்ல என்றாலும் யாரோ ஒரு நண்பர் கொடுத்திந்த அவர் கட்டியிருந்த காவி வேட்டி அப்படியொரு தோற்றத்தை உருவாக்கியிருந்தது. அதைப்பார்த்து, 'இந்த தோற்றத்தில் மோடி கண்டுகொள்ளாத இந்துத்துவா எழுத்தாளர்!' என்று எழுதினால் போதும் ஷாராஜ். அநேகமாக உங்களைப் பார்க்க பிரதமரே ஓடிவந்தாலும் வந்துவிடுவார்!' என்று கிண்டல் ததும்ப சொல்ல அதை ரசித்து சிரித்தார் ஷாராஜின் பார்வையில் வேதனை நிரம்பியிருந்தது.
கேரளத்து ஓ.வி.விஜயன் போல் யாரும் வெள்ளி உருவ நாணயம் தமிழின் கலை - இலக்கியவாதிக்கு இங்கே யாரும் பொறிக்க வேண்டாம். அவருக்கு அரசு ஆஸ்பத்திரி சிகிச்சை என்பது கூட பொத்தாம் பொதுவாக இருக்கும் நேரத்தில் அவனை வந்து பார்த்து ஆறுதல் கூறக்கூட அவனின் இலக்கிய நண்பர்கள் தவிர்த்து சமூகத்தில் ஆட்கள் இல்லையே!' என்பதுதான் விடைபெறும் கணத்தில் மிகுந்த வேதனையாக தொக்கி நின்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago