துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி பலி: தலைவர்கள் கண்டனம்

By செய்திப்பிரிவு

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கிச் சூட்டில் என்.எல்.சி. தொழிலாளி உயிரிழந்த சம்பவத்துக்கு வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ கண்டனம்

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இரண்டாம் சுரங்கத்திற்குச் சென்ற அஜீஸ் நகரைச் சேர்ந்த ஒப்பந்தத் தொழிலாளி 28 வயது இளைஞர் ராஜா என்பவரை இரண்டாம் சுரங்க நுழைவாயிலில் காவல் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் தனது துப்பாக்கியால் மூன்று ரவுண்டு சுட்டுள்ளார். இதனால், அந்தத் தொழிலாளி தலை சிதறி கோரமான முறையில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

என்.எல்.சி. சுரங்கம், அனல் மின் நிலையம் மற்றும் தொழிலகங்கள் பாதுகாப்புக்காக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை நியமனம் செய்யப்பட்டதில் இருந்து, என்.எல்.சி. தொழிலாளர்களுடன் மோதல் சம்பவங்களும், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் இத்தகைய போக்கு வன்மையான கண்டனத்துக்கு உரியது. இனி இதுபோன்ற கோர சம்பவங்கள் நடக்காமல், தொழிலாளர்களின் பாதுகாப்பை என்.எல்.சி. நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளி ராஜா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மனைவி மற்றும் இரு குழந்தைகளை கண்ணீர்க் கடலில் மூழ்கடித்துவிட்டு உயிர் பலியான ராஜா குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

தா.பாண்டியன் வலியுறுத்தல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில், ஒப்பந்த தொழிலாளியும், ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தைச் சார்ந்த தொழிலாளியுமான ராஜா மீது தொழிலகப் பாதுகாப்பு படையை சார்ந்த ராணுவத்தினர் சுட்டதில் மரணமடைந்துவிட்டார்.

சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத் தலைவரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலுர் மாவட்டச் செயலாளருமான எம்.சேகர் தொழிலகப் பாதுகாப்பு படையினர் தாக்கியதில் படுகாயம் அடைந்துள்ளார். இதனைப்போன்றே தொழிலாளர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழக வரலாற்றில் இதுவரை, நடந்திராத இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்வதுடன், தடியடி நடத்தியவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், "மனிதத் தன்மையற்ற முறையில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தொழிலாளி தலையில் சுட்டுப் படுகொலை செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரரை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தமிழகக் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். படுகொலை செய்யப்பட்ட ராஜ்குமார் அங்கு ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். அவர் முதலாவது சுரங்கத்தில் தொழிலாளியாக உள்ளார். தனது நண்பரைப் பார்ப்பதற்காக இரண்டாவது சுரங்க நுழைவாயில் அருகே காத்திருந்தபோதுதான் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நெய்வேலி தொழிலாளர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிகிறது. எனவே அவர்களை என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து அகற்ற வேண்டும். நிறுவனத்தின் பாதுகாப்புக்கென அந்த நிறுவனமே ஒரு தனி பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம்.

படுகொலை செய்யப்பட்ட ராஜ்குமாருக்கு அமலா லூசியாபால் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதில் ஒரு குழந்தை பிறந்து எட்டு மாதமே ஆகிறது. ராஜ்குமாரை இழந்து தவிக்கும் அந்தக் குடும்பத்திற்கு என்.எல்.சி. நிர்வாகம் 20 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ராஜ்குமாரின் மனைவிக்கு அந்நிறுவனத்திலேயே வேலை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்