உசிலம்பட்டியில் சிசுக்கொலைகளை தடுப்பதாக கூறி திருச்சி தனியார் காப்பகத்துக்கு பெண் குழந்தைகள் கடத்தல்: தொடரும் சமூகநலத் துறை மர்மங்கள்.. சிபிஐ விசாரணை நடத்தப்படுமா?

By குள.சண்முகசுந்தரம்

உசிலம்பட்டி பகுதியில் சிசுக் கொலைகளை தடுப்பதாகக் கூறிக்கொண்டு, திருச்சியில் உள்ள ‘மோசே மினிஸ்ட்ரீஸ்’ தனியார் காப்பகத்துக்கு ஏராளமான பெண் குழந்தைகள் கடத்தப்பட்டதாக எஸ்ஐஆர்டி தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

சமூகநலத் துறை அமைச்சர் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ள நிலையில், அத்துறையில் பல காலமாக நடந்துவரும் பல்வேறு முறை கேடுகள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில், குழந்தைகள் காப்பகங்களை முறைப்படுத்துவது தொடர்பாக சமூக ஆர்வலர் ‘பாடம்’ நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-12ல் பொதுநல வழக்குகள் தொடர்ந்தார். இந்த விஷயத்தில் மதுரையை சேர்ந்த எஸ்ஐஆர்டி தொண்டு நிறுவனம் அவருக்கு உசிலம்பட்டி பகுதியில் கள உதவிகளை செய்து கொடுத்தது. உசிலம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட 40 கிராமங்களில் இருந்து 1997 முதல் 2001 வரை 69 பெண் குழந்தைகள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் செயல்படும் ‘மோசே மினிஸ்ட்ரீஸ்’ காப்பகத்துக்கு கடத்தப்பட்ட விவகாரம் அப்போதுதான் தெரியவந்தது.

இன்றளவும் கருக்கொலை, சிசுக்கொலைகள் நடக்கும் உசிலம்பட்டி பகுதியை தங்களுக்கான கடத்தல் கேந்திரமாக திருச்சி காப்பகம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. சில அரசு மருத்துவமனை செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, விஷயம் வெளியில் தெரியாத அளவுக்கு காரியம் சாதித்துள்ளது.

சமூகநலத் துறையில் பதிவு பெறாமல் நடத்தப்பட்ட ‘மோசே மினிஸ்ட்ரீஸ்’ காப்பகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்த அத்துமீறல்கள் குறித்து ‘பாடம்’ நாராயணன் வழக்கு தொடர்ந்த பிறகே, திருச்சி சமூகநலத் துறை அலுவலர், அந்த காப்பகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு நடந்த சம்பவங்கள் குறித்து எஸ்ஐஆர்டி ஒருங்கிணைப்பாளர் தெய்வேந்திரன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சில செவிலியர்கள் ஆயிரத்துக் கும் ரெண்டாயிரத்துக்கும் ஆசைப்பட்டு, உசிலம்பட்டி பகுதியில் இருந்து பெண் குழந்தைகளை தூக்கிக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து உசிலை தாலுகாவில் விசாரணை நடத்தி, திருச்சி காப்பகத்தில் இருக்கும் 69 குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடித்தோம். அதில் 20 பேர் தங்கள் குழந்தைகளை தாங்களே வளர்க்க சம்மதித்தனர். இதனால், அவர்கள் பெயரில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தோம்.

இதையடுத்து, 69 குழந்தைகளின் பெற்றோருக்கும் மரபணு சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 44 பெற்றோரை ஆஜர்படுத்தினோம். முதல்கட்டமாக 34 பெற்றோருக்கு மரபணு சோதனை செய்யப்பட்டது. 2 பேர் தவிர, எஞ்சிய 32 பெற்றோருக்கு மரபணு சோதனை பொருந்தியது. மற்ற 10 பேரின் சோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றத் துக்கு வந்து திருச்சி காப்பகம் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ததுமே அதன் உரிமையாளர் கிடியோன் ஜேக்கப், ஜெர்மனிக்கு தப்பிவிட்டார். காப்பகத்தை சமூகநலத் துறையின் கட்டுப் பாட்டில் ஒப்படைத்த நீதிமன்றம், அங்குள்ள பெண் குழந்தைகளைப் பராமரிக்க காப்பக உரிமையாளர் தரப்பில் இருந்து ரூ.12 லட்சம் வழங்க உத்தரவிட்டது. இப்போது, சமூகநலத் துறையின் கட்டுப்பாட்டில் காப்பகம் இருந்தாலும், கிடியோன் ஜேக்கப்பின் ஆட்களும் அங்குதான் உள்ளனர்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகள் தற்போது 18 வயதைக் கடந்துவிட்டதால், அவர்கள் விரும்புகிற இடத்தில் இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எங்களால் அடை யாளம் காட்டப்பட்ட உசிலம்பட்டி பகுதி பெற்றோரில் பலரும் தங்களது குழந்தைகளை ஏற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால், ‘நாங்கள் காப்பகத்தில்தான் இருப்போம்’ என அவர்களை சொல்ல வைத்திருக்கின்றனர் கிடியோனின் ஆட்கள். ‘காப்பகத்தில் எங்களது குழந்தைகள் நல்ல நிலையில்தான் இருக்கின்றனர்’ என்று சுமார் 20 பெற்றோரிடம் எழுதி வாங்கி அதையே பிரமாணப் பத்திரமாக நீதிமன்றத்திலும் கிடியோன் தரப்பு தாக்கல் செய்துள்ளது.

‘பெற்றோர் வெறுக்கும் குழந்தை களைக் காப்பாற்றுகிறோம்’ என்று சொல்லி உசிலம்பட்டி பகுதி பெண் குழந்தைகளை திருச்சிக்கு கடத்தியவர்கள், அவர்களை வைத்து பல வழிகளிலும் பணம் சம்பாதித்துள்ளனர். ஜெர்மனிக்கு அழைத்துச் சென்று நிதி திரட்டியுள்ளனர். ‘தண்டனை’ என்ற பெயரில் ரொட்டி கம்பெனியிலும், விழுப்புரத்தில் உள்ள பண்ணையிலும் வேலை செய்யச் செய்துள்ளனர். காப்பகத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இவை அனைத்தையும் சமூகநலத் துறை கண்டுகொள்ள வில்லை என்றால், பின்னணியில் என்னதான் நடக்கிறது? வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என்பது ‘பாடம்’ நாராயணனின் கோரிக்கை. சிபிஐ விசாரித்தால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரலாம் என்பதால் அதை முறியடிப்பதற்கான அத்தனை வேலைகளையும் செய்கிறார்கள். இதற்கு சமூகநலத் துறையும் உடந்தையாக உள்ளது.

இவ்வாறு தெய்வேந்திரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்