ஏற்காடு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் உள்பட 6 பேர் மனு தாக்கல்
ஏற்காடு இடைத்தேர்தல் வரும் டிச. 4-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. வரும் 16-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். வரும் 18-ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். 20-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது.
முதல் நாளில் தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்பட 6 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். குடியரசுத் தலைவர் தேர்தல் முதல் இறுதியாக கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் வரை மனு தாக்கல் செய்த தேர்தல் மன்னன் பத்மராஜன் ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ஏற்காடு தொகுதி பழங்குடியி னருக்கு ஒதுக்கப்பட்ட (தனி) தொகுதி என்றாலும், அதிக முறை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திடும் சாதனை புரிந்துவரும் பத்மராஜன், நேற்று பகல் 11.01 மணிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதியிடம், வேட்பு மனு தாக்கல் செய்தார். ஏற்காடு இடைத்தேர்தலுடன் சேர்த்து, இவர் 156-வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்தபடியாக 11.20 மணிக்கு தி.மு.க. வேட்பாளர் மாறன் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக, அயோத்தியாப்பட்டணம் தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன் மனு தாக்கல் செய்தார். மேலும், வீர வன்னியர் மக்கள் இயக்கத்தின் சார்பில் ராமச்சந்திரனும், திராவிட அம்பேத்கர் மக்கள் கட்சி சார்பில் வெங்கடாசலம், சுயேச்சை வேட்பாளர் இலியாஸ் உள்பட ஆறு பேர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.